முனைவர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, முனைவர் பா. ஜம்புலிங்கம் பெற்றுக்கொள்ளும் காட்சி
தஞ்சாவூரை அடுத்துள்ள கரந்தைத்
தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா
08.01.2018 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. திருவையாறு
அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் இசைத்தமிழ் ஆய்வறிஞருமான முனைவர் சண்முக. செல்வகணபதி
அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை
வெளியிட்டு, விபுலாநந்த அடிகளாரின் தமிழிசைப் பணிகளையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கிப்
பேசினார்.
விபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகள் ஆய்வு
செய்து, வழக்கிழந்திருந்த யாழினை மீட்டுத் தந்த அருஞ்செயலைப் பாராட்டினார். கரந்தைத்
தமிழ்ச்சங்கத்தில் தங்கி, யாழ்நூலை உருவாக்கினார் எனவும், எனவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில்
இந்த ஒளிவட்டு வெளியீடு காண்பது பொருத்தம் எனவும் குறிப்பிட்டார். யாழ்நூலில் இசைத்தமிழ்
வரலாறு ஆராய்ச்சி முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம்,
திருமுறைகள், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் நூல்களில் இருந்த இசைத்தமிழ்க் குறிப்புகளை
அடியொட்டி, அடிகளார் இந்த யாழ்நூலை உருவாக்கியுள்ளதால் தமிழிசை உலகம் விபுலாநந்த அடிகளாருக்கு
என்றும் கடமைப்பட்டுள்ளது என்று தம் உரையில் முனைவர் செல்வகணபதி குறிப்பிட்டார்.
பேராசிரியர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார்
ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னை உதவிப்
பதிவாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், திருவையாறு தங்க. கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
எழுத்தாளர் கரந்தை. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். கரந்தை உமா மகேசுவரனார் மேல்நிலைப்
பள்ளியின் தலைமையாசிரியர் வெ. சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ந.மு.வேங்கடசாமி
நாட்டார் கல்லூரியின் செயலர் புலவர் இரா. கலியபெருமாள், புலவர் ம. கந்தசாமி ஆகியோர்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின்
இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, தம் ஆவணப்பட அனுபவங்களை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் திரளாகக்
கலந்துகொண்டனர்.
இசையறிஞர் சண்முக. செல்வகணபதியின் சிறப்புரை
ஆவணப்படத்தினை ஆர்வமுடன் காணும் ஆசிரியர்களும், தமிழார்வலர்களும்
1 கருத்து:
மகிழ்வான தருணங்கள் ஐயா
தங்களின் பேருழைப்பு போற்றுதலுக்கு உரியது
கருத்துரையிடுக