நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 18 மார்ச், 2020

தூய தமிழ்ப் பற்றாளர் இரா. அரிதாசு…


இரா. அரிதாசு

அண்மையில் தமிழ்நாட்டு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் சார்பில் தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியலில் இரா. அரிதாசு அவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தமையை நாளிதழ்களில் கண்டு அளவிலா மகிழ்ச்சியுற்றேன். யான் பயின்ற உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் இவர் இரவுநேரக் காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும். இரவுநேரக் காவலர் எனினும் பகல்பொழுதிலும் இவர் பள்ளியில் ஏவலராகப் பணியாற்றி அனைவரின் அன்பையும் பெரும் மதிப்பையும் பெற்றவர் என்பதும் இதற்குக் காரணம் ஆகும்.

இரா. அரிதாசு தம் பணி ஓய்வுக்குப் பிறகு 2009 செப்டம்பர் முதல் திருவாரூர், பவித்திரமாணிக்கம் என்னும் ஊரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அரிதாசுவின் குடும்பம் எளிய குடும்பம். ஒரு மகளும் இரண்டு மகனும் இவருக்கு மக்கள் செல்வங்களாக வாய்த்துள்ளனர். இவரின் துணைவியார் செயலட்சுமி குடும்பநிலையுணர்ந்து, இல்லற வாழ்வை இனிது அமைப்பவர். இது நிற்க.

உள்கோட்டை என்னும் ஊர் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தை அடுத்து உள்ளது. இந்த ஊரில் வேளாண்மை, நெசவுத்தொழில் இரண்டும் புகழுடன் விளங்குவன. பட்டுப்புடவை நெசவு குறிப்பிடத்தக்க தொழிலாக உள்ளது. உழவர்களும் நெசவாளர்களும் நிறைந்து காணப்படும் இவ்வூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் பலநிலைப்பட்ட குடும்பங்களில் பிறந்து வளர்ந்த குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர் இவர்களின் தாய்வீடாக விளங்குவது இத் தொடக்கப்பள்ளியாகும். உள்ளூர், வெளியூர்களிலிருந்து வந்து இருபால் ஆசிரியர்கள் பணிபுரிவது வழக்கம். ஆண்டுக்கு ஓரிருமுறை கல்வித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்துவார்கள். மற்றபடி தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு நடுவங்களாக இந்தத் தொடக்கப்பள்ளி உருமாறும். ஓரிரு முறை ஆண்டு விழா நடந்ததாக நினைவு உள்ளது. மற்றபடி இந்தப் பள்ளியில் படித்து முன்னேறியவர்களின் பட்டியலை எடுத்தால் எண்ணிக்கை நிறைவாக இருக்கும். தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் இந்தப் பள்ளியும் சரிவைச் சந்தித்துள்ளது.

உள்கோட்டை தொடக்கப்பள்ளியில்தான் நான் அரிச்சுவடி பயின்றேன்.(1972-1977). காங்கியனூர் (யுத்தப்பள்ளம்) திருவாளர் கே. சோமசுந்தரம் ஆசிரியர் என் விரல்பிடித்து, நெல்லில் அகரம் எழுதச் செய்து, தமிழ்த்திசையைக் காட்டியவர். திருவாளர்கள் நா. கிருட்டினன், இரா. சம்பந்தம், மு. கலியபெருமாள், ஆ. தனபால், பி. இராமலிங்கம், கே. கிருஷ்ணய்யா, இரா. பாலசுப்பிரமணியன், ச. சங்கரலிங்கம், ந. பழனியாண்டி, வீரமுத்து, சா. ஆறுமுகம், பெ.சுப்பிரமணியன் (பிச்சனூர்), ப. சாமுவேல் (உள்கோட்டை), ப. தனசேகரன் (ஆமணக்கந்தோண்டி), திருவாட்டி இராசமாணிக்கத்தம்மாள், த. பன்னீர்செல்வம்(தொட்டிக்குளம்), எஸ். எமிலி செயசீலி, அ. பிச்சையம்மாள், உள்ளிட்ட ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிந்து, கல்லாத குடியில் பிறந்த எம் பிள்ளைகளின் அறிவுக்கண் திறந்தவர்கள் என்பதை நன்றியுடன் இங்குப் பதிவுசெய்கின்றேன் (சற்றொப்ப ஐம்பதாண்டுகளுக்கு முன் பணியாற்றியவர்கள் என்பதால் என் நினைவுக்குறைவால் விடுபாடு இருப்பின் பொறுத்தாற்றுங்கள்).

நான் தொடக்கப்பள்ளியின் படிப்பை முடித்து, அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு இடம்பெயர்ந்த இரண்டு ஆண்டில் இரா. அரிதாசு அவர்கள் தொடக்கப்பள்ளியில் இரவுக்காவலராகப் பணியில் இணைந்தார். தூய வெள்ளாடையில் இருப்பார். மணி அடிப்பது, பிள்ளைகளுக்குப் பகலுணவு இடுவது, வருகைப் பதிவேடு கொண்டு செல்வது, கல்வி அதிகாரிகள் வரும்பொழுது தேநீர், சிற்றுண்டி வாங்கி வருவது இவர்தம் பணியாக இருக்கும். பள்ளியை ஒட்டிய பகுதிகளில் தோட்டம் அமைப்பது, நீர் ஊற்றுவது என்று இவர் பணி நீண்டிருக்கும். இவர் எப்பொழுதும், எவ்விடத்தும் தமிழில் பேசுவதால் அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

நம் ஊரில் அப்பொழுது ஓரிருவர் மறைமுகமாக மது அருந்துவர். அவர்களைத் தீயொழுக்கம் உடையவர்களாக மக்கள் நினைப்பர். அத்தகையோரால் ஊருக்கு இழிபெயர் என்று புறம்பேசுவர். அத்தகையோரும் முரட்டுத் தனமாக நடந்து மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள். அத்தகு தவறான பழக்கம் உடையவர்கள் கூட நம் அரிதாசு அவர்களைக் கண்டால் மிகவும் மரியாதையாக நடந்துகொள்வார்கள். தம் பிள்ளைகளை நன்கு பார்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்வார்கள்.

இரா. அரிதாசு  பணியாளர் நிலையில் இருந்தாலும் நல்ல தமிழில் உரையாடுவதால் பள்ளிக்கு வரும் அதிகாரிகள் இவரிடத்து மிகவும் மதிப்பாக நடந்துகொள்வார்கள். ஊருக்கு ஓரிரு பேருந்துகளே அப்பொழுது வந்தன. அதில் வரும் அதிகாரிகளை வழியனுப்ப அரிதாசு அவர்களே மிதிவண்டியில் அழைத்துச் செல்வார். அப்பொழுது இவரின் தனித்தமிழ் உரையாடல்களைக் கேட்டு அனைவரும் வியப்படைவர். தைப்பு முள் என்றும், தொய்வ அச்சு என்றும், வருகைப் பதிவேடு என்றும், பணிப் பதிவேடு என்றும், தற்செயல் விடுப்பு என்றும், மருத்துவ விடுப்பு என்றும் ஒலிபெருக்கி என்றும் இவர் தங்கு தடையில்லாமல் பேசுவது கண்டு முறையாகத் தமிழ்க்கல்லூரியில் பயின்றவர் என்று அனைவரும் நம்புவது உண்டு. இவர் பள்ளியிறுதி வகுப்பு வரையில் பயின்றவர் என்பது அருகில் நெருங்கிப் பழகியோர்க்கு மட்டும் தெரியும்.

இரா. அரிதாசு தூய தமிழ்ப் பெயர்ப்பலகை திறப்பில் ஆர்வம் கொண்டவர். தம் பள்ளியில் படிக்க வரும் குழந்தைகள் பிறமொழிப் பெயர்களைத் தாங்கியிருந்தால் தம் கையில் உள்ள தனித்தமிழ்ப் பெயர்ச்சுவடியைக் கொடுத்து, இதில் உள்ள ஒரு பெயரைப் பள்ளியில் பதியுங்கள் என்று நெறிகாட்டுவார். இவரால் இப்பகுதியில் அறவாழி, பாவேந்தன், தேனருவி உள்ளிட்ட பெயர்கள் வழக்கில் நிலைபெற்றன.

எம் ஊர் பொங்கல் விழாவுக்கு வருகைபுரிந்த புதுவைப் புலவர் பாளை எழிலேந்தி, அரிதாசுவின் தமிழார்வம் அறிந்து செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கி, ஒரு விழாவெடுத்துப் பாராட்ட அந்த நாளில் (1992) ஐந்நூறு உருவா நிதி வழங்கினார் எனில் இவர்தம் தமிழார்வம் தெளிவாக விளங்கும். இவரின் பெருமை மக்களுக்குப் புலப்படத் தொடங்கியதும் ஒவ்வொருவராக இவரை மதிக்கத் தொடங்கினோம். குடந்தைக் கதிர். தமிழ்வாணன், திருப்பனந்தாள் ஆ. பிழைபொறுத்தான், உள்கோட்டை சனதா சி.மாணிக்கம் உள்ளிட்ட அன்பர்கள் இவரைப் போற்றினர். அண்டை அயலூரில் உள்ள தமிழார்வலர்களும் இவரைப் போற்றினர்.

கடமையை உயிராகப் போற்றிய இவர், நல்ல மாணவர்கள் உருவாவதற்குக் காரணமாகவும் இருந்தவர். இவரின் தமிழ்ப்பற்றால் கவர்ந்த நானும் மிகவும் நெருக்கமாகப் பழகி இவர்தம் அன்பைப் பெற்றுள்ளேன். என்னைக் காண ஊருக்கு வரும் தமிழறிஞர்கள் பலரும் இரா. அரிதாசு அவர்களைப் போற்றிப் பாராட்டியுள்ளனர். பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் வாழ்த்தினைப் பெற்றுள்ள இரா. அரிதாசுவின் தமிழார்வத்தைப் போற்றித் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் சென்னையில் நடைபெற்ற விழாவில்(11.03.2020) பாராட்டியுள்ளமை எம்மனோர்க்குப் பேருவகை தருகின்றது. இம்முயற்சியில் ஈடுபட்டு உழைத்த அகரமுதலித் திட்டத்தின் இயக்குநர் திருவாளர் தங்க. காமராசு ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தூய தமிழ்ப் பற்றாளர் விருது பெறும் இரா. அரிதாசு(இடமிருந்து மூன்றாமவர்)

இரா.அரிதாசு அவர்கள் 04.08.1948 ஆம் ஆண்டு திருவாளர் இராசன்(ஓமியோ மருத்துவர்), இலட்சுமிகாந்தம் ஆகியோர்க்கு மகனாக குடந்தை வட்டம், சோழபுரம் அருகே உள்ள மேல அத்தியூரில் பிறந்தவர். சோழபுரம் செயம் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். 1965 முதல் 1970 வரை தற்காலிகப் பணியில் கல்லாத்தூர், மேலக்குடியிருப்பு, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். 1968 இல் மேலக்குடியிருப்பு நல்லாசிரியர் அரங்கநாதன் என்பாரின் நெறிப்படுத்தலில் தமிழார்வம் தழைக்கப்பெற்று,  தனித்தமிழ் ஆர்வலராக மாறியவர். 1970 ஆம் ஆண்டு முதல் வாணதிரையன் குப்பம் என்ற ஊரில் பணியாற்றியும் 1978 இல் செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்தும், 1979 முதல் 2008 ஆகத்து 31 வரை உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் இரவு நேரக் காவலராகப் பணியாற்றியும் அனைவரின் உள்ளத்திலும் தமிழ் ஆர்வலராக இடம்பெற்றவர்.

தமிழை அகத்தும் புறத்தும் நிலைநிறுத்தி வாழ்ந்துவரும் தூய தமிழ்ப் பற்றாளர் இரா. அரிதாசுவின் பெருமை உலகம் உள்ளவரை நின்று நிலவட்டும்!


கருத்துகள் இல்லை: