நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

பெரும்புலவர் பள்ளபட்டி ப. எழில்வாணன் அவர்களின் பாராட்டு!

 


“யாப்பு விளக்கம்” என்னும் பெயரில் தமிழ்ச் செய்யுள் இலக்கணம் வரைந்த பெரும்புலவர்  பள்ளபட்டி . எழில்வாணன் ஐயா என்னுடைய இணைய ஆற்றுப்படையைக் கற்று, வரைந்தனுப்பிய வாழ்த்தினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கின்றேன்.

வாழ்த்துவம் இனிதே!

புலவர் ப. எழில்வாணன்

உயர்தமிழ் என்றும் உலகை ஆள

அயர்வு நீக்கி அறிவியல் நோக்கில்

ஆற்றல் மிகைத்தே அதிக உழைப்பில்

போற்றும் வண்ணம் புதுமை தேக்கி,

முனைவர் இளங்கோ வனார்தாம் முயன்று

முனைப்பாய் ஆக்கிய வினைபுரி நூல்தான்

இணைய ஆற்றுப் படையெனும் இந்நூல்!

இணைய மறுப்பார் தமையும் இணைக்கத்

துணைபுரி நூலிதாம்; தொழில்சார் நுட்பம்

அனைய செய்திகள் பொதிந்த புலநூல்!

இணையம் நோக்கி ஆற்றுப் படுத்தும்

புணைநேர் நூல்தான் புரிந்து கொள்வீர்!

ஆற்றுப் படைநூல் வரிசையில் அருமை

ஏற்றி மாற்றங் கண்ட மணிநூல்!

தமிழகச் சிறப்பு, தமிழர் எழுச்சி,

தமிழினம் உலகம் போற்றத் தழைத்தமை,

இலங்கைத் தமிழர் இன்னல்,  கொடுமை,

வலங்கெழு தமிழர் மானம் காத்தமை,

கணினி இணையம் கால்பதித் துள்ளமை,

அணிசேர் தமிழ்க்கே அவற்றால் நன்மை

இணையக் கழகம்,  வலையொளி இன்னன

இணையிலா இமயமாய்  இலங்கிட உழைத்த

ஆற்றல் மிகையோர், அறிஞர், பெரியோர்

ஆற்றிய கடமை அடிமுதல் நுனிவரை

ஆழமாய், அழகாய் ஞாலமே போற்ற

வேழமாய் இனிக்க விளக்கும் தெளிநூல்!

அகவலில் ஐந்நூற் றறுபான் மூன்றடி

தகவுடன் அமைந்த அகங்கொள் தமிழ்நூல்!

இளங்கோ வனாரையும் இவர்தம் நூலையும்

வளங்கெழு உளமுடன் வாழ்த்துவம் இனிதே!


நாள்: 04.08.2024


கருத்துகள் இல்லை: