நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 நவம்பர், 2016

உழைப்பில் மலர்ந்த இசைக்கலைஞர் சமர்ப்பா குமரன்…

சமர்ப்பா குமரன்

அண்ணனுடன் உரையாடிக்கொண்டிருந்தபொழுதுஉழைப்பின் ஒலிதான் இசைஎன்று கூறி, மனிதசாரம் நூலை எடுத்து, சார்ச்சு தாம்சனின் அந்த வரிகளைக் காட்டியபொழுது மகிழ்ச்சியடைந்தேன். அந்த நூலில் என் பெயர் எழுதித் தம் ஓவியக் கையெழுத்தால் அழகுபடுத்தி  வழங்கினார். அவர் நினைவாக அந்த நூலைப் பாதுகாப்பதுடன் அந்த வரிகளையும் அவ்வப்பொழுது நினைத்துப் பார்க்கும் வாய்ப்புகள் அமையும். நடவுப்பெண்களின் உழைப்பில் வெளிவரும் பாடல்களைச் சுவைக்கும்பொழுதும், கட்டுமரம் செலுத்துவோர் பாடும் இசையைச் செவிமடுக்கும்பொழுதும், உலக்கை இடிப்போர் விடும் மூச்சுக்காற்றை அருகிருந்து கேட்கும்பொழுதும் அந்த வரிகளின் பொருத்தப்பாட்டை நினைத்து நினைத்து மகிழ்வதுண்டு. எனக்கு நாட்டுப்புற இசையில் ஈடுபாடு வந்ததற்கு அண்ணனின் ஊக்கமொழிகள் முதல் காரணமாகும்.

பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டு வரிகளை உணர்வுபொங்க யாரேனும் மேற்கோள் காட்டிப் பேசினாலும், இசையமைத்துப் பாடினாலும் அதில் வெடித்துக்கிளம்பும் உணர்ச்சிகளைக் கண்டு வியந்து நிற்பேன். பாவேந்தர் வரிகளைத் தேனிசை செல்லப்பா ஐயாவின் குரலில் கேட்கும்பொழுது அந்தப் பாடல் மேலும் உயிர்பெறுவதை எத்தனையோ முறை உணர்ந்திருக்கின்றேன்.. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்களைச் சித்தன் செயமூர்த்தியின் குரலில் கேட்க, மலைத்து நிற்பேன்.

“கனியிடை ஏறிய சுளையும்” என்ற பாவேந்தரின் வரிகளைப் பனப்பாக்கம் நற்றேவன் ஐயா, நெறிமுடியார் என்ற இசையறிஞர் குரலில் பாடச் செய்து தந்த ஒலிவட்டைக் கேட்டு அந்தத் தமிழிசையில் கரைந்துபோன பட்டறிவு எனக்கு உண்டு.

“கனியிடை ஏறிய சுளையும்” என்ற அதே பாவேந்தர் பாடலை அண்மையில் இணையத்தில் ஒளிக்காட்சியாகப் பார்க்கும் பேறு எனக்கு வாய்த்தது. அந்தப் பாடலைப் பாடிய கலைஞரின் பெயர் யாது? என எனக்குத் தெரிந்த அன்பர்களை வினவிப் பார்த்தேன். ஒருவருக்கும் தெரியவில்லை. அண்மையில் சத்தியமங்கலம் சென்று திரும்பும் வழியில் அண்ணன் தேவா பிறந்த ஊரைப் பார்த்துவருவோம் என்று கோபிப்பாளையம் சென்றேன். அங்கு என்னை வரவேற்ற நல்லாசிரியர் அரசு தாமசு அவர்கள் தம் தந்தையாரின் தமிழ்ப்பணிகளை நினைவூட்டி, அப்பாவின் நினைவுநாள் விரைந்து வர உள்ளது என்ற குறிப்பைச் சொன்னார்கள். அந்த நாளில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூட உள்ளதையும் திரு. தாமசு அவர்கள் தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னவாறு விழாவும் நடந்து முடிந்தது. விழாவில் எடுக்கப்பெற்ற படங்களை எனக்கு அனுப்பியபொழுது அந்தப் படத்தில் நான் பலநாள் தேடிக்கொண்டிருந்த, “கனியிடை ஏறிய சுளையும்” என்ற பாடலால் என் உள்ளத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த இசைக்கலைஞரின் உருவம் தெரிந்தது. உடனடியாகத் திரு. தாமசு அவர்களுடன் தொடர்புகொண்டு படத்தில் உள்ள கலைஞரின் பெயர், முகவரி, தொடர்புஎண் பெற்றேன். உடன் அந்தப் பாடகரைத் தொடர்புகொண்டு, அவரைப் பற்றியும், அவரின் பணிகளைப் பற்றியும் செல்பேசியில் தெரிந்துகொண்டேன். உழைப்பில் மலர்ந்த, வியர்வையில் நனைந்த அந்தக் கலைஞரின் வாழ்வை அறிந்து அதிர்ந்துபோனேன்.

ஆம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள மேட்டுக்கடை என்ற ஊரில் வாழ்ந்துவரும் குமரன் என்னும் இசைக்கலைஞர்தான் என்னை இசைவலைவீசிப் பிடித்தவர். 07.07.1965 இல் திருவாளர்கள் நாச்சிமுத்து, அலமேலு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த இவரின் இயற்பெயர் குமரேசன். குமரன் என்று இப்பொழுது அழைக்கப்படுகின்றார். நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபொழுது அம்மா இயற்கை எய்தினார் அத்துடன் படிப்பு நின்றது; மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தும், சவுளிக் கடையில் வேலைகள் பார்த்தும் இவரின் இளமைப் பொழுது கழிந்தது. அதனை அடுத்து தறித்தொழிலில் நுழைந்து தறி ஓட்டுதல், தறி கண்காணிப்பு, தறி வாடகைக்கு எடுத்து ஓட்டுதல் என அனைத்து வேலைகளையும் கற்று, அதில் உழன்றவர்.

இளம் அகவையில் உழைப்புடன் போராட்டக் குணமும் உடன் தொற்றிக்கொண்டது. குழந்தைத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்குக் குரல்கொடுத்து ஒன்றே முக்காலாக இருந்த ஊதியத்தை இரண்டு உருவாவுக்குக் கொண்டுவந்தவர். பொதுவுடைமை இயக்க ஈடுபாடு கொண்டவர். பலவாண்டுகள் அக்கட்சிப் பணிகளில் இருந்தவர். 1996 முதல் 2002 வரை சுமைதூக்கும் தொழிலாளியாக வாழ்ந்து பார்த்தவர். சுமை நிறைந்த மூட்டைகளைத் தூக்கியதால் உடல் மூட்டுகள் தேய்ந்தன.  சுமை தூக்கும் தொழிலிலிருந்து மெல்ல விடுபட்டு, பாடல்கள் பாடத் தொடங்கினார். இவர்தம் பாடல்கள் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், தமிழ் உணர்வாளர்கள் நடுவே வரவேற்பைப் பெற்றன.

1995 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மக்கட் செல்வங்கள் உள்ளனர்

பாவேந்தர் பாரதிதாசன்,  பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன் ஆகியோரின் பாடல்களை உணர்வுபொங்கப் பாடும் இவர் தாமே பாட்டினைப் புனைந்து பாடும் ஆற்றலும் பெற்றவர். தம் இசைக்குழுவுக்குச் சமர்ப்பா இசைக்குழு என்று பெயர் அமைத்தவர். தமிழ் அமைப்புகளின் அழைப்பினை ஏற்று, மேடைகளில் பாடி வருபவர். போக்குவரவுக்கும், வழிச்செலவுக்குமாகக் கிடைக்கும் சிறு தொகையில்தான் இந்த மக்கள் பாடகர் வாழ்க்கை நடத்தி வருகின்றார்.

“கனியிடை ஏறிய சுளையும்” பாடலை இவர் குரலில் கேட்ட பிறகு கனியின் சுளையிலும், கரும்பின் சாற்றிலும், பனிமலர் ஏறிய தேனிலும், காய்ச்சும் பாகிலும் மட்டும் இனிமை இல்லை; சமர்ப்பா குமரன் குரலிலும் இனிமை இருக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.

கோடம்பாக்கத்தை அறிந்துவைத்துள்ள உலகத் தமிழர்கள் இந்தக் குமாரபாளையத்துத் தமிழ்த் தோழரைப் போற்றுவது கடமை!

சமர்ப்பா குமரனின் தேனினும் இனிய குரலில் கனியிடை ஏறிய சுளையும் பாடலைக் கேட்க இங்கே அழுத்துங்கள்.

தொடர்புக்கு: 99763343342 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரியவர்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

வரலாற்று அறிஞர்களையும், தமிழறிஞர்களையும் அறிமுகப்படுத்திய நீங்கள் அருமையான கலைஞனை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.