நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

புதுச்சேரியில் வ.சுப. மாணிக்கம், க. வெள்ளைவாரணனார் நூற்றாண்டு விழா, நூல் வெளியீட்டு விழா! புதுவை முதலமைச்சர் வே. நாராயணசாமி பங்கேற்பு!


வ.சுப.மாணிக்கம், க.வெள்ளைவாரணனார் திருவுருவப் படத்தினைத் திறந்துவைத்த புதுச்சேரி முதலமைச்சர் திரு. வே.நாராயணசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், க.வெள்ளைவாரணனார் மகள் திருவாட்டி மங்கையர்க்கரசி உள்ளிட்டோர்.

முனைவர் மு.இளங்கோவன்: அகமும் புறமும் நூலினை வெளியிடும் புதுச்சேரி முதலமைச்சர் திரு.வே.நாராயணசாமி அவர்களிடம் முதல்படியைப் பெற்றுக்கொள்ளும் திரு. ஏம்பலம் செல்வம், 
தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள்

தமிழறிஞர்கள் புடைசூழ புதுச்சேரி முதலமைச்சர்
 திரு. வே. நாராயணசாமி அவர்கள்

தமிழ் இலக்கிய உலகில் அனைவராலும் போற்றப்படும் வகையில் ஆராய்ச்சி நூல்களை வழங்கிய வ. சுப. மாணிக்கம்,  . வெள்ளைவாரணனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவினைப் புதுச்சேரியில் உள்ள உலகத் தொல்காப்பிய மன்றம் நடத்தியது(11.02.2017). முனைவர் மு.இளங்கோவனின் பணிகளைக் குறித்து அறிஞர்கள் வழங்கியுள்ள மதிப்புரைகளின் தொகுப்பான முனைவர் மு.இளங்கோவன் அகமும் புறமும் என்ற நூலும் வெளியிடப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூற்றாண்டு விழாக் காணும் தமிழறிஞர்களின் படத்தைத் திறந்து வைத்ததுடன், நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலமையில் நடைபெற்ற விழாவில் முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா. நிர்மலா நோக்கவுரையாற்றினார். சிவ. வீரமணி, புலவர் இ. திருநாவலன், புலவர் கதிர். முத்தையன், தூ. சடகோபன் ஆகியோர் முன்னிலையில் விழா  நடைபெற்றது. மறைந்த தமிழறிஞர்களான கா. மீனாட்சிசுந்தரம், தமிழண்ணல், ச.வே.சுப்பிரமணியன், மணவை முஸ்தபா ஆகியோரின் மறைவுக்கு அக வணக்கம் முதலில் செலுத்தப்பட்டது.  

பேராசிரியர் தெ. முருகசாமி, முனைவர் இளமதி சானகிராமன் ஆகியோர் வ.சுப.மாணிக்கம் குறித்து உரையாற்றினர். பேராசிரியர் கு. சிவமணி க. வெள்ளைவாரணனார் குறித்து உரையாற்றினர்.

தமிழறிஞர்களின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தும், முனைவர் மு.இளங்கோவன்: அகமும் புறமும் என்ற நூலினை வெளியிட்டும் புதுச்சேரி முதலமைச்சர்  வே. நாராயணசாமி உரையாற்றினார்.

மக்கள் தொண்டர் திரு. ஏம்பலம் செல்வம், திருவாட்டி சிவகாமி நாயகர், தழல் ஆசிரியர் திருவாட்டி தா.பெ.அ. தேன்மொழி, திருவாட்டி இராசேசுவரி தமிழ்மணி ஆகியோர் நூலின் முதல் படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார், விழாவில் வெளியிடப்பட்ட நூல் குறித்த திறனாய்வு உரையாற்றினார்.

தமிழறிஞர்கள் ம. இலெ. தங்கப்பா மொழிபெயர்ப்புப் பணிக்காகவும், கு.சிவமணி சட்டச்சொல் அகராதி உருவாக்கியமைக்காகவும், ப.அருளி தூய தமிழ் அகரமுதலி உருவாக்கப் பணிக்காவும்,  தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன் கலிமண்டில இலக்கண நூல் உருவாக்கியமைக்காகவும் புதுச்சேரி முதலமைச்சாரால் சிறப்பிக்கப்பட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் முன்னைப் பேராசிரியர் செ.வை.சண்முகம், பேராசிரியர் க. வெள்ளைவராணனார் மகள் மங்கையர்க்கரசி, மருகர் மருத்துவர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். அரங்க. மு. முருகையன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முனைவர் மு. இளங்கோவன் நன்றியுரையாற்றினார். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள், ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மகிழ்ந்தேன் ஐயா
தங்களின் தேடல் தொடர வாழ்த்துக்கள் ஐயா