நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இணையதிபர் தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் இயற்கை எய்தினார்!தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் 
இணையதிபர், காசித் திருமடம், திருப்பனந்தாள்,

திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் இணையதிபராக விளங்கிப் பல்வேறு சமயப் பணிகளையும், கல்விப் பணிகளையும் திறம்படச் செய்துவந்த தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் நேற்று (19.09.2016) இரவு எட்டு மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து பெரிதும் வருந்துகின்றேன். திருமடத்திற்குச் செல்லும்பொழுதும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்பொழுதும் மிக நெருங்கிய நண்பர்களிடம் பழகுவதுபோல் அன்புகாட்டி விருந்தோம்பும் பண்பை அடிகளாரிடம் கண்டுள்ளேன். தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தொடர்வண்டித்துறையில் அரசுப்பணியில் இருந்தவர்கள்; விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சமயப்பணியாற்ற வந்தவர்கள். தம் ஓய்வு ஊதியப் பயன்களை மாணவர்களின் கல்வி உதவிக்கும் சமயப் பணிகளுக்கும் வழங்கி மகிழ்ந்தவர். தவத்திரு அடிகளாரைப் பிரிந்து வருந்தும் அனைவருக்கும் என் ஆழ்ந்த துயரினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களின் துயரில் நானும் பங்கேற்கின்றேன். “நீரில் எழுத்தாகும் யாக்கை” என்ற தமிழ்மாமுனிவர் குமரகுருபர சுவாமிகளின் வரிகள் நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் தரட்டும்.

கருத்துகள் இல்லை: