நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 16 ஜனவரி, 2018

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்




      தமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் இந்த நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. கதைப்போக்கில் இவ்வாறு பலதுறைச் செய்திகளைத் தாங்கி நிற்கும் நூல் உலகில் வேறுமொழிகளில் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குச் சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நூலாக விளங்குகின்றது.

     சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கலைக்கூறுகளை நாம் விளங்கிக்கொள்ள சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை, பஞ்சமரபு வெண்பாக்கள் பெரிதும் துணைசெய்கின்றன. சிலப்பதிகாரத்தின் கதைப்போக்குகளும், உத்திகளும், இசைப்பாடல்களும், கலை வெளிப்பாட்டு முறைகளும் நமக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இக்கட்டுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, இந்த நூல் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றமைக்கான காரணத்தை முன்வைக்கின்றது.

     சிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது. பெரும்பாலும் கல்வியுலகில் இந்தப் பதிகவுரையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இப்பதிகவுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் முன்னுரையாக அமைகின்றது.

     அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.

     நான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களாகிய முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் ஆகியவற்றிற்குரிய ஏறு நிரல் நரம்புகள் இவை இவை, இறங்கு நிரல் நரம்புகள் இவை இவை என்று பதிகவுரையில் அடியார்க்குநல்லார் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை இசை ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்கின்றது. மேலும் ஆதி இசை என்பது முல்லை நிலத்திற்குரிய செம்பாலை (அரிகாம்போதி) என்று சிறப்பித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுந்தது. அதுபோல் நடுவண் திணையாக விளங்கும் பாலை நிலத்திற்குரிய அதாவது அரும்பாலைக்குரிய (சங்கராபரணம்) நரம்புகள் இவை இவை என்றும் அடியார்க்கு நல்லார் தம் பதிகவுரையில் தெளிவுபடுத்தியுள்ளமையும் இசையாய்வுக்கு உரிய அரிய குறிப்புகளாகும். நூல்தரும் குறிப்புகள் நம்மை வியப்புறுத்தி நிற்பதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய அடியார்க்கு நல்லார் உரையும் நமக்குப் பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றது.

காப்பியக் கட்டமைப்பில் புதுமை

     சிலப்பதிகாரத்துக் கதை மக்கள் வழக்கில் இருந்த கதையாக இருந்துள்ளது. அதனை அறிந்த இளங்கோவடிகளார் தம் கலைத்திறன் முழுவதையும் கூட்டிப் பெருங்காப்பியமாகச் செய்துள்ளார். இன்றும் நாட்டார் வடிவில் கோவலன் கண்ணகி கதை வேறு வேறு வடிவங்களில் வழங்குகின்றது. சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகிக்கு இலங்கையின் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. கண்ணகை அம்மன் என்னும் பெயரில் அமைந்த கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. காரைதீவு கண்ணகி அம்மன் கோயில், ஆரையம்பதி கண்ணகியம்மன் கோயில், முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்  உள்ளிட்ட கண்ணகி கோயிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும், நாட்டார் நம்பிக்கைகளும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கன.

     மக்களிடம் பெரு வழக்கில் இருந்த கோவலன் - கண்ணகிக்  கதையை எடுத்துக்கொண்ட இளங்கோவடிகளார் அவர் காலம் வரை பெரு வழக்கில் இருந்த ஆசிரியப்பா வெண்பா வடிவங்களிலிருந்து வேறுபட்டு, இசைப்பாடல்கள் அடங்கிய நூலாகத் தம் காப்பியத்தைச் செய்துள்ளார்.

அரசர்களையும், கடவுளையும் புகழ்ந்து பேசும் மரபிலிருந்து வேறுபட்டு, குடிமக்களைத் தம் காப்பிய மாந்தர்களாக்கிப் புதுமை செய்தார். இயற்கையை வாழ்த்தித் தம் காப்பியத்தைத் தொடங்கி மேலும் புதுமை செய்தார். பின்பு நடக்க உள்ள நிகழ்வுகளை முன்பே குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை அறிமுகம் செய்கின்றார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலம்பு மிளிர்கின்றது.

     சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு....). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த...). அக்காலத்தில் நடைபெற்ற திருமண முறைகளை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றார் (இருபெருங் குரவரும் ஒருபெரு நாளில் மணவணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி..) கண்ணகி கற்பில் சிறந்தவள் என்பதைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் "தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று.." என்று உவமைகாட்டுவது கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்வதாகும். "மயன்விதித் தன்ன மணிக்கால மளிமிசை" இருந்த கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டிப் பேசும் பகுதிகள் காப்பிய ஆசிரியரின் பண்பாடு கட்டிக்காக்கும் பகுதியாகும் (உலவாக் கட்டுரையாக்கிய உள்ளத்து மொழிகளை நினைமின்).

     அரங்கேற்று காதையில் மாதவியின் ஆடலும் பாடலும் அழகும் குறிப்பிடும் வகையில் பண்டைக்காலத்து நாட்டிய மேடையையும், அதனை அணிசெய்து அமர்ந்திருந்த தண்ணுமையாசான், குழலாசான், யாழாசான், தமிழ் முழுதறிந்த புலவர் பெருமகனார் உள்ளிட்ட கலைவல்லார்களையும் காட்டுக்கின்றமைகொண்டு, உலக அரங்கில் இப்பேரிலக்கியத்துக்கு நிகராக ஒரு பாவியம் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.

அந்திமாலை சிறப்புச்செய் காதையில்,

"நிலவுப்பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவியும் புலவியும் காதலற் களித்தாங்
கார்வ நெஞ்சமொடு கோவலற்கெதிரிக்
கோலங்கொண்ட"

மாதவியையும்,

"அஞ்செஞ் சீறடி யணிசிலம்பொழிய
மென்றுகிலல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்குமெழுதாதவளாய்" விளங்கும்
கையறு நெஞ்சத்துக் கண்ணகியையும் அடிகளார் சிறப்பாகப் படைத்துக்காட்டியுள்ளார்.

     இந்திர விழாவின் சிறப்பினையும் பூம்புகார் நகரத்து மக்கள் கடலாடும் காட்சிகளையும் காட்டிய இளங்கோவடிகள் ஏழாம் காதையாக கானல்வரியைப் படைத்து, பண்டைத் தமிழகத்துப் பண்மரபுகளை நிலைப்படுத்தியுள்ளார். கோவலன் இசைக்கத் தொடங்கும் யாழ்க்கருவியை அடிகளார் "மணமகளிர் கோலத்தொடு" ஒப்புமைப்படுத்திக் காட்டி, இக்கருவியின் இசையும், கண்டத்து இசையும் போட்டியிட்டு, இறுதியில் விளரிப்பண்ணாக விரிந்து, கோவலன் - மாதவியின் பிரிவுக்கு இந்தப் பகுதி அடிகோலுகின்றது.

     மாதவியிடம் ஊடல்கொண்ட கோவலன் இல்லம் திரும்புவதும், கண்ணகியுடன் கதிரெழும் முன்னர் பூம்புகார் எல்லை கடப்பதும், கவுந்தியடிகளின் துணையால் நாடு காண்பது, காடு காண்பதும், மாதரி ஐயை தொடர்பால் ஆயர்பாடியில் தங்குவதும், மதுரை நகர் அடைவதும், கோவலன் கொலைக்களப்படுவதும், கண்ணகி வழக்குரைப்பதும், மதுரை மாநகரில் ’தீத்திறத்தார் பக்கம் தீ சேர்வதும்’, பின்னர் பேரியாற்றங்கரையின் வழியில் நடந்து, வேங்கை மர நிழலில் நின்று "வலவன் ஏவா வானூர்தி" ஏறுவதும், குன்றக்குரவர்கள் தம் அரசனான சேரன் செங்குட்டுவனுக்கு நடந்த விவரங்களைக் கூறக் கண்ணகிக்கு கல்லெடுத்து வந்து, படிமம் செய்து, கோயில் எடுப்பித்து, வழிபாடு செய்துவதுமாகக் காப்பியம் நிறைவுக்கு வருகின்றது.

     இளங்கோவடிகள் மூன்று நாடுகளை இணைப்பதும், ஐந்து நிலத்து வாழ்க்கை முறைகளையும் கலைவடிவங்களையும் எடுத்துரைப்பதும் காப்பியத்திற்கு அழகூட்டும் பகுதிகளாகும். முல்லை நிலத்திற்குரிய இசையை (செம்பாலை = அரிகாம்போதி), ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சி நிலத்திற்குரிய இசையை (படுமலைப் பண்   = நட பைரவி) நடுகற்காதையிலும் குன்றக்குரவையிலும் விளக்கியுள்ளார். நெய்தல் நிலத்திற்குரிய விளரிப்பண் (தோடி), செவ்வழிப்பண் ஆகியவற்றை கானல்வரியில் விளக்கியுள்ளார். மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணை (கோடிப்பாலை  = கரகரப் பிரியா) வேனிற் காதையில் விளக்கியுள்ளார். பாலை நிலத்திற்குரிய பண்ணைப் (அரும்பாலை = சங்கராபரணம்) புறஞ்சேரி இறுத்த காதையிலும் விளக்கியுள்ளார். மேலும் அக்காலத்தில் மக்கள் வழக்கில் இருந்த வழிபாட்டு முறைகள், தெய்வ நம்பிக்கைகளையும் தம் காப்பியத்தில் இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், நம்பிக்கைகள் யாவும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.

கதைப்போக்கில் புதுமை

     சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்பொழுதும், கதையை நகர்த்தும்பொழுதும் தேவையான உவமைகள், பொருத்தமான எடுத்துரைப்புகளை அடிகளார் பின்பற்றியுள்ளார். அக்காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்களையும் நமக்கு நினைவுப்படுத்துகின்றார். "சோமகுண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கும்" பழக்கம் இருந்ததை நினைவூட்டுகின்றார். தலைக்கோல் பட்டம் சமூகத்தில் இடம்பெற்றிருந்ததை எடுத்துரைக்கின்றார். கோவலன் கூறும் குறியாக் கட்டுரைக்கு மறுமொழி பேசாத கண்ணகி, பின்னாளில் "பீடன்று", "சிலம்புள கொண்ம்" "மதுரை மூதூர் யாது" என்று அளவொத்த சொற்களைப் பேசுகின்றாள். பின்னர் கண்ணகியை உரிய இடத்தில் இளங்கோவடிகள் வழக்குரைக்க வைத்துள்ளமை காப்பியத்தைக் கற்போருக்கு ஆர்வத்தை உண்டாக்கும் படைப்பு உத்தியாகும்.

     "மாதரார் தொழுதேத்த" என்ற தொடக்கத்தில் குறிப்பிடும் இளங்கோவடிகள் பின்னாளில் இவ்வையம் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றும் வகையில் அவளின் பண்புமேம்பட்ட தன்மையினை வளர்த்தெடுக்கின்றார். கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன் இக்காப்பியத் தலைவிக்குக் கோயில் எடுப்பித்துப் போற்றுவதாலும், கதைத்தலைவி கண்ணகி இலங்கைக்குச் சென்றதாக மக்களிடம் நம்பிக்கை இருப்பதாலும் இது பன்னாட்டுக் காப்பியமாக மிளிர்கின்றது. சிங்கள மக்கள் கண்ணகியைப் "பத்தினி தெய்யோ’ என்று குறிப்பிடுகின்றனர். கேரள மக்கள் "பத்தினித் தெய்வம்" என்று குறிப்பிடுகின்றனர்.

சிலம்பில் இடம்பெறும் இசைப்பாடல்கள்

     சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன. அக்காலத்தில் மக்களிடம் இருந்த இசைவடிவங்களை அடிகளார் "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று தொடங்கும் பாடலே இசைப்பாடலாகும். அதுபோல் கானல்வரியில் இடம்பெறும் பாடல்கள் யாவும் இசைப்பாடல்களே ஆகும். ஆற்றுவரி உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.

     அதுபோல் கந்துகவரி என்ற அமைப்பில் சிலப்பதிகாரத்தில் பாடல்கள் உள்ளன. முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;

`பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்,
ஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்,
ஆம்பல்அம் தீங்குழல் கேளாமோ? தோழி'

`கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன்,
எல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்
முல்லைஅம் தீங்குழல் கேளாமோ? தோழி'

என்னும் ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சிறப்பிற்குரிய பாடல்களாகும்.

 பொன்னிலங்கு பூங்கொடி
           பொலஞ்செய்கோதைவில்லிட 
     மின்னி லங்கு மேகலைகள்
          ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
     தென்னன் வாழ்க வாழ்க என்று
          சென்று பந்த டித்துமே
     தேவரார மார்பன் வாழ்க 
            என்று பந்த டித்துமே.( வாழ்த்துக் காதை 20)

எனத் தொடங்குவன பந்தடிப் பாடலாகும்.

நிறைவுரை

     மக்கள் வழக்கில் இருந்த - மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கதையைத் தம் கலைத்திறமையால் இளங்கோவடிகள் ஈடிணையற்ற காப்பியமாகப் புனைந்துகாட்டியுள்ளமயை அறிந்த பாரதியார் நெஞ்சையள்ளும் சிலம்பு என்று நெஞ்சு நிமர்ந்து உரைத்துள்ளார். வடமொழிக் காப்பியங்களை அறிந்த பாரதியார், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று எழுதிச் சென்றுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்க பாட்டுப் பத்திரமாகும்.

குறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் கட்டுரையாளர் பெயர், எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.




கருத்துகள் இல்லை: