நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 22 மார்ச், 2009

உலகு தழுவிய தமிழ்த்தொடர்...



அயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...

    தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும். நூல்கள், உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல், இணையக் குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.

    உள்ளூரில் இருப்பவர்களைப் பற்றியே நம்மவர்கள் செய்திகளைப் பதிவாக்காமல் இருக்கும் பொழுது அயலகத்தில் தமிழ்ப்பணிபுரிந்த-புரியும் அறிஞர்கள் பற்றி எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது அன்று. என் முயற்சி கடலில் இறங்கிக் கையால் மீன்பிடித்ததற்குச் சமமாகும். இத்தகு வலிவும் உரமும் அமைந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு.

    திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஐந்தாண்டுகள் படித்து முடித்த கையுடன் புதுவைப் பல்கலைக் கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக(1992-93) இணைந்தேன். என் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அறிவரங்கில் உரையாடும்பொழுதும் அயல்நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் பற்றி அடிக்கடி கூறுவார்கள். ஒவ்வொரு நாளும் அயல்நாடுகள் பற்றிப் பேசாமல் அவர் வகுப்பு இருக்காது. அப்பொழுதே அயலகத் தமிழ்ப்பணிகளை அறியும் வேட்கை எழுந்தது.

    மலேசியா சார்ந்த குறிஞ்சிக்குமரனார் (பாவாணர் தமிழ் மன்றம்) என்னுடன் மடல்தொடர்பு கொண்டார். பாரிசில் வாழும் என் நண்பர் இரகுநாத்மனே அவர்கள்(நாட்டியக்கலைஞர், தாசிகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) எனக்குப் பாரிசில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிமுகம் செய்து வந்தார்.

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது கனடாவில் வாழும் ஈழத்துப்பூராடனார் நூல் வழி எனக்கு அறிமுகமானார். பதினைந்தாண்டுகளாக அவரைப் பார்க்காமலே மடல்வழி நெருங்கிப் பழகி வருகிறேன். மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறனும் எனக்கு அறிமுகமானார்.

    சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது நாளும் ஒரு வெளிநாட்டு அறிஞருடன் பழகும் சூழலை முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் அமைத்துத் தந்தார். முத்துநெடுமாறன், அலெக்சாண்டர் துபியான்சுகி. பேராசிரியர் மௌனகுரு, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு, பாலசுகுமார், அம்மன்கிளி முருகதாசு உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. இவர்களுடன் பழகும்பொழுது தமிழ் வழங்கும் இடம் வடவேங்கட மலை தென்குமரி வரை இல்லை. கடல் கடந்தது என்று உணர்ந்தேன். அயலகத்தமிழ் என்று ஒரு கட்டுரை அங்கு (உ.த.நி) நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் படித்தேன். பலருக்கும் புதுமையாக இருந்தது. பேராசிரியர் இரா. இளவரசு அமர்ந்து ஆற்றுப்படுத்தினார்.

    அயலகத்தமிழ் என்று ஓர் இதழ் தொடங்கி அயலகத் தமிழ்ச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்க முயன்றேன். அதன்பொருட்டுத் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டேன். அந்த முயற்சி அப்பொழுது கைகூடவில்லை. உள்ளத்தில் அதற்கான சுடர் அணையாமல் இருந்துகொண்டே இருந்தது.

    ஆசியவியல் நிறுவனத்தில் நடந்த கந்த முருகன் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பும் அமைந்தது. பாரதிதாசன் பலைக்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்கள் பற்றியும் அவரிடம் இசைகற்ற மேனாட்டார் பற்றியும் அறிந்தேன்.

    கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக யான் பணிபுரிந்த பொழுது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் அங்கு வந்தனர். ஒரு கிழமை தங்கி அவர்களுடன் உரையாடும் பேறு பெற்றேன். முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், சிவகுருநாதப் பிள்ளை உள்ளிட்டவர்களைக் கண்டு பழகினேன். மலேசியா சென்று பேராசிரியர் மன்னர்மன்னன், பரமசிவம் (புத்ரா பல்கலைக் கழகம்), மாரியப்பன் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுடன் பழகினேன்.

    உலகம் முழுவதும் தமிழ்க்கல்வி எந்த நிலையில் உள்ளது, கற்பிக்கப்படுகிறது என்று உணர்ந்தேன். தமிழ் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அறிந்தேன். அயலகத் தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறியாமல் உள்ளோமே என்ற கவலை எனக்குள் இருந்தது.

    பொதுவாக வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு. அந்த வகையில் இணையத்தில் தமிழறிஞர்கள், தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவு செய்து வருவதை உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள். அந்த வகையில் எனக்கு அறிமுகமானவர்களையும், நூல்களில் படித்தவர்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து, சிறு கட்டுரைகளாக எழுத நினைத்தேன். அதனைக் களஞ்சியத்தில் எழுதினால் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் பயன்படும் என நினைத்த வேளையில் களஞ்சியத்தில் எழுதத் தமிழ் ஓசை நாளிதழ் ஆசிரியர் வாய்ப்பு வழங்கினார். களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர் யாணன் தந்த ஊக்கமும் தொடர் 25 கிழமைகள் தொய்வின்றி வெளிவர உதவியது.

    தொடர் எழுதத் தொடங்கிய பிறகுதான் அதன் சிக்கல் எனக்குப் புரியத் தொடங்கியது. பெரும்பாலும் தொடரில் இடம்பெற்றுள்ளவர்கள் உயிருடன் வாழ்பவர்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் சரியாக, நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிலரிடம் இருந்து செய்திகள் உடனுக்குடன் கிடைத்தன. சிலரிடம் இருந்து செய்திகள் பெறுவது இயலாமல் இருந்தது. சிலரின் படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சிலரின் படம் இணையத்தில் இருந்து எடுக்கவேண்டியிருந்தது. சில அறிஞர்களின் குடும்பத்தினர் அன்புடன் உதவினர்.

    பேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் உடல்தளர்ந்து பாரிசில் படுக்கையில் இருப்பதாக அறிந்தேன்.அவர் மின்னஞ்சல் முகவரி இல்லாதபொழுது அவர் மகனாரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவருடன் தொடர்புகொண்டேன். உடன் விடை தந்தார். ஒரு மாதத்தில் தந்தையார் பற்றி செய்திகள் பெற்று அனுப்புவதாகத் தெரிவித்தார். அவர் வேறு நாட்டில் இருந்ததே காரணம். அந்த வேளையில் செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் வழியாகவும் சில செய்திகள் பெற்றேன்.

    கமில் சுவலபில் அவர்களின் துணைவியார் என் முயற்சியைப் போற்றி ஒரு மடல் எழுதியமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். என் நண்பர் இரகுநாத் மனே அவர்கள் பாரிசிலிருந்தபடி கமில் அவர்களின் துணைவியாரிடம் பேசியும் செய்திகள் பெறமுடியாமல் போனது. இருந்த செய்திகள் கொண்டு சிலநாளில் கட்டுரையும் வந்தது. அந்தோ! இந்நிலையில் அவர் சனவரி 17 இல் இயற்கை எய்தினார். இந்தச் செய்தியும் களஞ்சியம் வழி முதற்கண் உலகினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

    பேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது அ.முத்துலிங்கம் அவர்கள் வழியாகப் பேராசிரியரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதி அவர்களின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவர்கள் வழியாகப் பல செய்திகள் பெற்றேன். தமிழை உலக அளவில் அறிமுகப்படுத்திய அ.கி. இராமானுசன் அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது கொரியா நா.கண்ணன் அவர்கள் வழியாக இராமானுசத்தின் அண்ணன் பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. இதனால் அ.கி.இராமானுசன் பற்றிய பல புதிய செய்திகள் என் கட்டுரையில் வெளிவந்துள்ளன. கனடாவில் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்களும் பல வகையில் துணைநின்றுள்ளார்.

    இவ்வாறு பலரும் அன்புடன் வழங்கிய தகவல்கள் உதவியால்தான் இத்தொடரைச் சிறப்பாக உருவாக்க முடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் ஒவ்வொரு தொடர் உருவாகும்பொழுதும் பயனுடைய செய்திகளை உரையாடலில் வழங்குவார்கள். கட்டுரை வெளிவந்ததும் பாராட்டு நல்கி ஊக்கப்படுத்துவார்கள். அப் பெருமகனாருக்கு என்றும் நன்றியுடையேன்.

    தமிழ் ஓசை களஞ்சியத்தில் வெளிவந்த அன்று காலையில் இணையத்தில் என் பக்கத்திலும், மின்தமிழ் இதழிலும் வெளியிடுவேன். அவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர். சிலர் இதனைத் தங்கள் இதழ்களில் மறுபதிப்புச் செய்து உலக அளவில் பரப்பினர். தட்சு தமிழ் இணைய இதழில் அதன் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களும் உதவி ஆசிரியர் அறிவழகன் அவர்களும் பல கட்டுரைகளை மறுபதிப்பு செய்ததுடன் என்னுடைய பிற கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.

    அமெரிக்கன் ஆன்லைன்( AOL) என்ற இணைய இதழிலும் இத்தொடரின் கட்டுரைகள் மறுவெளியீடு கண்டன. இதனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பலரின் பார்வைக்கு இக்கட்டுரைகள் உட்பட்டதுடன் இணையத்தில் பதிவாகியுள்ளதால் யாரும் எந்த நொடியும் இக்கட்டுரைகளைப் பார்வையிடலாம். பாவாணர், பெருஞ்சித்திரனார் விரும்பிய தமிழ் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு வெளிவரும் தமிழ் ஓசையில் அயலகத் தமிழறிஞர்கள் தொடர் வெளிவந்தமையை வாழ்க்கையில் பெற்ற பெறற்கரும் பேறாக எண்ணுகிறேன். தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.

நனி நன்றி:

தமிழ் ஓசை,களஞ்சியம்,22.03.2009

3 கருத்துகள்:

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் ஐயா உங்கள் பின்னுரையாக அமைந்த முன்னுரையைக் கண்டேன்.25 வாரங்கள் சென்றதே தெரியவில்லை.உங்கள் தொடர் மூலமாகப் பல அயலகத் தமிழறிஞர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து.இன்னும் பல அறிஞர்கள் இருக்கின்றனர் அவர்களையும் உங்கள் இணையப் பக்கத்தில் ஏற்றினால் ,அப் பதிவுகள் எல்லாம் வரலாற்று ஆவணமாகத் திகழும்.
நன்றி.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

வணக்கம் ஐயா.

தமிழறிஞர்கள் பற்றி தாங்கள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் காலத்தால் தமிழர்க்குக் கிடைத்த வரலாற்று ஆவணங்கள்.

காலவெளியில் நிலைக்கவேண்டிய - நினைக்கவேண்டிய அறிஞர் பெருமக்களைத் தங்களின் சொல்வெட்டுகளால் கல்வெட்டாகச் செதுக்கியுள்ளீர்கள்.

தங்களின் அரும்பணி தமிழ்கூறு நல்லுகலம் போற்றவேண்டிய அருமைப்பணி - பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய பெருமைப்பணி.

இந்தச் செயற்கறிய பணியைச் செவ்வனே செய்துமுடிக்க தாங்கள் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் - சிக்கலை எதிர்நோக்கியிருப்பீர்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.. நெஞ்சார்ந்த நன்றிகளை நேசக்கரங்குவித்து தெரிவிக்கின்றேன்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் என்ற
நமது வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழியைத் தங்கள் வழியாக நிறுவியுள்ள 'தமிழ் ஓசை' நாளிகைக்கும் இவ்வேளையில் நன்றிசொல்ல வேண்டியது கட்டாயமானது.

இறுதியாக, இந்தத் தொடரைத் தாங்கள் கண்டிப்பாகப் புத்தகமாக்க வேண்டும் என்ற வேண்டுகையை முன்வைக்கின்றேன். மறுக்காமல் - தவறாமல் தாங்கள் இந்தத் தமிழ்க் காப்புப் பணியை - தமிழறிஞர் காப்புப் பணியைச் செய்தே ஆக வேண்டும் ஐயா.

மலேசியத் தமிழர்கள் சார்பில் தங்களுக்கு மனங்கனிந்த நனி நன்றியைச் சொல்லி அமைகின்றேன்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

வணக்கம் ஐயா
மடலுக்கு நன்றி
தாங்கள் விரும்பியதுபோல் நூலாக்குவோம்.
தங்கள் தமிழன்புக்கு நன்றி.
மு.இளங்கோவன்