க.முருகன்
செவ்விலக்கியச் சிந்தனைப்
புதையல், கட்டுரைக்
களஞ்சியம் என்னும் இரண்டு நூல்களையும் 2013, சூன் 7 இல் மலேசியாவில் வெளியிடுவதற்குரிய வகையில் அண்ணன் மன்னர் மன்னன் அவர்கள் ஏற்பாடுகள்
செய்திருந்தார். அந்த நூல் வெளியீட்டு விழாவில் ஒளி ஓவியர் ஒருவர் சிறப்பாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அகவை நிரம்பியிருந்த அந்தப் பெருமகனாரிடம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட
ஒளிப்படங்களை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்களும்
சொன்னவண்ணம் எனக்குப் படங்களை அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்குத்
தொலைபேசி வழியாக என் நன்றியைத் தெரிவித்தேன்.
பின்பொருமுறை குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படத்தை
அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியொன்றை மலேசியத் தமிழ்வள்ளல் ஐயா மாரியப்பனார் கிள்ளான்
நகரில் ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கும் மேலே குறிப்பிட்ட
ஒளி ஓவியர் வந்திருந்து, உரை நிகழ்த்தினார். ஒளி ஓவியர்கள் பெரும்பாலும் தம் தொழிலுடன் நிறுத்திக்கொள்வார்கள். சிலர் சமூக அக்கறையுடன் கூடுதல் பணிகளையும் செய்வதில் ஈடுபடுவார்கள்.
நம் ஒளி ஓவியர் பன்முகத் திறமையுடையவர். ஒளி ஓவியரைத்
தனித்து நிறுத்தி உரையாடினேன். அவர் ஆசிரியர் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும்,
நாடகத்துறையில் ஈடுபாடு உடையவர் என்பதும் பின்புதான் தெரிந்தது.
அவரிடம் மலேசியத் தமிழர்கள் குறித்தும், தமிழர்களின்
பண்பாடு குறித்தும் அரிய செய்திகள் உள்ளமையை உரையாட்டின் வழியாக ஒருவாறு உணர்ந்துகொண்டேன்.
மலேசியத் தமிழர்களின் வரலாறு, கலை, பண்பாட்டுக்கூறுகள், தமிழ்க்கல்வி வரலாறு குறித்த விவரங்கள்
அண்மையில் எனக்குத் தேவைப்பட்டன. ஒளி ஓவியர் அவர்களின் நினைவுதான்
முதலில் வந்தது. உடனடியாக நம் ஒளி ஓவியரைத் தொடர்புகொண்டேன்.
தமக்குத் தெரிந்த விவரங்களை அழகாகப் பட்டியலிட்டு உதவினார்கள்.
ஒளி ஓவியராகவும், நாடகக் கலைஞராகவும்,
நல்லாசிரியராகவும் விளங்கும் அப்பெருமகனாரின் பெயர் க. முருகன் ஆகும். அவர் தம் பணிகளுள் இரண்டினைச் சிறப்பாகக்
குறிப்பிட வேண்டும். 1. சிலாங்கூர் மாநிலத்
தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் (2012), 2. சிலாங்கூர்
மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) (2015) என்னும் இரண்டு அரிய நூல்களை வழங்கியவர். அரிய ஆய்வுத் தரம் கொண்ட நூல்களைத் தமிழுலகுக்கு
வழங்கிய க. முருகன் அவர்கள் போற்றிப் பாராட்டப்பட வேண்டிய பெருமகனார்
ஆவார்.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் மிகச்
சிறந்த தமிழ்ப்பற்றுடையவர்கள். தாயகத்திலிருந்து யார் சென்றாலும் அவர்களை அன்புடன்
வரவேற்று விருந்தோம்புவதை ஒவ்வொரு மலேசியத் தமிழர்களும் சிறப்பாகச் செய்வார்கள்.
இவர்களின் பண்புகளைப் பெறவேண்டியவர்களாக நாமும் உள்ளோம். தாயகத்தாராகிய நாம்
மலேசியாவிலும், மற்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் படைக்கும் அரிய படைப்புகளைத்
தமிழகத்தில் வரவேற்றுப் படிக்க வேண்டும். தக்க நூல்களை அறிமுகம் செய்ய வேண்டும்.
ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றும் நடைபெறும் சிறு
முயற்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழார்வலர்களை வேண்டுகின்றேன்.
மலேசியாவைப் பொறுத்தவரை நம் தமிழ் மக்கள்
குடியேறியவர்களின் மரபு வழியினராகவே உள்ளனர்.
தாயகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலைகள், சிறு
தெய்வ வழிபாடுகள், தோட்டப்புறப் பாடல்கள் உள்ளிட்ட பண்பாட்டுக்
கூறுகளைத் தொகுத்துப் பாதுகாக்கவும், தமிழர்களின் வரலாறு குறித்த
ஆவணங்களைத் திரட்டி வழங்கவும் அங்குள்ள தமிழார்வலர்களும், தமிழமைப்புகளும்
முன்வரவேண்டும். இம்முயற்சியில் ஈடுபட்டவர்களை ஊக்கப்படுத்துவது
நம் கடமையாக இருக்க வேண்டும்.
திரு. முருகன் அவர்கள் உருவாக்கியுள்ள சிலாங்கூர்
மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாறு (நேற்று, இன்று, நாளை) என்னும் நூலில் மலேசியாவில் தமிழ்க்கல்வியின் தோற்றம் பெற்ற வரலாறு விரிவாகத்
தரப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப் பள்ளிகளின் வரலாறு சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தின் ஆசிரியராகவும், அமைப்பாளராகவும்
இருந்து பணிபுரிந்ததால் தமிழ்க்கல்வி குறித்த அரிய வரலாற்றுச் செய்திகளை முழுமைப்படுத்தி,
படத்துடன் நமக்கு வழங்கியுள்ளார். இந்த நூலினை
நம் கல்வித்துறை, நூலகத்துறை வாங்கி ஆதரிக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தேடிப்பிடித்து இந்த நூல்களை வாங்கித் தம் இருப்பில்
வைக்க வேண்டும். இந்த நூலாசிரியரைத் தமிழகத் தமிழாசிரியர்களும்
கல்வியாளர்களும் அழைத்துப் பாராட்ட வேண்டும்.
திரு. முருகனின் ‘சிலாங்கூர்
மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள்’ என்னும் நூல் மலேசியத்
தமிழ் நாடகத்துறை வளர்ச்சியை நமக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் பள்ளி மேடைகளின் வழியாகத் தமிழ் நாடகங்கள் எவ்வாறு வளர்ச்சி
பெற்றன என்பதை அரிய படங்களுடன் நூலாசிரியர் வழங்கியுள்ளார். ஈடுபாட்டு
உணர்வுடன் வெளிவந்துள்ள இந்த நூலும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய நூலாகும்.
மலேசியாவில்
உள்ள பால்மரக் காட்டில் உழைத்து, முன்னேறிய குடும்பத்தில்
திரு. முருகன் அவர்கள் பிறந்தவர். பால்மரத் தொழிலின் அனைத்துப்
பணிகளையும் அறிந்தவர். படித்து, பணியில்
இணைந்து, தம் எழுத்தாற்றலாலும் தமிழ் ஈடுபாட்டாலும்
தமிழர்களின் வாழ்வியல் பகுதிகளை ஆவணப்படுத்திய பெருமைக்குரியவர்.
தாமே மிகச் சிறந்த நடிகராகவும் விளங்குபவர். தமிழகத்து நாடக நடிகர்கள், திரைக்கலைஞர்களின் நடிப்பாற்றலை
உள்வாங்கிக்கொண்டு இவர் மலேசியா மேடைகளில் சிறப்பாகத் தம் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துபவர். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் உச்சரித்த
ஒவ்வொரு வசனங்களையும் இவர் தம் மனத்தில் தேக்கிவைத்துள்ளமை பாராட்டிற்குரிய ஒன்றாகும்.
தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்களின் சிறுதெய் வழிபாடு, அவர்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்கள் குறித்த தகவல்களை அறிந்துவைத்துள்ள இவர்தம்
வாழ்க்கையினை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.
க.முருகன் அவர்கள் மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் பத்தாங் பெர்ஜுந்தை, சுங்கை திங்கி தோட்டத்தில் 17. 05. 1950 அன்று பிறந்தவர். இவர்தம் பெற்றோர் திருவாளர்கள் சி. கண்ணன், சின்னகண்ணு ஆவர். முருகனின் தாத்தா திரு. சின்ன முருகன் அவர்கள் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்குச் சென்றவர்.
க.
முருகன் அவர்கள் சுங்கை ரம்பைத் தோட்டத்
தமிழ்ப் பள்ளியில்
1 முதல் 6 ஆம் வகுப்பு
வரை பயின்றவர்
(1957 – 1962). கம்போங் குவந்தான் ஆங்கில இடைநிலைப்
பள்ளியில் புகுமுக வகுப்பு முதல் பாரம் 2 வரை (1963 – 1965) பயின்றவர். 1966 சுல்தான் சுலைமான் ஷா இடைநிலைப்பள்ளியிலும்
(பாரம் 3), 1967
சுல்தான் அப்துல் அஜீஸ் இ.நி.பள்ளியில் 1968 – 1969 (பாரம் 4
& 5) பயின்றவர்.
1970 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1972
ஆண்டு வரை ரப்பர் தோட்டத்தில் (குமாஸ்தா)
பணிபுரிந்தவர். 1972 அக்டோபர் முதல் 1975 வரை தற்காலிகத்
தமிழாசிரியராகக் கேரித் தீவில் உள்ள கிழக்குத் தோட்டத்
தமிழ்ப்பள்ளியில் பணியாற்றியவர்.
1975
முதல் 1978 வரை பகுதி நேர ஆசிரியர் பயிற்சி பெற்று, 1978
முதல் 1983 ஆண்டு வரை பயிற்சி பெற்ற ஆசிரியர் என்ற
நிலையில் கேரித்தீவு, கிழக்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணிபுரிந்தவர்.
1984
– ஜூலை முதல் 1997 வரை சிலாங்கூர் மாநிலம் கோல
லங்காட் மாவட்டம், தெலுக் பங்லீமா காராங்
தமிழ்ப்பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1997, ஆகஸ்ட் 16 முதல் 2000 ஜூலை 31 வரை கேரித்தீவு மேற்குத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1998
– 1999 - கல்வி தொடர்பான
டிப்ளோமா பட்டயம் பெற்று, 1.8.2000 முதல் 16.05.2006 வரை சிலாங்கூர் மாநிலத்
தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் (Selangor State Tamil School Organizer) என்ற நிலையில் பணிபுரிந்தவர். தமிழ்ப் பள்ளிகளுக்கான
கணித பாட (1,2,3 ஆம் வகுப்புகளுக்கான) நூல்களை எழுதியவர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கணித பாட
தன்முனைப்பாளராகப் பணியாற்றியவர். 1996
– 2000 வரை 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ்
மொழிச் சோதனைத் தாள் திருத்துநர்களுக்குத் தலைமையாளராகப் பணியாற்றியவர்.
பெற்ற
விருதுகள்:
அரசு வழி
- சிலாங்கூர் மாநில சுல்தான் வழங்கியது – AMS (2002)
மலேசிய மாமன்னர் வழங்கியது -
AMN (2004)
கல்வித்துறை வழி - கோல லங்காட் மாவட்ட நிலையில் ஆசிரியர் மணி
விருது (2009)
கலையுலகப் பணி:
தமிழ்க்கல்வி
கலை கலாச்சார சங்கத்தின் தலைவர் (2007 முதல் இன்று வரை)
மலேசியத்
தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நாடகப் பயிற்சியளித்துத் தமிழ் நாடங்கள் மலேசியாவில்
வளர்ச்சி பெறுவதற்கு ஆண்டுதோறும் நாடக நிகழ்வுகளை நடத்தி, பரிசளித்துப் பாராட்டும்
இவரின் முயற்சி போற்றத்தக்கது.
மலேசியத் தமிழர்களின் பண்பாடுகள் குறித்த
நூல்களையும் எழுதி உதவும்படி நல்லாசிரியர் க.
முருகன் அவர்களை வேண்டுகின்றேன்.
திரு.க. முருகன் அவர்கள் நிறைவாழ்வு
வாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.