நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஆராய்ச்சி வித்தகர் கு.திருமேனி அவர்கள்


பேராசிரியர் கு.திருமேனி அவர்கள்

 பேராசிரியர் கு.திருமேனி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி வட்டம் தென்னிலக்குடி என்னும் ஊரில் வாழ்ந்த குமாரசாமி என்னும் பெரியார்க்கு மகனாக வாய்த்தவர்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர், பி.ஓ.எல் பட்டங்களையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தையும், கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர்.

 நாடகச்சிலம்பு, கோவலன், பூம்புகார்ப் பொற்றொடி, தென்றமிழ்ப்பாவை, கம்பருக்குக் கதைகொடுத்தவர் வான்மீகரா?, கோவூர்க்கிழார், மனோன்மணியத் திறனாய்வு, வாலி ஒரு திறனாய்வு, சிலம்பணி மகளிர், தூய சிந்தையாள் (கைகேயி) ஆகிய ஆய்வுநூல்களை எழுதியவர். இவரின் நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இருந்த பெருமைக்குரியன.

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

 இரண்டாவது உலகத் தமிழ்மாநாட்டிலும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்திலும் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.

 ஆராய்ச்சிச்செல்வர், கம்பராமாயண வித்தகர் போன்ற பட்டங்களைப் பெற்றவர். திருச்சிராப்பள்ளி செண்பகத் தமிழரங்கில் இவர் ஆற்றிய பேருரைகள் ஒலிப்பதிவில் பாதுகாக்கப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வகையில் புலமை பெற்றவர் என்று அறிஞர் உலகு இவரின் புலமையைப் போற்றும். தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லார் என்று புலமையாளர் போற்றுவர்.

நன்றி: செண்பகத் தமிழ்க்கோவை

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் தமிழ் இணையப் பயிலரங்கம்




அழைப்பிதழ்



கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள் :21.08.2011 ஞாயிற்றுக் கிழமை காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,காட்டேரி, ஊற்றங்கரை


புதுச்சேரி முனைவர் .மு .இளங்கோவன், பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட தமிழ் இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.

காலையில் தொடங்கும் விழாவிற்குப் பழ.பிரபு (செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்) வரவேற்புரையாற்றுகின்றார்.

வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள் நிறுவுநர் உயர்திரு .வே .சந்திரசேகரன் தலைமையில் விழா நடைபெறுகின்றது.

முன்னிலை : கே.சி.எழிலரசன், பழ.வெங்கடாசலம், தணிகை.ஜி.கருணாநிதி

அறிமுகவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்


நன்றியுரை: அண்ணா.சரவணன்

பங்கேற்கும் பேராளர்களின் கவனத்திற்கு ...

*தமிழ் இணையம் ,தமிழ்த் தட்டச்சு,மின்அஞ்சல்,உரையாடல்,வலைப்பூ உருவாக்கம், பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிப்பீடியா,நூலகம் சார்ந்த தளங்கள், மின்னிதழ்கள், தமிழ்க் கல்விக்குரிய தளங்களை அனைவரும் அறிந்து கொள்ளவே ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் இப் பயிலரங்கை ஏற்ப்பாடு செய்துள்ளது.

* பயிலரங்கத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் வருகையை முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதிவிற்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443910444 /9865817165 /9942166695

பதிவு செய்ய கடைசி நாள் 18 /8 /11

* பயிலரங்கத்தில் பங்கேற்க ஊற்றங்கரை நகரத்தில் இருந்து காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .ஊற்றங்கரைC.A.K .பெற்றோலியம் பேங்க் அருகில் இருந்து காலை 9 மணி அளவில் ஒரு பேருந்தும் 9 .30 மணி அளவில் மற்றொரு பேருந்தும் புறப்படும்.

பயிலரங்கத்தில் பங்கேற்கும் அனைவர்க்கும் மதிய உணவு ,தேநீர் ,குறிப்பேடு ,எழுதுகோல் வழங்கப்படும் .

* பயிலரங்கத்தில் அனைவரும் காலை 9 .30 மணி முதல் மாலை 4 மணி வரை முழுமையாக பங்கு கொள்ள வேண்டும் .