நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 27 மார்ச், 2018

புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டுத் திருவுருவப் படத்துக்கு மலர் வணக்கம்!


தியாகி அப்துல் மஜீது ஐயா அகவணக்கம் செலுத்துதல் 


     இலங்கையில் பிறந்தவர் விபுலாநந்த அடிகளார். இவர் யாழ்நூல் என்ற தமிழ் ஆராய்ச்சி நூலை எழுதி, உலகப் புகழ்பெற்றவர். இலங்கையில் 27 பள்ளிக்கூடங்களை  நிறுவி, ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வழி செய்தவர். இவரின் பிறந்த நாள் மார்ச்சு 27 ஆகும். விபுலாநந்த அடிகளாரின் பிறந்தநாள் புதுச்சேரியில் உள்ள செகா கலைக்கூடத்தில் இன்று(27.03.2018) கொண்டாடப்பட்டது.

     பாவலர்  தியாகி அப்துல் மஜீது அவர்கள் விபுலாநந்த அடிகளாரின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி, வணக்கம் செய்தார். முனைவர் மு.இளங்கோவன் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் எடுத்த தம் அனுபவங்களையும், விபுலாநந்தரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் விபுலாநந்த அடிகளாரின் தமிழ்ப்பணிகளையும் ஆராய்ச்சிப்பணிகளையும், சமூகப் பணிகளையும் நினைவுகூர்ந்தார்.

     தூ. சடகோபன், செ. திருவாசகம், சீனு. தமிழ்நெஞ்சன், சீனு. தமிழ்மணி, வில்லியனூர் வெங்கடேசன், கவிஞர் பைரவி, புலவர் கலியபெருமாள், அ. சந்திரகேசகரன், பெ. வளையாபதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முனைவர் மு.இளங்கோவன் அகவணக்கம் செலுத்துதல், அருகில் புதுவைத் தமிழறிஞர்கள்
பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார் அகவணக்கம் செலுத்துதல்
திரு. செ. திருவாசகம் அகவணக்கம் செலுத்துதல்

ஞாயிறு, 25 மார்ச், 2018

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொல்காப்பியக் கல்வியின் நிலை!



    1885 இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்தபொழுது பதிப்புரையில் சி.வை. தாமோதரம் பிள்ளை இவ்வாறு எழுதுகிறார்:

  "சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருஷத்தின் (1825-இல்) முன்னிருந்த வரதப்ப முதலியாரின்பின் எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரையுதாரணங்களோடு பாடங்கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியங் கற்றவர்கள் அருமையென்பது அவர் தந்தையார் வேங்கடாசல முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையரான போது பிறையூரிற் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறாரென்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிக திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருஷமிருந்து பாடங்கேட்டு வந்தமையானும், வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவரென்பதனானும், அது காரணமாக அவருக்குத் தொல்காப்பிய வரதப்ப முதலியாரென்று பெயர் வந்தமையானும் பின்பு அவர் காலத்திலிருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கண சமுசயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையானும் நிச்சயிக்கலாம்". சுமார் கி.பி. 1825 இல் தொல்காப்பியக் கல்வியின் நிலை இது.

நன்றி: 
ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியப் பதிப்புகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு. 28.04.1992, பக்கம் 9,10 (மேற்கோள்)