நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தனித்தமிழ் மறவர் முனைவர் ந. அரணமுறுவல்
முனைவர்  . அரணமுறுவல்

தமிழ்மொழி வளர்ச்சிக்கு உழைத்த மறவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. தங்களின் வாய்ப்பு வசதிகளுக்கு ஏற்ப எழுதியும், பேசியும், இயங்கியும் தம்மால் இயன்ற உழைப்பை நல்கிய அனைத்துப் பெருமக்களும் தமிழக வரலாற்றில் நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியவர்களே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆங்கில வல்லாண்மை எதிர்ப்புப் போர், தனித்தமிழ் இயக்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், ஈழ விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட தமிழ் - தமிழர் காப்பு முயற்சியில் பங்கேற்றுப் பணியாற்றிய பல்லாயிரக் கணக்கானவர்களின் முயற்சிகள் அறியப்படாமல் உள்ளமை நம் போகூழ் என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தனித்தமிழ்த் தொண்டராகப் பணியாற்றிய முனைவர் ந. அரணமுறுவல் அவர்களின் பணியும் பங்களிப்பும் பதிவுறாமல் உள்ளமையை நினைந்து, கவன்று, கிடைத்த குறிப்புகளைப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் . அரணமுறுவல் கல்லக்குறிச்சி வட்டத்தில் மணிமுத்தாற்றங்கரையில் உள்ள  நயினார்பாளையம் என்ற ஊரில் 20.10.1949 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் நல்லான்பிள்ளை, செல்லம்மாள் ஆவர். ந. அரணமுறுவலின் இயற்பெயர் நாராயணன் என்பதாகும். அரணமுறுவல் தலைச்சன்பிள்ளை. இவருடன் நான்கு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்பிள்ளையும் உடன் பிறந்தவர் ஆவர். பள்ளிப் படிப்பைத் திண்ணைப் பள்ளியில் தொடங்கியவர். நாராயாணசாமி பிள்ளை என்பவர் இவரின் பள்ளி ஆசிரியர். தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் நேரடியாகச் சேர்ந்தவர். சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியில் இவரின் பள்ளிக்கல்வி அமைந்தது.

இவரின் மாமா திரு. அண்டிரன் அவர்கள் வழியாகத் தமிழறிவும், கல்வியறிவும் பெற்றவர். அண்டிரன் அவர்களே இவரை அரணமுறுவலாக வளர்த்தெடுத்தவர். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபாடு கொண்டவராக அரணமுறுவல் விளங்கியவர். ஊரில் இளந்தமிழர் கழகம் நிறுவி உழைத்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புகுமுக வகுப்பில் சேர்ந்து பயின்றவர். பின்னர் பி.ஓ.எல். என்ற பட்டப்படிப்பையும் (1967- 1970) அங்குப் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருக்குத் திராவிடர் கழகத் தொடர்பும், தனித்தமிழ் இயக்கத் தொடர்பும் அமைந்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது தென்மொழி ஏட்டின் தொடர்பு கிடைத்ததும் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டினரானார். உலகத் தமிழ்க் கழகத்தின் தென்னார்க்காடு மாவட்ட அமைப்பாளராகவும், பின்னர் கல்லக்குறிச்சி வட்டத்தின் அமைப்பாளராகவும் பணியாற்றியவர்.

கண்ணம்மா என்ற பெண்ணை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். கடலூர் தென்மொழி அலுவலகத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தலைமையில்  04.06.1971 இல் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு நீலமலை குன்னூர் வள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றியுள்ளார். முதல்மகள் இறைமொழி 03.04.1972 இல் பிறப்பு. இரண்டாவதாக மகன் அறிவுக்கனல் பிறப்பு.

பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ்ப்பணியிலும், அச்சுப்பணியிலும் துணைநின்றவர். தமிழியக்கம், முதன்மொழி என்று பல்வேறு இதழ்களைப் பின்னாளில் நடத்தியவர்.

பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றியுள்ளார். பின்னர்த் திருப்பத்தூர்க் கல்லூரியிலும் பணியாற்றினார். தேவநேயச்சித்திரனுடன் இணைந்து தமிழத்தார் என்ற இயக்கம் உருவாக்கி, உழைத்தவர்.

1978 இல் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர்ப் பகுதி நேரமாக இளம் முனைவர் பட்டம், முனைவர் பட்டங்களைப் பெற்றவர். 1978 இல் விடிவெள்ளி (மானிங்ஸ்டார்) மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. 1983 வரை இப்பள்ளியில் பணியாற்றினார்.

   ஆழ்வார்பேட்டையில் தங்கியிருந்தபொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பில் இருந்தார். செந்தில்நாதனுடன் இணைந்து சிகரம் இதழ்ப்பணியில் துணையிருந்தவர். தினப்புரட்சி ஏட்டிலும், மக்கள் முரசு ஏட்டிலும் பணிபுரிந்தவர். கிரியா தற்கால அகராதி வெளிவரும் பணியிலும் துணைநின்றுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு மலர்ப்பணியில் பெரும்பங்கு வகித்தவர். புலமை இதழ் வெளிவருவதற்கும் துணைநின்றுள்ளார். ’பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் இலக்கிய ஆய்வுமுறை’ என்ற தலைப்பில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் மேற்பார்வையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

1978 இல்  தமிழக ஈழ நட்புறவுக்கழகம் தொடங்கப்பட்டு, பேராசிரியர் இரா. இளவரசு தலைவராகவும், முனைவர் ந. அரணமுறுவல் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டனர். ஈழத்தமிழர் விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் முதல் அமைப்பாக இது தமிழகத்தில் செயல்பட்டுள்ளது. பல்வேறு நூல்களை அச்சிடவும், இதழ்களை வெளியிடவும் அரணமுறுவல் துணைநின்றுள்ளார். மக்கள் செய்தி என்ற இதழில் மெய்ப்புத் திருத்துநராகவும் அரணமுறுவல் பணிபுரிந்துள்ளார். ’இதுதான் ஈழம்’, ’லங்காராணி’(புதினம்-ஆசிரியர்: அருளர் மாஸ்கோ லுமும்பா), போன்ற நூல்வெளியீட்டிலும் பெரும்பங்களிப்பு வழங்கியவர். தமிழ்மண் பதிப்பகம் பதிப்பித்த பல நூல்கள் வெளிவருவதற்குத் துணைநின்றவர். திருவள்ளுவர் அறக்கட்டளையில் இணைந்து பணிபுரிந்தவர்.

தமிழ்ப் பட்டதாரிகள் கழகம் என்ற அமைப்பின் செயலாளராகவும் பணிபுரிந்தவர். தமிழ் உரிமைக் கூட்டமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். தமிழ் வழிக் கல்வி சார்ந்த அமைப்புகளில் பங்களிப்பு நல்கியவர். ஆறுபேர் கூட்டில் ஒப்புரவு அச்சகம் நிறுவி அச்சுப் பணியில் பலருக்கும் துணையாக இருந்தவர். ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனான தொடர்பும் இவருக்கு அமைந்தது; பெரும் பொருளிழப்புக்கு ஆளான இவர், பொருளியல் மீட்சி பெற, சிங்கப்பூருக்குச் சென்று, போதிய ஆதரவு இன்மையால் போன வேகத்தில் திரும்பிவந்தவர்(1987). தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் துணை இயக்குநராகவும், பின்னாளில் செம்மொழி நிறுவனத்திலும் பணிபுரிந்தவர். ந. அரணமுறுவல் அவர்கள் 06.11.2015 இல் தம் மகள் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

எளிய குடும்பத்தில் பிறந்த அரணமுறுவல் படிக்க வேண்டும் என்ற முனைப்புடையவராக விளங்கியுள்ளார். பொருள்நிலையைச் சரிசெய்யவேண்டிய தேவையும், குடும்பக்கடமைகளும், தமிழியக்க உணர்வும் இவர் வாழ்வில் பல்வேறு துன்பங்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளன. அச்சுப்பணி, தமிழ்ப்பணி, இயக்கப்பணி என்று தம் வாழ்நாளைக் கழித்தவராக இவர்தம் பணிகள் நமக்கு நின்று நினைவூட்டுகின்றன. கழக இலக்கியங்களிலும், பிற தமிழ் இலக்கியங்களிலும் நல்ல பயிற்சியுடையவராக இருந்தாலும் படைப்பு நூல்களை இவர் வழங்கவில்லை. பேச்சாளராகவும், கருத்தாளராகவும் தமிழக மேடைகளில் திகழ்ந்த இவரின் வாழ்க்கை ஒரு தமிழியக்கமாக அமைந்திருந்தது. ந. அரணமுறுவலின் பேச்சு, இயக்கம், எழுத்து யாவும் முறைப்படத் தொகுக்கும்பணியில் ஈடுபட்டால் அரிய வரலாற்றுக்குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றுக்குக் கிடைக்கும்.

நன்றி: 
தமிழினச் செயற்பாட்டாளர் ந. அரணமுறுவல் முதலாண்டு நினைவு மலர்,
உலகத் தமிழ்க் கழகம், 288, மருத்துவர் நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை -600 005
பேசி: 0091 945207501

கருத்துகள் இல்லை: