நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 13 பிப்ரவரி, 2016

இசை ஆய்வாளர் முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்…


முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டுக்குச் சென்றிருந்த நேரம் (28.12.2012). அந்த நாளில் மக்கள் அரங்கில் தமிழ் இணையத்தை எளிமையாக மக்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வந்த அம்மையார் ஒருவர் இணையம் குறித்து சில ஐயங்களை எழுப்பித் தெளிவுபெற்றுக்கொண்டிருந்தார். தம்மை ஓர் இசை ஆய்வாளர் எனவும், தம் கணவர் முனைவர் கிரீஷ்குமார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் புல்லாங்குழல் பயிற்றுவிக்கும்  உதவிப் பேராசிரியர் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். என் முயற்சிகளை அவ்வப்பொழுது செய்தி ஏடுகளிலும் பொதிகைத் தொலைகாட்சியிலும் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். அன்றுமுதல் ஏற்பட்ட நட்பு இன்றுவரை வளர்பிறையாக வளர்ந்து வருகின்றது.

முனைவர் சிவகௌரி அவர்கள் இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். இவர்தம் குடும்பம் இசைக்குடும்பமாகும். பெற்றோர் திருவாளர்கள் சோமாஸ் கந்த சர்மா, சாரதாம்பிகையாவர். இளம் அகவை முதல் இசையில் ஈடுபாட்டுடன் விளங்கிய முனைவர் சிவகௌரி அவர்கள் தொடக்கத்தில் தம் அத்தை சி. சந்திராதேவி அவர்களிடம் தொடக்கநிலை இசையறிவு பெற்றவர். முறைப்படி இசைபயில, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வந்து,  மூன்றாண்டுகள் இளங்கலை - இசை பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இசை பயின்றவர். அவ்வேளையில் கலைமாமணி சுகுணா புருஷோத்தமன் அவர்களிடம் மேல்நிலை இசைநுணுக்கங்களை அறிந்தவர். மேலும் முனைவர் ந. இராமநாதன், முனைவர் ஆர். எஸ். ஜெயலட்சுமி உள்ளிட்ட இசையறிஞர்களிடமும் இசைநுட்பங்களை அறிந்தவர். இளம் முனைவர், முனைவர் பட்டங்களைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

  திருமுறைகளைப் பாடுவதற்குக் குமாரவயலூர் திரு. பாலச்சந்திர ஓதுவார் அவர்களிடம் தனிப்பயிற்சி பெற்றவர்.

மகாவித்துவான் திரு. வா. சு. கோமதி சங்கர ஐயரின் தமிழிசைப்பணி என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்து கோமதி சங்கர ஐயரின் வாழ்வியலையும், தமிழிசைப் பணிகளையும் ஆய்வுலகுக்கு வழங்கியவர். இந்த ஆய்வேடு  கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாறு, கோமதி சங்கர ஐயரின் தமிழிசை ஆய்வுகள், கோமதி சங்கர ஐயர் இயற்றிய இசைத்தமிழ் இலக்கண விளக்கம், கோமதி சங்கர ஐயர் இயற்றிய தமிழிசைப் பாடல்கள், கோமதி சங்கர ஐயர் பிறருடைய பாடல்களை இசையமைத்த முறைகள், கோமதி சங்கர ஐயரின் இசை கற்பிக்கும் முறைகள் என்னும் தலைப்பில் அமைந்து, அரிய செய்திகளின் களஞ்சியமாக விளங்குகின்றது. ஆய்வேட்டின் பின்னிணைப்பில் கோமதி சங்கர ஐயரின் வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புடைய படங்கள், அவர் இயற்றிய பாடல்கள், அவர் நூல்களில் உள்ள இசைவடிவங்கள், அவரின் வெளிவராத பாடல்கள், அவரின் இசை இலக்கண ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி, இசையாய்வு உலகிற்குப் பெருங்கொடையாக உள்ளது. கோமதி சங்கர ஐயரின் பாடல்கள் ஆய்வாளரால் பாடப்பட்டுக் குறுவட்டாக இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

முனைவர் சிவகௌரி அவர்கள் பாடுதுறை வல்லுநர் ஆவார். திருமுறைகளையும் திருப்புகழ்ப் பாடல்களையும் தமிழிசை நுட்பம் வெளிப்படும் வகையில் பாடக்கூடியவர். “இனிமை மிகு இலங்கைத் திருப்பதிகங்கள்” என்ற தலைப்பில் இவர் பாடி வெளியிட்டுள்ள குறுவட்டு, திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டது (2014).

சிதம்பரத்தில் வாழ்ந்துவரும் முனைவர் சிவகௌரி அவர்கள் திருமுறைகளைப் பயிற்றுவிப்பதையும், தமிழிசையைப் பயிற்றுவிப்பதையும் ஆர்வமாகச் செய்துவருகின்றார். அயல்நாட்டு மாணவர்கள் பலர் இணையம் வழியாக இவரிடம் இசையையும், திருமுறைகளையும் பயின்று வருகின்றனர்.

தமிழிசை ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாடுதுறை வல்லுநர் முனைவர் சிவகௌரி அவர்களைத் தமிழிசை மேடைகளில் பாடச் செய்து, அவர்தம் தமிழிசை ஆய்வுத்திறத்தைப் போற்றலாம்.

 முனைவர் சிவகௌரி அவர்களின் மின்னஞ்சல்: gsivagowri@gmail.com 

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

இசையறிஞரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.