நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 26 மார்ச், 2020

என் முதல்நூல் மாணவராற்றுப்படையை வெளியிட்டு(1990), அருளாசி நல்கிய தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் உரை!


தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 

 திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது, மாணவராற்றுப்படை என்னும் பெயரில் எழுதிய நூலினை, 24.03.1990 இல் வெளியிட்டோம். திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் காறுபாறு சுவாமிகளாக அப்பொழுது விளங்கிய தவத்திரு. குமாரசாமித் தம்பிரான் அவர்கள் அந்த நூலினை வெளியிட்டு அருளாசி வழங்கினார்கள். அவர்களின் வாழ்த்துதலின் வண்ணம் என் வாழ்க்கை தமிழ் கற்பதிலும், ஆய்வதிலும், பயிற்றுவிப்பதிலுமாக அமைந்தது. இந்நிகழ்வு நடந்து முப்பதாண்டுகள் ஓடின. அன்றைய நாளில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களும், ஒலிப்பதிவும் இன்றும் அந்த நிகழ்வை நினைவூட்டிக்கொண்டே உள்ளன. எம் ஒலிக்களஞ்சியத்திலிருந்து சுவாமிகள் அவர்களின் உரையை முப்பதாண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியிடுவதில் மகிழ்கின்றேன்.

தெளிந்த கருத்துகளும், ஆழ்ந்த உண்மைகளும், இளம் ஆர்வலர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் தாயுள்ளமும் கொண்டு, தவத்திரு அடிகளார் அவர்களின் பேச்சு அமைந்துள்ளமையைக் கேட்போர் உணரமுடியும். சிற்றூர்ப்புறத்து மாணவனாகச் சென்ற எனக்கு நற்பண்பும், நல்லறிவும் தந்து, வளர்த்த தவத்திரு அடிகளார் அவர்களை என்றும் நன்றியுடன் போற்றி வணங்குவேன்.

தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தம் கல்வி, கேள்விகளாலும், இறைவழிபாட்டாலும், சமயப்பணிகளாலும் மேம்பட்டு, திருமடத்தின் தலைவர்களாலும், சமய அன்பர்களாலும் போற்றப்பட்டு, புகழ்மிக்க தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆம் அதிபராக தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் திருப்பெயர் தாங்கி, மக்களுக்குச் சமயப் பணியையும் தமிழ்ப்பணியையும் திறம்பட ஆற்றி வருகின்றார்கள்.

தமிழ்நாட்டு அரசு மயிலாடுதுறை மாவட்டம் உருவாவதற்கு அறிவிப்பு நல்கிய இச் சூழலில், அரசு அலுவலகம், கட்டடங்கள் அமைப்பதற்குத் தேவையான நிலத்தைத் தம் திருமடத்தின் சார்பில் வழங்கிப் புதிய மாவட்டம் தோற்றம்பெற நம் சுவாமிகள் அவர்கள் உதவியுள்ளார்கள். இப்பெரும் செயலைப் போற்றி, இந்த இனிய நாளில் அவர்தம் முப்பதாண்டுகளுக்கு முந்திய பேச்சினை ஒலிவடிவில் வழங்குவதில் மகிழ்கின்றேன்.

தவத்திரு அடிகளார் அவர்களின் அருளுரையைச் செவி மடுக்க இங்கே அழுத்துங்கள்.

தொடர்புடைய பதிவுகள்


கருத்துகள் இல்லை: