நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

“தற்கால பிரெஞ்சு மொழி அகராதி” ஆசிரியர் எச். நாகராஜன்

எச். நாகராஜன் 

[எச். நாகராஜன் புதுச்சேரியில் பிறந்தவர். இப்பொழுது பிரான்சு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர். இவர் உருவாக்கிய தற்கால பிரெஞ்சு மொழி அகராதி பிரஞ்சுமொழியைக் கற்க விரும்பும் தமிழ் மக்களுக்குப் பெருந்துணைபுரிகின்றது. பிரான்சு நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு இவரின் அகராதியைப் பயன்படுத்துகின்றனர். பிரான்சு நாட்டின் நீதித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக இருந்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நீதி மன்ற ஆவணங்களை மொழிபெயர்த்துள்ளார்.] 

புதுச்சேரியிலிருந்து பிரான்சு நாட்டுக்குச் சென்ற தமிழர்கள் பலர் தங்களால் இயன்ற வகையில் எல்லால் தமிழ் மொழிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர். படைப்புகள், மொழிபெயர்ப்புகள், அகராதிகள், இலக்கிய அமைப்புகள், இலக்கிய நிகழ்வுகள் என்று இவர்களின் பணிகள் பல தரத்தனவாக விரியும்.  அவ்வகையில் அண்மையில் பிரெஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயக்கருடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது பிரான்சுநாட்டில் வாழ்ந்துவரும் எச். நாகராஜன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. 

எச். நாகராஜன் தாம் உருவாக்கிய தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூலினை எனக்குக் கையளித்துப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் 790 பக்க அளவில் அமைந்து, பிரெஞ்சு மொழியைக் கற்பவர்களுக்குக் கைவிளக்காக இருந்து பேருதவிபுரியும் நூலாகும். பிரான்சு நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்த அகராதியை ஆர்வமுடன் வாங்கிப் பயன்படுத்துவதை அறிஞர் நாகராஜன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

எச். நாகராஜனின் இளமைப் பருவமும் கல்வியும் 

அகராதியியல் அறிஞர் நாகராஜன் அவர்கள் புதுச்சேரியில் 21. 08. 1950 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் அரிகிருஷ்ணன், ருக்மணி அம்மையார் ஆகும். இவர்களுக்கு நான்காவது பிள்ளையாக நாகராஜன் பிறந்தவர். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கிப் பல்வேறு துன்பங்களுக்கு இடையே தம் பள்ளிக் கல்வியை முடித்தவர். புதுவையின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான "பெத்தி செமினார்" பள்ளியில் பயின்றவர். பின்னர் புதுச்சேரி தாகூர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். 

தாகூர் கல்லூரியில் பேராசிரியர் வேணுகோபால் நாயரிடம் நான்கு ஆண்டுகள் ஆங்கில இலக்கியம் பயின்று, தம் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டவர். பேராசிரியர் நாயர் அவர்கள் தாகூர் கல்லூரியில் படிக்கும் மாணவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பேராசிரியர் ஆவார். ஆங்கில இலக்கியங்களை மனப்பாடமாக எடுத்துரைக்கும் பேராற்றல் பெற்றவர். மேலும் மாணவர்கள் விரும்பும் வகையில் பயிற்றுவித்தலிலும் தனித்திறன் கொண்டவர். 

நாகராஜன் பள்ளியில் படிக்கும்பொழுதே The Hindu, Illustrated weekly of India, அமுதசுரபி,  கலைமகள், தீபம், ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் முதலான இதழ்களைப் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர். எனவே, ஆங்கிலமொழியும் தமிழும் இவருக்குக் கைவரப்பெற்றிருந்தது. Youth Age என்னும் இதழில் இளமைப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிப் பழகினார். மேலும்   The Pondy Observer என்ற ஆங்கில ஏட்டிலும் எழுதினார். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் உள்ள “அல்லியான்ஸ் பிரான்சேஸ்” என்னும் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் படித்து, பிரெஞ்சுமொழி அறிவைக் கைவரப்பெற்றவர். புதுவை அரசு பணியில் சுகாதாரத்துறையில் ஐந்து ஆண்டுகள் இளநிலை எழுத்தராகப் பணியாற்றியவர். உரோமன் ரோலந்து நூலகத்தில் முதுநிலை எழுத்தராக ஆறாண்டுகள் பணியாற்றியவர். புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த திரு. கதிர்வேல் அவர்களின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். 

புதுவை அரசு பணியை விட்டு நீங்கி, 1982 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். பிரான்சில் உள்ள ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் பணியில் இணைந்து 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பிரெஞ்சு அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகப் பலவாண்டுகள் பணியாற்றி, மக்களுக்குப் பேருதவியாக இருந்தவர். பிரான்சு நீதிமன்றத்தில் பத்தாண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரெஞ்சு, ஆங்கில ஆவணங்களை மொழிபெயர்த்தவர். 

தற்கால பிரெஞ்சு மொழி அகராதியின் சிறப்புகள் 



தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தன்னிகரற்ற புலமைகொண்டிருக்கும் நாகராஜன் தாம் கற்ற கல்வியின் அறிவு அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் தற்கால பிரெஞ்சுமொழி அகராதியை அரிதின் முயன்று உருவாக்கினார். தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நாகராசனின் ஏழாண்டு உழைப்பில் கிடைத்துள்ளது. இந்த அகராதியில் 25,000 தலைச்சொற்கள் உள்ளன. 15,000 –இற்கும் மேற்பட்ட சொற்றொடர்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான எடுத்துக்காட்டு வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் தலைசிறந்த அகராதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியைக் கற்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகும். அகராதியின் பிற்பகுதியில் வட்டார வழக்குச் சொற்கள், இலக்கியத்தில் கையாளப்படும் பிரெஞ்சு சொற்கள், பிரெஞ்சு பழமொழிகள், பிரெஞ்சு எண்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. குடும்ப உறவுமுறைகள், மாதங்கள், வார நாட்கள், பறவைகள், விலங்குகள், மரங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் பெயர்களையும் தொகுத்துத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. இவை பிரெஞ்சுமொழி கற்பவர்களுக்குப் பெருந்துணையாக இருக்கும். 

தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூல் பிரெஞ்சு சொற்களுக்குத் தமிழில் விளக்கம் அளிப்பதுடன் அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்குரிய வகையில் தமிழ் வழக்கில் உள்ள எளிய சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டினுக்கு உரியது. இவ்வகராதியின் பின்னிணைப்பாக அமைந்துள்ள பகுதிகள் அகராதியைப் பயன்படுத்துவதற்குரிய குறிப்புகளையும், பிரெஞ்சுத் தொடர்களுக்கு உரிய நேரிய ஆங்கிலத் தொடர்களையும் கொண்டு, அகராதி அளிக்கும் பயனைப் பன்மடங்காக்கியுள்ளது. அறிஞர் எச். நாகராஜனார் போன்றவர்களைத் தமிழர்கள் போற்றும் நாள்தான் உண்மையான தமிழ் வளர்ச்சி நாளாக இருக்கும். தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூல் எச். நாகராஜனின் பெருமையை என்றும் நினைவுகூறிக்கொண்டேயிருக்கும். 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.


கருத்துகள் இல்லை: