நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 பிப்ரவரி, 2016

பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு: ஒரு புதிய நோக்கு - அணிந்துரை
தமிழரின் தொன்மை காட்டும் ஆவணம்!


“பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்த குடி” – புறப்பொருள் வெண்பா மாலை

புறப்பொருள் வெண்பாமாலை எனும் இலக்கண நூலில் இடம்பெறும் மேற்கண்ட வெண்பாவை இளமையில் படித்து மனப்பாடமாக மனத்துள் தேக்கியிருந்தாலும் இந்தப் பாடலடிகள், உண்மை உணர்ந்து எழுதப்பட்ட தமிழகச் சான்று ஆவணம் என்பதை அண்மைக் காலமாகத்தான் யான் உணர்ந்தேன்.

பல்லாயிரம் ஆண்டு இலக்கணப் பின்புலமும், இலக்கிய வளமும் கொண்டு, வாழும் மொழியாக வையகத்தில் விளங்கும்மொழி தமிழ்மொழியாகும். இம்மொழி பேசும் மக்கள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிக வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் துணிகின்றனர், கடல்கொண்ட குமரிக்கண்டம் பற்றியும், சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் நாம் உரைக்கும் உரைகளை உலகத்தினர் உற்றுக் கவனித்தாலும் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றனர். அண்மைக்காலமாகத் தமிழகத்தில் நடந்துள்ள அகழாய்வுகளும், கிடைத்துள்ள சான்றுகளும் நம் எண்ணங்களை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்க உதவுவன. இவ்வகையில் புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கா. இராசன் அவர்களின் ஆய்வுமுயற்சி தனித்துச் சுட்டத்தக்கதாகும். இவரின் ‘பொருந்தல்’ ஆய்வு அரிய முடிவுகள் பலவற்றைத் தர உள்ளன.

அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவுகளும் செம்பியன் கண்டியூர், பொருந்தல்,  கீழடி பள்ளிச்சந்தை புதூர்(சிவகங்கை மாவட்டம்) முதலான ஊர்களில் கிடைத்துள்ள அண்மையச் சான்றுகளும் தமிழர்களின் தொன்மை வரலாற்றை மிகச் சிறப்பாக மெய்ப்பிக்க உதவுவனவாகும்.

உலக நாகரிக இனங்களுள் முந்திய நாகரிக இனம் தமிழினம் என்பதை நிலைப்படுத்த சான்றுகள் முன்பே கிடைத்துள்ளன. எனினும் தமிழர்களிடம் விழிப்பின்மையாலும், வீறு இன்மையாலும், அளவுக்கு மீறிய தன்னடக்கத்தாலும் உலகத்திற்கு நம் சிறப்புகளை இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளோம்.

பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் இடம்பெறும் நகர அமைப்புகள், வணிகவளம், மக்கள் வாழ்க்கைமுறை இவற்றை அறியும்பொழுது பூம்புகாரில் வாழ்ந்த தொன்மைமக்கள் பற்றி ஓரளவு கணிக்க முடிகின்றது. அண்மையில் நடந்த பூம்புகார் கடலாய்வுகள் சில உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் முழு உண்மையையும் வெளிப்படுத்த இயலாதவர்களாகப் பல தலைமுறைகளைக் கழித்துள்ளோம் என்பது மட்டும் உறுதி. நம் வரலாற்றை மெய்ப்பிக்கும் சான்றாவணங்கள் பலவும் இன்னும் வெளிக்கொணரப் படாமலும், வரலாற்று ஆய்வில் போதிய ஆர்வம் இல்லாமலும் நம் மக்கள் உள்ளனரே என்று கையற்ற நிலையில் கவலையொடு இருந்தபொழுதுதான்  பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் எழுத்தாவணம் கண்டு இறும்பூது எய்தினேன்.


பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடுஒரு புதிய நோக்கு என்ற அரிய நூலினைப் படிக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. தமிழ்ப்புலமை மிக்க பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் மொழிப்பற்றுடனும், இனப்பற்றுடனும் நாட்டுப்பற்றுடனும் இந்த நூலை இயற்றியுள்ளார். பண்டைத் தமிழர் பண்பாடு குறித்துப் பல நூல்கள் வெளிவந்திருப்பினும் இந்த நூல் பலவகைச் சிறப்புகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. இலக்கணம், இலக்கியம், தொல்லியல், அகழாய்வு, வரலாற்றுத்துறை சார்ந்த பல நூல்களைக் கற்றுப் பேராசிரியர் அவர்கள் இந்த நூலைத் தமிழுலகிற்கு வழங்கியுள்ளார். இவர்தம் இத்தகு பணிக்கு நாம் அனைவரும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

உலகில் தோன்றிய முதல்மாந்தன் தமிழன் எனவும் அவன் தோன்றிய இடம் கடலுள் மறைந்த குமரிக்கண்டம் எனவும் குமரிக்கண்ட மாந்தன் பேசிய தமிழ்மொழியே உலகில் தோன்றிய முதல் மொழி எனவும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் ஒப்பியன் மொழிநூல் உள்ளிட்ட தம் நூல்களில் குறிப்பிடுவார். தமிழர்களின் தோற்றப் பரவல் குறித்தும், தமிழ்மொழி குறித்தும்,  பாவாணர் மொழிந்த கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு, தென்திசையிலிருந்து தமிழக வரலாற்றைத் தொடங்கி எழுதுவதற்குத் தனித்த நெஞ்சுரமும், வாலறிவும் தேவை. பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களிடம் இவற்றைக் கண்டு வியந்தேன். தெற்கிலிருந்து வரலாறு தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற கூற்று முன்னேற்றமடைந்து தென்திசையில் பிறந்த பேராசிரியரே தெற்கிலிருந்து வரலாற்றைத் தொடங்கி எழுதி வெற்றிபெற்றுள்ளார் என்று குறிப்பிட விரும்புகின்றேன்.

தமிழ்மொழியின் தொன்மையை ஆராய்ந்து விளக்கியுள்ளமையும், பண்டைத் தமிழகத்தில் நடந்த ஆழிப்பேரலை அழிவுகளைத் தக்க சான்றுகளுடன் நிறுவிக் காட்டியுள்ளமையும் பாராட்டிற்குரிய முயற்சிகளாகும். மறைந்துபோன குமரிக்கண்ட வரலாற்றை உலக மாந்தப்பரவலுடன் இணைத்துக் காட்டுவதற்கு நூலாசிரியர் எடுத்து அடுக்கும் சான்றுகள் இவரின் பன்னூல் பயிற்சியையும், தமிழ்ப்பற்றையும் காட்டுகின்றன. முச்சங்க வரலாறு பற்றியும் இந்த நூலில் செய்திகள் விரிவாக இடம்பெற்றுள்ளன.

முகைந்த தரை(மொகஞ்சதாரோ), அரப்பா நாகரிகம் பற்றி விளக்கும்பொழுது உலக நாகரிகங்களை எடுத்துக்காட்டி விரிவாக விளக்குவது நூலாசிரியரின் வரலாற்று அறிவை நமக்கு வெளிப்படுத்துகின்றது.

பண்டைத் தமிழர்கள் பற்றி விளக்கும்பொழுது தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலில் உள்ள அரிய செய்திகளை நினைவுகூர்ந்து எழுதியுள்ளமை இந்நூலில் இவருக்கு இருக்கும் புலமையுரைப்பனவாகும். புறநானூறு உள்ளிட்ட நூல்களில் உள்ள அரிய வரலாறு விளக்கும் வரிகளையெல்லாம் பொருத்தமுற எடுத்துக்காட்டிக் கற்பார் உள்ளத்தில் களிப்பை ஏற்படுத்தியுள்ளார். வரலாற்றுச் செய்திகளை மட்டும் குறிப்பிடாமல் இலக்கியச் சுவையுணர்த்தும் வரிகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதால், நூலைக் கற்ற பிறகு தமிழ் இலக்கியச் சுவையுணர்ந்தவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.

தமிழ் எழுத்துகள் பற்றி விரிவான ஆய்வினை இந்த நூலில் நூலாசிரியர் நிகழ்த்தியுள்ளார். சிந்து சமவெளி எழுத்துகளையும், பிற பாறை ஓவிய எழுத்துகளையும், நாணயங்களில், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளையும் சான்றுகளாகக் கொண்டு தமிழ் எழுத்து வரலாற்றை நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். “தமிழகத்தில் பிராமி எழுத்துக்கள் அறிமுகம் செய்யப்படும் முன்னரே தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் பற்றி ஆராய்ந்து இலக்கணம் வகுத்துக் கூறினார்” என்று பேராசிரியர் இ. பாலசுந்தரனார் குறிப்பிட்டுள்ளமை அவரின் தமிழ்ப்பற்றிற்கும் தமிழுள்ளத்திற்கும் சான்றாக நிற்கும் இடமாக நான் கருதுகின்றேன்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பண்டைத் தமிழகம் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் ஈழத்தையும் இணைத்துப் பேசியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். தமிழகத்து மக்கள் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முதன்மைமிக்க ஊர்களையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிவார்களேயன்றி இலங்கையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறிய வாய்ப்பில்லாமல் இருந்தனர்; இந்த நூலில்தான் இலங்கையில் உள்ள சில வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பழைய ஊர்கள் எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதி நாகதீபம், தென்பகுதி தாமிரபரணி(தம்பண்ணை-பாலிமொழி) என்ற குறிப்பும், மாந்தை(மன்னார் மாவட்டம்), பொன்பரிப்பு(புத்தளம் மாவட்டம்) ஊர் குறித்த செய்திகள் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெரும்பயன் நல்குவனவாகும்.

தமிழர்களின் இசையறிவு, சிற்ப அறிவு, கலையறிவு இவற்றைச் சிறப்பாக விளக்கியுள்ளதுடன் தமிழர்களிடம் இருந்த இறையுணர்வு குறித்தும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூலில் ஈழத்து அறிஞர் விபுலாநந்தர் பாபிலோனியர்கள், சுமேரியர்கள் குறித்து எழுதியுள்ள கருத்துகள் பொன்னேபோல் எடுத்தாளப்பட்டுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.

பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் பண்டைத் தமிழகத்தின் சிறப்பினை இலக்கியச் சான்றுகள், இலக்கணச் சான்றுகள், தொல்லியல், அகழாய்வுச்சான்றுகளின் துணைகொண்டு மிகச் சிறப்பாக இந்த நூலில் வரைந்துகாட்டியுள்ளார். பன்னூற் புலமையும், பயிற்சியும், வரலாற்று ஈடுபாடும் உள்ள பெருமக்களால்தான் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு வெற்றிபெற இயலும். ஈராசு பாதிரியார் தொடங்கி இற்றைப் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்போலா வரை உள்ள அறிஞர்களின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு இந்த நூலைத் தமிழர்களின் விடியலுக்காக எழுதியுள்ள பேராசிரியர் அவர்களின் தமிழ்த்தொண்டினை நெஞ்சாரப் போற்றக் கடமைப்பட்டுள்ளேன்.


பேராசிரியர் அவர்களுக்கு நிறைவாழ்வும். நல்உடல் வளமும் வாய்க்க உளமார வாழ்த்துகின்றேன். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களுக்குத் தமிழன்னை அனைத்து நலன்களையும் வழங்கி மகிழ்வாளாக!

நூல் கிடைக்குமிடம்: மணிமேகலைப் பிரசுரம், சென்னை - 17

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

நல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி.