அண்மையில் மலையகச் செலவு மேற்கொண்டிருந்தேன். உலகத் தொல்காப்பிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் தொல்காப்பிய அறிஞர்களைக் கண்டு மகிழ்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இச்செலவு அமைந்தது. தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகமது அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட உள்ள தொல்காப்பியக் கோட்டத்தின் இடத்தினைக் காண்பதையும் என் செலவில் இணைத்துக்கொண்டேன். யாவும் சிறப்பாக அமைந்தன.
24.08.2026 மாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முனைவர் முரசு நெடுமாறனார் அவர்களைக் கண்டு வணங்கும் பேறு பெற்றேன். முரசு ஐயாவுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுக் காலமாக, வளர்பிறைபோல் வளர்ந்து வருகின்றது. மலேசியத் தமிழர்களையும் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் எனக்கு அறிமுகம் செய்த பெருந்தகை முரசு நெடுமாறனார் என்று பனிமலை உயர்வில் நின்று உரக்கச் சொல்ல இயலும்.
முரசு நெடுமாறனார் உருவாக்கிய மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என்னும் அரும்பெரும் தமிழ்ப் புதையல் உருவாக்கும் அற்றைப் பொழுதிலிருந்தே முரசு அவர்களின் உழைப்பையும் தமிழ் ஆர்வத்தையும் கண்டு கண்டி வியந்துள்ளேன். மலேசியாவுக்கு முதன்முதல் சென்றபொழுது(2001) என்னையும் என் பேராசிரியர் முனைவர் அ. அறிவுநம்பி அவர்களையும் வரவேற்று, இல்லிருத்தி, விருந்தோம்பிய நினைவுகள் கால் நூற்றாண்டைக் கடந்த பின்பும் நெஞ்சில் நிலைபெற்றுள்ளன. முரசு அவர்களின் குடும்பத்தார் காட்டிய அன்பையும் பெரும் பாசத்தையும் எண்ணி எண்ணி உருகுகின்றேன். முரசு அவர்களுக்கும் எனக்கும் நடந்த கடிதத் தொடர்புகளும், உரையாடல்களும் தனியொரு நூல் வரையும் அளவுக்கு செய்திச்செறிவு கொண்டவை. காலம் கனியும்பொழுது தனிநூல் உருப்பெறும். இது நிற்க.
முரசு அவர்கள் சற்றொப்ப தொண்ணூறு அகவையைத் தொட உள்ளார். தமிழ்நாட்டரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட உயரிய சிறப்பு ஆரங்களைப் பெற்று ஆரங்களுக்குப் பெருமைசேர்த்தவர். மாநாடுகள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, தமிழாய்வுக்குத் துணைநின்றவர். இத்தகு பெரும்புலச் சான்றோரைக் கண்டு தகைசால் தமிழ்த்தொண்டர்கள் என்ற என் நூலினை அவர்தம் மாணடி சேர்த்து, மனங்குளிர்ந்த வாழ்த்தினைப் பெற்றமை என் வாழ்வின் இனிய பொழுதுகளில் ஏற்றம் தரும் பொழுதாகும்.
முரசு நெடுமாறனார் நூற்றாண்டினைக் கண்டு, எங்களை வழிநடத்த வணங்கி வாழ்த்துகின்றேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக