நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 ஜனவரி, 2018

தமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...

கலைமாமணி  ந. மா. முத்துக்கூத்தனார்  (25.05.1925 - 01.05.2005) 

     பலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி . மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாடி தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,

"நீலமா மலைத்தொடரில்
கோலமே மிகுந்த குளிர்
சோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..
ஞாலமே வியந்து நிற்குது

காணவரும் மாந்தருக்குக்
கண்ணிறைந்த காட்சிபல
வேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்
வேட்கையையும் தான்தணிக்குது

வானைமுட்டும் மாமரங்கள்
தானுயர்ந்து நிற்குமதில்
தேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே
தின்றதுபோல் நாவினிக்குது

மானிடர்கள் கைப்படாத
ஓவியங்க ளாக இங்கே
வண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்
பெண்சிரித்தால் போலிருக்குது!   ----  (நீலமா)

நாணி நிற்கும் பெண்ணொருத்தி
போலிருக்கும் பூவிதழின்
மேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது
கோணிக்கொண்டு தானிருக்குது

தேனிலவுக் காக இங்கே
தேடி வரும் காதலர்கள்
வானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த
வையத்தைத் தான் மறக்கிறார்.

தொட்டுப் பழகாத புது
காதலர்கள் இங்கே வந்தால்
ஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்
கட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ..."

என்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.

     ந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் "கிருட்டினன் நாடக சபா", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.

     1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.

     1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.

நாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,

"செந்தமிழே வணக்கம் ...
ஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்"

என்னும் பாடலும்,

திரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,

"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா?" பாடலும்,

அரசகட்டளை படத்தில்,

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை.
ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே
ஆடிவா" என்ற பாடலும்

"எத்தனை காலம் கனவு கண்டேன்
காண்பதற்கு - உன்னைக் -
காண்பதற்கு" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.

தமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.

     கலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்.  ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.

ந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ்த்தினார்.

     கலைவாணரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, "பெரியாருள் பெரியார்" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில்  மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.

     ந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, "என்ன செய்யப் போறீங்க?" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு "ஊமை சாட்சிகள்" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு "எமன் ஏமாந்து போனான்" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, "நூறாண்டு வாழலாம் வாங்க" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.

     பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் "புரட்சிக்கவி" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் "சந்திரமோகன்" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் "கொடை வள்ளல் குமணன்" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் "கலைமாமணி" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).

     1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம்  "பாரதிதாசன் விருதினையும்", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் "நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்" (1998), இலக்கிய வீதி அமைப்பு "தாராபாரதி விருதினையும்" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் "தமிழ்ச்செம்மல் விருதினையும்" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.

     தமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன்  நம் முத்துக்கூத்தரைச், "சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.

ந.மா. முத்துக்கூத்தனின் தமிழ்க்கொடை:

1.   பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)
2.   தமிழிசைப் பாடல்கள்(தொகுப்பு)
3.   பகை வென்ற சோழன்(நாடகம்)
4.   இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)
5.   மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)
6.   துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)
7.   எல்லாரும் நல்லா இருக்கணும்
8.   நெல்லம்மா (கதை-விதை-கவிதை)

குறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களால் பல கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிகிறோம். அவ்வகையில் இன்று கலைமாமணி ந.மா.முத்துக்குகூத்தனாரைப் பற்றி அறிந்தோம். நன்றி.