
இணையத்தில் குழுச்சண்டைகள், இனச்சண்டைகள், சாதிச்சண்டைகள், அவதூறு பரப்பல், துதிபாடல் என்று பலவகை செயல்பாடுகள் ஆர்ப்பாட்டமாக நடந்துவருவதை அறிவோம். அங்கொன்றும் இங்கொன்றும் தமிழுக்கு ஆக்கமான வேலைகள் அமைதியாக நடைபெறுவதனைக் காணும்பொழுது மகிழ்ச்சி தோன்றுகின்றது.
பிறதுறைகளில் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தாய்மொழியாம் தமிழுக்கு ஆக்கமான வேலைகளைச் செய்யும்பொழுது அவர்களைத் தொழுது வணங்கவேண்டியுள்ளது. தொழில்நுட்பத்தைக் காசுபார்க்கும் கலையாகப் பலர் செய்கின்றனர். சிலர் தொண்டு உணர்வுடன் செய்கின்றனர். தொண்டு உணர்வுடன் தொழில்நுட்ப அறிவைத் தமிழுக்கு வழங்கும் தொழில்நுட்ப வல்லுநர்களை நான் காணும்பொழுதெல்லாம் பாராட்டத் தயங்கியதே இல்லை. அவ்வகையில் மதுரையில் பிறந்து புனேயில் பணிபுரிந்துவரும் நண்பர் நீச்சல்காரன் அவர்களின் நாவி என்னும் மொன்பொருளைக் கண்டு மகிழும் ஒரு வாய்ப்பு அண்மையில் அமைந்தது.
நாவி என்பது தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்தும் இலவச மென்பொருளாகும். இதில் அடிப்படையான சந்திப்பிழைகளைத் திருத்தும் வசதி உள்ளது. பிறமொழிச்சொற்கள், உயர்திணைப்பெயர்கள் இவற்றைத் திருத்த இந்த மென்பொருள் உதவாது என்று அவரே குறிப்பிட்டுள்ளார். தமிழ் இணையக்கல்விக்கழக நூலகத்தில் இட்பெற்றுள்ள நூல்கள், கவிக்கோ ஞானச்செல்வன் நூல், புகழ்பெற்ற பதிவர்களின் எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.
2011 இல் தொடங்கிய முயற்சி இடையில் தொய்வுற்றுள்ளது. மீண்டும் திருத்தியைச் சீர்செய்து இப்பொழுது பொதுவெளியில் வைத்துள்ளார். தமிழறிஞர்கள், இலக்கண ஆர்வலர்கள் பிழை திருத்தம் சார்ந்து நீச்சல்காரனுக்கு உதவினால் தமிழுக்கு ஆக்கம் நல்கும் இலவச மென்பொருளாக உலகத் தமிழர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.
நாவி மென்பொருளை மட்டுமன்றி ஆடுபுலியாட்டம், கோலங்கள் குறித்த நிரலையும் நீச்சல்காரன் தந்துள்ளார். 25 அகவை இளைஞராகத் தெரியவரும் நீச்சல்காரன் தன் முகத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. அவரின் பணிவும், அடக்கமும் எனக்கு மகிழ்ச்சி தந்தது. எதிர்நீச்சலிட்டுத் தமிழுக்கு உழைக்கும் நீச்சல்காரனைத் தமிழன்னை வாழ்த்துவாளாக!.
நீச்சல்காரனின் பணிகளைப் பார்வையிட…
நாவியில் பிழைகளைச் சரிபார்க்க…