நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 அக்டோபர், 2016

“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்!” – மதுரை இராம. விசுவநாதனின் பொருள்பொதிந்த வாழ்க்கை நூலுக்குரிய அணிந்துரை
தமிழ்த் தொண்டர் துரை இராம. விசுவநாதன் ஐயா அவர்களை என் மாணவப் பருவத்திலிருந்து அறிவேன். இவர் காரைக்குடியில் வ.சுப. மாணிக்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் தமிழ் கற்ற பெருமைக்குரியவர். இயல்பிலேயே தமிழ்ப்பற்றும், நெறிநூல் பயிற்சியும் கொண்டவர். கடும் உழைப்பால் உயர்ந்து முன்னேறியவர். தம் தொழிலிலும், வாழ்விலும் தமிழைச் செழுமையாகப் பயன்படுத்தும் செவ்விய ஒழங்குடையவர். நாளும் பழகும் நண்பர்களாக இருந்தாலும் தமிழுடன் பிறமொழியைக் கலந்துபேசினால் பெருஞ்சீற்றம் கொள்வார். ஆண்டுதோறும் வ.சுப. மாணிக்கனார் நினைவாக ஏழிளந்தமிழ் உள்ளிட்ட நெறிநூல்களில் போட்டிவைத்து, நன் மாணாக்கரை உருவாக்குவதைத் தொண்டாக நினைந்து வாழ்ந்துவருபவர்.

மதுரை இராம. விசுவநாதனார் அவர்கள் கங்கை காவேரி வாணிகத் தொடர்பு என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதை அறிந்தபொழுது, இப்பெயரைக் கொண்டு இவரின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் வியந்தேன். நெல்லையில் நடைபெற்ற தனித்தமிழ் இலக்கியக் கழக ஆண்டு விழாவில் நம் ஐயா விசுவநாதனார் ஒருமுறை எனக்கு தங்கப்பதக்கம் சூட்டியமை(1994) என் வாழ்வில் நினைக்கத் தகுந்த பொழுதாகும். அன்று முதல் ஐயாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றேன். ஐயாவின் அழைப்பில் மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.

தமிழ்ப்பற்றும், நெறியார்ந்த வாழ்க்கையும் கொண்ட இப்பெருமகனார் தம் பட்டறிவுப் பயனாகப்பொருள் பொதிந்த வாழ்க்கைஎன்னும் பெயரில் இதுவரை 34 தொகுதகளை வழங்கியுள்ளார். இத்தொகுதிகள் மணிவாசகர் பதிப்பகம் வழியாக வந்து, மக்களைச் சென்றடைந்துள்ளது.

அண்மையில் முப்பத்தைந்தாம் தொகுதியை அவர்களின் அரிய கையெழுத்தில் எனக்கு அனுப்பியிருந்தார்கள். வழக்கம்போல் எனக்கிருந்த பல்வேறு பணிகளுக்கு இடையில் அவற்றைப் படிப்பதில் காலம் தாழ்ந்தது. ஒரு மழைப்பொழுதில் எடுத்து அந்தக் கையெழுத்துப் படியைப் படித்தபொழுது, அரிய வாழ்வியல் உண்மைகள் தெறித்துக் கிடப்பதை இனங்காண முடிந்தது.  

அகவலோசையில் அசைந்தோடும் இக்கவிதையாறு இயற்கை, தமிழ், இனிய வாழ்க்கை, உழைப்பின் உயர்வு, ஊக்கத்தின் சிறப்பு,  கடவுள் அன்பு, காதல், மழைநீர், காற்று, தோழமை, கவின்மிகு நட்பு எனப் பல பொருண்மைகளில் அமைந்துள்ளது.

அறிவின் நேயம், மனித நேயம்
நேயம் உடையார் நியாயம் தவறார்
வெளி உடம்பின் அழகு தேயும்
உள் உடம்பின் அழகு வளரும்
உள்ளத்தில் கள்ளம் இல்லையென்றால்
எல்லோரும் இன்புற்று வாழ்வர்

என்று இந்நூலில் இடம்பெற்றுள்ள வரிகளைக் கற்றபொழுது திருவள்ளுவமும், திரு.வி..வின் முருகு குறித்த கட்டுரையும் என் மனத்திரையில் தோன்றி மறைந்தன. ‘மனத்தின்கண் மாசற்ற வாழ்க்கையையே அறவாழ்க்கைஎன்று ஆசான் திருவள்ளுவன் சொன்னதை நம் இராம. விசுவநாதனார் இந்த நூலின் பல இடங்களில் நயம்பட உரைத்துள்ளார். திருக்குறள், புறநானூறு, தாயுமானவர், வள்ளலார் நூல்களின் வரிகள் இந்தப்பொருள்பொதிந்த வாழ்க்கைநூலில் தெளிசாறாக உள்ளன.

இளவயது உடம்பு உயர் கோபுரமாகும்
கிழவயதில் குருவிக் கூடாகி உருக்குலையும்

என்று முதுமை நிலையைக் கண்முன் கொண்டுவருவது இவரின் பட்டறிவாகும்.

மாந்தர்களைப் போல் உலகில் வாழும் பிற உயிர்களும் நெறியுடன் வாழ்கின்றன என்ற இயற்கை உண்மையை உணர்ந்த இராம. விசுவநாதனார் காக்கை, குருவிகளின் கவினார்ந்த வாழ்க்கையை வியக்கின்றார். ஆரவார உலகில் அல்லலுற்று அலையும் மாந்தர்களுக்குப் பின்வருமாறு இயற்கை வாழ்க்கையைக் காட்டுகின்றார்.

காக்கை குருவி
பறப்பதைப் பாரீர்!
பதற்ற மின்றிப் பார்ப்பீர்!
பக்குவம் பெறுவீர்!
பறப்பதைத் தொழிலாகக் கொண்ட பறவைகள்
எங்கெங்கோ பறக்கின்றன.
எவ்விடத்திலும் இளைப்பாறும்.
கிளைகளில் கூடுகள்;
முட்டையிடப் பொந்துகள்;
பொரிக்கும் குஞ்சுகளைக்
கொஞ்சுவது சில நாட்களே!
பறவைகள் குஞ்சுகளுக்கு
இரையூட்டும் காட்சி,
பெற்ற தாய் மகவுக்குப் பாலூட்டும் காட்சியே!
தாய்மைப் பண்பினை,
உயிர்களுக்கு வேர் என்போம்

என்று முடிக்கும் இவரின்  உயிர் நேயம் இந்த வரிகளால் புலப்படுகின்றது.

இயற்கையையும் வாழ்க்கையையும் மட்டும் இராம. விசுவநாதனார் பாடவில்லை. காவிரி நீரின் உரிமை, பாலாற்றின் உரிமை, திருப்பதியின் உரிமை, தேவிகுளம், பீர்மேட்டு உரிமை என்று தமிழர்களின் இழந்த உரிமைகளையும் இந்தப் பாட்டுப் பனுவலில் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் வாழ்க்கை வாழ்ந்து, நிறைபுலமை பெற்ற திரு. இராம. விசுவநாதனாரின் தமிழ் உணர்வு இளைஞர்கள் பெற வேண்டிய உணர்வாகும். அவர்தம் வாழ்க்கைப் பாடம் நாம் படிப்பதற்கு மட்டுமன்று. பின்பற்றுவதற்கும் உரியது. இராம. விசுவநாதனார் பல்லாண்டு வாழ்ந்து பைந்தமிழுக்கு இன்னும் நிறைந்த நூல்களை வழங்க வேண்டுகின்றேன்.

பணிவுடன் / மு.இளங்கோவன் / 22.11.2015

நூல்: பொருள் பொதிந்த வாழ்க்கை
வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
விலை: 40 - 00 உருவா

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

அருமையான நூல் பகிர்வுக்கு நன்றி. நூலைப் படிக்கும் வகையில் அமைந்துள்ளது அணிந்துரை.