நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன்

 

அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் 

[துரை. முத்துக்கிருட்டினன் கரந்தைக் கல்லூரியில் தமிழ் பயின்று, சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பெரும்புலமையுடையவர். பன்னூலாசிரியர். குடந்தையில் பிறந்த இவர் சிங்கப்பூரிலும் தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்.] 

சிங்கப்பூரில் நடைபெற்ற கவிமாலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலவாண்டுகளுக்கு முன்னர் எனக்கு வாய்த்தது. அப்பொழுது அறிஞர் துரை. முத்துக்கிருட்டினன் சிலப்பதிகாரம் குறித்து உரையாற்றித் தம் நிறைபுலமையால் அவையினரை "மகுடிக்கு அடங்கும் பாம்புபோல்" அடக்கினார். அவர் உரையைத் தொடர்ந்து யான் உரையாற்றும் வாய்ப்பு அமைந்தது. சிலப்பதிகாரத்தில் ஈடுபாடுகொண்ட மாணவனாகிய எனக்கு இக்காலத்தில் இதுபோலும் சிலம்பினைக் குறித்து உரையாற்றும் பெருமக்கள் உள்ளனரே என்று வியப்புற்றேன். என் மகிழ்வை அவையில் வெளிப்படுத்திப் பேசினேன். நிகழ்ச்சியின் நிறைவில் துரை. முத்துக்கிருட்டினனாரின் உரைக்குப் பாராட்டுத் தெரிவித்து, விடைபெற்றுத் தமிழகம் திரும்பினேன். அதன் பின்னர் ஆண்டுகள் பல கடந்தன. 

தொல்காப்பிய மன்றத்தைச் சிங்கப்பூரில் கட்டியெழுப்புவதற்கு அருமை நண்பர் திரு. காமராசனாரின் பெருந்துணையுடன் ஓர் இலக்கியச் சந்திப்பைச் சிலவாண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தினோம். சிங்கப்பூர் அறிஞர் பெருமக்கள் பலரும் எங்கள் முயற்சிக்குப் பேருவகையுடன் ஆதரவு நல்கினர். அப்பொழுது மீண்டும் துரை. முத்துக்கிருட்டினனாரைச் சந்திக்கும் வாய்ப்பு கனிந்தது. அதுபொழுது அவர் கையுறையாக வழங்கிய அரும்பெரும் இலக்கண ஆய்வு நூலாகியஒருதலைக் காமம்” (கைக்கிளைதொல்காப்பியம்) என்னும் நூலின் படியைப் பெற்றுக், கொண்டுவந்தேன். வந்தவுடன் அந்த நூலின் ஆய்வுப்போக்கையும், நோக்கையும் படித்து மகிழ்ச்சியுற்றேன்

தொல்காப்பியரின் கைக்கிளை குறித்த கருத்தினைப் பிற்கால உரையாசிரியர்கள் எவ்வாறு பிழைபட உணர்ந்து, பொருளுரைத்துள்ளனர் என்பதையும் அந்தப் பிழைப்பட்ட பொருளைப் பிற்காலத்து அறிஞர்கள் தலைமுறைதோறும் தொடர்ந்து கடத்திவந்துள்ளனர் என்பதையும் அறிஞர் துரை. முத்துக்கிருட்டினனார் அந்த நூலில் சிறப்பாக விளக்கியிருப்பார்கள். இந்த நூல் இவரின் ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுக்குரிய இடுநூலாகும். அறுநூற்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைக் காட்டி, மிகச் சிறந்த ஆய்வு நூலாக இதனைப் படைத்திருப்பார். இந்த ஆய்வினை நெறிப்படுத்திய அறிஞர் பெருந்தகை பச்சையப்பன் கல்லூரியின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ஆவார்கள்

ஒருதலைக் காமம் (கைக்கிளைதொல்காப்பியம்) நூலின் அமைப்பு 1. நுழைவாயில், 2. மண்ணின் மணமும் பெண்ணின் குணமும், 3. கைக்கிளை இலக்கணம் உரைத்தவரும்- உரைத்தவறும், 4. கைக்கிளை ஒழிபும் பிழிவும், 5. மகளிர் மனத்தின் உறுதியும் மணத்தில் உறுதியும் 6. முடிவுரை என்றவாறு இயல் பிரிப்பினைக்கொண்டு, அமைந்துள்ளது. கைக்கிளை குறித்து, இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும், பிற்காலத் தொல்காப்பிய ஆய்வாளர்களும் கொண்டிருந்த கருத்துகளைத் தொகுத்தும் வகுத்தும், தாம் கண்ட ஆய்வு உண்மைகளை நிறுவ இவர் எடுத்துள்ள முயற்சியும் சான்றுகளும் ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளன. ஆய்வின் இயல் பிரிப்பினை மேலோட்டமாகப் பார்ப்பவர்க்குக் கூட, இந்த ஆய்வின் பெருமை தெற்றென விளங்கும். நூலினைப்  படித்த கையோடு, முத்துக்கிருட்டினரின்  நினைவு என் நெஞ்சில் நிலைத்துப் படிந்தது

தொடர்ந்த என் தொல்காப்பியத் தேடலில் முத்துக்கிருட்டினர் அவர்களை மீண்டும் நினைவுகூரும் வாய்ப்பு கனடாவில் நடைபெற்ற கனடா தொல்காப்பிய மன்றத்தின் ஆராய்ச்சி மாநாட்டின்பொழுது மீண்டும் துளிர்விட்டது. தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சிக்கு அவரின் படத்தை மீண்டும் தேடத் தொடங்கியபொழுது,  இப்பெருமகனாரின் வாழ்வியலும் பணிகளும் தமிழுலகின் கவனத்திற்கு வரவில்லையே என்று கவலைகொண்டிருந்தேன். அண்மையில் என் நண்பர் முனைவர் இரா. அருள்ராசு அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபொழுது  துரை. முத்துக்கிருட்டினனாரின்  பெருமையை இருவரும் அசைபோட்டோம். இவர்தம் ஆற்றலையும் பெரும்புலமையையும்  தமிழுலகுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் எதிர்காலத்திற்கு ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் என்றும் கருதி,  எழுதி, அறிமுகப்படுத்துவதில் மகிழ்கின்றேன்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழ் வாழ்க்கை

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொருக்கை என்னும் ஊரில் வாழ்ந்த உழவர் குடியைச் சார்ந்த துரைசாமி பிள்ளை, இலக்குமி அம்மாள் ஆகியோரின் மகனாக 01.06.1947 இல் துரை. முத்துக்கிருட்டினன் பிறந்தவர். தொடக்கக் கல்வியைப் பிறந்த ஊரில் பயின்றவர்.  ஆறு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை கும்பகோணத்தில் அமைந்துள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். தம் கல்லூரிப் படிப்பைத் தஞ்சை- கரந்தையில் அமைந்துள்ள புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பயின்றவர் (1966-1970). கண்டிப்புக்கும் புலமைக்கும் பெயர்பெற்ற பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் அப்பொழுது கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர்

கரந்தைக் கல்லூரியில் அப்பொழுது ஒவ்வொரு வகுப்பிலும் நூறு மாணவர்கள் படிப்பது வழக்கம். நான்கு ஆண்டு புலவர் படிப்பில் மொத்தம் நானூறு மாணவர்கள் தமிழ் படித்தனர். இணை வகுப்புகள் அமையும்பொழுது இருநூறு மாணவர்களை அமரச்செய்து ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவது வழக்கமாம். பேராசிரியர்கள் கு.சிவமணி, .பாலசுந்தரம் அடிகளாசிரியர், சி.கோவிந்தராசனார், சிவப்பிரகாச சேதுவராயர் முதலான பெரும்புலமைச் சான்றோரிடம் தமிழ் கற்ற துரை. முத்துக்கிருட்டினன் படிப்பிலும் விளையாட்டிலும் பெருந்திறன் பெற்றவராக விளங்கியவர்

துரை. முத்துக்கிருட்டினன் கரந்தையில் கல்வி பயிலும்பொழுது கடவூர் மணிமாறன்(முத்துசாமி), பிரபஞ்சன்(வைத்தியலிங்கம்) உள்ளிட்டவர்கள் உடன் பயின்றவர்கள். சைதாப்பேட்டை அசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபொழுது இவருடன் செந்தலைப் புலவர் கௌதமன் அவர்கள் உடன் பயின்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் கல்லூரிப் படிப்பை நிறைவுசெய்த பிறகு பாபநாசத்தில் இருந்த பாவேந்தர் தமிழ்க் கல்லூரியில் 1970 முதல் 1972 வரை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அப்பொழுது(1972 இல்) அங்கு வந்திருந்த தந்தை பெரியாரைக் கண்டு உரையாடியவர். அவரிடம், தஞ்சையில் முன்பொருபொழுது உரையாற்றிய தந்தை பெரியார் “தமிழைக்  காட்டுமிராண்டி மொழி” என்றமைக்காகத் தம் மறுப்பைத் தெரிவித்து உரையாடினார். தந்தை பெரியார் அவ்வாறு சொன்னமைக்கான காரணத்தை முத்துக்கிருட்டினனுக்கு அறிவுப்பூர்வமாக விளக்கியமையை இன்றும் நன்றியுடன் நினைவுகூர்பவர்

காலத் தேவையறிந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் ஆகியோர் அவரவர் காலத்தில் நூல் இயற்றியமை போல் இக்காலத்தில் காலத் தேவையறிந்து மக்களுக்கு உதவும் நூல்களைத் தமிழ்ப் புலவர்கள் எழுதாமையால் தாம் அவ்வாறு கூற நேர்ந்தமையைத் தந்தை பெரியார் விளக்கியபொழுது நம் துரை. முத்துக்கிருட்டினன் அமைதியடைந்தார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் 1972 முதல் 1980 வரை அரசியல் ஆர்வம்கொண்டு, பணிக்குச் செல்லாமல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு முயன்றும் அப்பணி தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 1982 இல் சென்னை முத்தியாலுபேட்டையில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்து 2005 ஆம் ஆண்டு வரை அப்பள்ளியில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். 

பள்ளியில் பணியாற்றியபடியே தம் கல்வித் தகுதியை உயர்த்திக்கொள்ள பி. லிட்., முதுகலை(M.A) கல்வியியல் இளையர் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) முதலிய  பட்டங்களைப் படித்துப் பெற்றவர். தம் ஆய்வியல் நிறைஞர் படிப்புக்காகக்  கைக்கிளைதொல்காப்பியம்” என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி அப்பட்டத்தைப் பெற்றவர்

துரை. முத்துக்கிருட்டினன் இல்லற வாழ்க்கை: 

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களுக்கு 1970 இல் வசந்தகுமாரி அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குச் சிதம்பர பாரதி, சர்மிளா என்னும் இரண்டு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். சிதம்பர பாரதி தொழில்நுட்பம் பயின்று, தற்பொழுது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றார்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்கள் தம் பணியோய்வுக்குப் பிறகு தமிழாராய்ச்சியில் ஈடுபட்டு, அரிய நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அரசியல் செல்வாக்கோ, அறிவைப் போற்றும் ஆளுமைகளோ இவருக்கு அமையாததால் இவர் பணிகள் குடத்துக்குள் ஏற்றிய விளக்காக உள்ளன

துரை. முத்துக்கிருட்டினன் தமிழ்க்கொடைகள்

1. ஒருதலைக் காமம் (கைக்கிளை -- தொல்காப்பியம்)     ஆய்வு நூல்

2. திருக்குறள் உரை

3. தமிழ் இலக்கணம்

4. மதுரையைக் கண்ணகி    எரிக்கவில்லை  (சிலப்பதிகார ஆய்வேடு)

5. நந்திக் கலம்பகம்   (நாடகம்)

6. அகல் விளக்கு    (கவிதை)

7. இரட்டை நவமணி மாலை   (கட்டுரைகள்




வெளியீடு காண இருப்பவை: 

8.  குறளறனும் மனுமுரணும்

 (1. "திருக்குறள் -- மனுதர்மத்திற்கு  எதிரானது;   2. பரிமேலழகர், தம் உரை          மூலம் வருணாச்சிரமத்    தர்மக் கோட்பாடுகளைத் திணிக்கிறர்;  3. பரிமேலழகரின் உரை      முரண்பாடுகள்;  என்பன பற்றிய விளக்கமும்  மற்றும்   4. திருக்குறட்குப் -- புத்துரையும்         அடங்கியது.)

9. சிலம்பிய சிலம்பும்     புலம்பிய சதங்கையும்

      (சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்    கட்டுரைகள் -- விரைவில்

துரை. முத்துக்கிருட்டினன் அவர்களின் தமிழாய்வு முயற்சிகளையும், எழுத்துப்பணிகளையும் போற்றி இவருக்கு உரிய சிறப்புகளையும் பெருமைகளையும் அளிப்பது தமிழர் கடமையாகும்.

கருத்துகள் இல்லை: