நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மலேசியக் கல்வியாளர் மன்னர் மன்னன் மருதை


மன்னர் மன்னன்

மலேசியாவில் தமிழ்ப்பணியாற்றும் பெரும்பான்மையர்க்கு நன்கு அறிமுகமான பெயர் மன்னர் மன்னன் என்பதாகும். மன்னர் மன்னன் அவர்களின் தந்தையார் மருதை எனப்பட்ட சி.செ. மதுரைவீரன் அவர்கள் தமிழகத்தின் மதுரையை அடுத்திருக்கும் நத்தம் பகுதியில் அமைந்த சிறுகுடி என்னும் ஊரிலிருந்து மலேசியாவுக்குப் புலம்பெயர்ந்தவர். நகைத்தொழில் செய்யும் குடும்பத்திலிருந்து சென்றாலும், மலேசியாவில் வெளிவாரி வேலைகளைச் செய்து இவர் வாழ்ந்து வந்தார். நற்பண்பும், நல்லொழுக்கமும் கொண்ட மருதை அவர்கள் திராவிட இயக்கக்  கொள்கைகளிலும் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் மீதும் பேரீடுபாடு கொண்டவர். பாவேந்தர் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மருதை, மனப்பாடமாக அவர் கவிதைகளைச் சொல்லும் ஆற்றல் பெற்றவர். தம் பெண் குழந்தைகளுக்குப் பாவேந்தரின் தாலாட்டுப் பாடல்களைச் சொல்லி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். தமிழ்ப் பற்று நிறைந்திருந்த மருதை தம் தலைமகனுக்குப் பெயராக மன்னர் மன்னன் என இட்டு வழங்கினார். அறிஞர் அண்ணா மீது கொண்ட ஈர்ப்பால் தம் இன்னொரு மகனுக்கு அண்ணாதுரை எனவும், இன்னொரு மகனுக்கு நெடுஞ்செழியன் எனவும் பெயரிட்டு மகிழ்ந்தார் மருதை ஐயா.

அறிஞர் அண்ணா அவர்கள் மலேசியா சென்றிருந்தபொழுது, அவரைக் காண்பதற்குக் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியிருந்தது. அறிஞர் அண்ணாவின் மெய்க்காப்பாளரையும் தள்ளிக்கொண்டு, மக்கள் அண்ணாவைக் காண முன்னேறினர். அண்ணாவின் மெய்க்காப்பாளர் என்று ஒருவர், நம் மருதை ஐயாவை தடுத்து நிறுத்தி, நான் அண்ணாவின் மெய்க்காப்பாளர்!. முன்னேறி வராதீர்கள் என்று கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார். “நீங்களோ மெய்க்காப்பாளர்”. “நான் அண்ணாவின் உயிர்க்காப்பாளர்” என்று கூறியபடி அண்ணாவை நெருங்கி, நேரில் பார்த்து மகிழ்ந்தார் மருதை என்ற மதுரைவீரன். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட மருதை அவர்கள் தம் இன்னொரு மகனுக்கு இளந்தமிழ் என்று பெயரிட்டுத் தம் தமிழ்ப்பற்றை நிலைப்படுத்தியுள்ளார்.

மன்னர்மன்னன் அவர்கள் தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழுக்கு இந்த நிமையம் வரை தம்மால் இயன்ற அரும்பணிகளைச் செய்து வருகின்றார். மலேசியத் திருநாட்டில் இன்று தமிழாசிரியர்களாக இருக்கும் ஈராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம் மன்னர் அவர்களின் மாணவர்களாக இருப்பார்கள். அல்லது இவரின் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். மன்னர் மன்னன் பல்வேறு அமைப்புகளில் மதியுரைஞராகவும், பொறுப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து பல்வேறு பணிகளைச் செய்து வருபவர்.

பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, மலேசிய இளைஞர் பேரவை, பெட்டாலிங் ஜெயா,  விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம், பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர் சங்கம், பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ உத்தாமா இடைநிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், மலேசியத் தமிழ் அறவாரியம்,  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து இவராற்றிய பணிகள் மலேசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பணிகளாகும்.

2013 ஆம் ஆண்டு சூன் திங்கள் மலேசியாவில் நடைபெற்ற 10 ஆம்  உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றும், 2018 சூன் திங்கள் மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாட்டின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றும் இவர் நடத்தியுள்ள மாநாடுகள் என்றும் நினைவுகூரத் தக்கனவாகும்.

சற்றொப்ப இருபதாண்டுகளாக மன்னர் மன்னன் அவர்களுக்கும் எனக்குமான நட்பு அமைந்துள்ளது. அவர்தம் தொடர்பையும் அவரின் தமிழ்ப்பணிகளையும் இப்பதிவில் நினைவுகூர்கின்றேன்…

சிங்கப்பூரில் 2001, செப்டம்பர் முதல் கிழமையில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் முதன் முதல் நல்லாசான் மன்னர் மன்னன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அதனைத் தொடர்ந்து அமைந்த மலேசியச் செலவில் முனைவர் முரசு. நெடுமாறனார் இல்லத்தில் நான் தங்கியிருந்தபொழுது, மன்னர் அவர்களின் அழைப்பில் அவர் பணிபுரிந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மாணவர்கள் நடுவண் உரையாற்றினேன். அன்று தொடங்கிய தொடர்பும், நட்பும் உறவும், வாழ்நாள் கடந்தும் நிலைபெறத் தக்கனவாய், “நிறைநீர நீரவர் கேண்மையாய்” வளர்ந்தவண்ணம் உள்ளன.

மன்னர் மன்னன் அவர்கள் தமிழகத்திலிருந்து செல்லும் தமிழார்வலர்களைத் தாங்கிப் பாதுகாக்கும்  பேருள்ளம் கொண்டவர். மொழியியல் அறிஞர் கி. கருணாகரன் அவர்கள் மலேயா பல்கலைக் கழகத்தின் மொழியியல் புலத்தில் பணியாற்றியபொழுது மன்னர் மன்னன் பேராதரவு காட்டித் துணைநின்றவர். அதுபோல் தமிழகத்துப் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள் மலேசியா செல்லும்பொழுது மன்னர் அவர்களின் விருந்தோம்பலிலும், அன்பிலும் திளைத்திருப்பார்கள்.

மலேசியாவில் என் நூல்கள் வெளியிட்ட பொழுதும், ஆவணப்படங்கள் வெளியிட்டபொழுதும், தமிழ்க் கணினிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றபொழுதும் உலகத் தொல்காப்பிய மன்றத் தொடக்க விழாவின் பொழுதும் மன்னர் மன்னன் அவர்கள் செய்த உதவிகளை யானும் என் குடிவழியினரும் என்றும் நினைவுகூர்வோம். அவ்வுதவிகளின்  நன்றிப் பெருக்கின் அடையாளமாகச் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் என்ற என் நூலொன்றை மன்னர் அவர்களுக்குப் படையலிட்டு உவந்துள்ளேன். அதுபோல் தமிழகத்திற்கு மன்னர் அவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் வாய்ப்புக்கு ஏற்பக் கண்டு மகிழ்வது என் வழக்கம்.

மன்னர் மன்னன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:

மன்னர் மன்னன் அவர்கள் மலேசியாவில் வாழ்ந்த மருதை, சிட்டு அழகிரிசாமி என்னும் பெற்றோரின் தலைமகனாக 19.02.1954 பெட்டாலிங்கு செயாவில் பிறந்தவர். இவருடன் பிறந்தவர்கள் பதின்மர். அனைவரும் மலேசியாவில் நன்முறையில் வளர்ந்தவர்.

கல்வி:

மன்னர் மன்னன் பெட்டாலிங்கு செயா விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில்,  6 ஆண்டுகள் தொடக்கக் கல்வியைப் பயின்றவர். - 7 ஆண்டுகள் இடைநிலைக் கல்வியை MCE இல் பயின்று முதல் நிலைத் தேர்ச்சி (1967-1973) பெற்றவர். ஸ்ரீ கோத்தா ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில் (1976/77) பயின்று தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் பெற்றவர். STPM தேர்வினைத் (1978/79) தாமே படித்துத் தேர்ச்சி அடைந்தவர். 1982 – 1985 ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக் கழகத்தில்,   மலாய் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் (BA Hons. )  1991-1995 ஆம் ஆண்டில் மொழியியல் துறையில்  முதுகலைப் பட்டமும் (MMLS) பெற்றவர்.
மன்னர் மன்னன்(கோப்புப் படம்)

ஆசிரியர் பணி

கல்வியில் ஈடுபாட்டுடன் விளங்கிய மன்னர் மன்னன் 1974 - 1975  ஆம் ஆண்டில் செந்தூல், சுங்கைபீசி, பூச்சோங் தமிழ்ப் பள்ளிகளில் தற்காலிகத் தமிழ் ஆசிரியராகப் பணியேற்றவர்.  1978 – 1982 இல் இரவாங் தமிழ்ப் பள்ளியில்  ஆசிரியராகப் பணியாற்றியவர். 1985 – 1987 இல் அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் மலேசிய மொழியும், மலாய் இலக்கியமும் கற்பித்தல் பணியைச் செய்தவர். 1987 ஆம் ஆண்டு முதல் 2004 வரை பதினேழரை ஆண்டுகள் கோலாலம்பூர்,  லெம்பா  பந்தாய், ஸ்ரீகோத்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும், சிரம்பான் இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் தமிழ் விரிவுரைஞராகப் பணியாற்றியவர். இக்கால கட்டத்தில் இவரிடம் பயிற்சி பெற்ற ஏறத்தாழ 2000 தமிழ் ஆசிரியர்கள் இன்று நாடு முழுமையும் பல்வேறு நிலைகளில் கல்விப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

2005 முதல் 2018 வ்ரை மலாயாப் பல்கலைக்கழகத்தின்  மொழி-மொழியியல் புலத்தில் ஆசிரியர் பணியாற்றியவர். 2005 முதல் இந்நாள்வரை மலேசிய திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தின் ப்குதி   நேர விரிவுரைஞராகவும் இணையவழி நேரடிக் கற்றல் தள போதனையாளராகவும் இருந்துவருகிறார் இவரின் பணிக்காலத்தில் பல நூறு மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு அடித்தளம் அமைத்தவர்.

இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா(1986), இந்தோனேசியா(1991), மொரீசியசு உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி, அலுவல்சார் பயணங்களை மேற்கொண்டவர்.

மன்னர் மன்னன் நீடு வாழ்ந்து, தமிழ்ப்பணியாற்ற உள்ளன்போடு வாழ்த்தி மகிழ்கின்றேன்! 

கருத்துகள் இல்லை: