நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 6 ஜனவரி, 2016

பேராசிரியர் வே. ச. திருமாவளவன் அவர்கள்


முனைவர் வேதிருமாவளவன் 

புதுவைப் பேராசிரியர்களுள் முனைவர் வே. . திருமாவளவன் அவர்கள் கல்வித்துறை ஈடுபாடும், ஆய்வுத்திற மேம்பாடும் கொண்டவர்; நிர்வாகத் திறன் மிக்கவர். புதுவை மாநில அரசின் கல்லூரியான மதகடிப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் கல்லூரி உருப்பெறுவதற்கு ஊக்கமாக உழைத்தவர். இதன் வழியாகச் சிற்றூர்ப்புற மாணவர்களின் அறிவுக்கண் திறந்தவர். முனைவர் வே.ச. திருமாவளவன் அவர்கள் "மதுரை வீரன் கதைகள் ஓர்ஆய்வு", "கோபுரச்சிலை", "அகநானூறும் காதா சப்தசதியும்" என்னும் அரிய நூல்களைத் தந்த சான்றோர் ஆவார். இவர்தம் எளிமையும் நேர்மையும் அமைந்த வாழ்வை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில் வாழ்ந்த வே. சங்கரன், அசலாம்பாள் ஆகியோரின் மகனாக 01.07.1939 இல் வே. ச. திருமாவளவன் அவர்கள் பிறந்தவர். இளமைக் கல்வியைப் புவனகிரியில் பயின்றவர். இண்டர்மீடியட் எனப்படும் இடைநிலைவழிக் கல்வியையையும், இளங்கலைக் கீழைக் கலையியல் (B.O.L) படிப்பையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய இலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், மு.அருணாசலம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, நடேச முதலியார், சிந்தாமணி, இலட்சுமணசாமி நாயுடு, சோமசுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞர் பெருமக்களிடம் கல்வி பயின்ற பெருமைக்குரியவர்.

வே.ச. திருமாவளவன் அவர்கள் 1960 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் தே. கல்லுப்பட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். பின்னர் 1961 முதல் 1963 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று எம். ஓ. எல். பட்டம் பெற்றவர். புதுவை அரசின் கல்லூரிப் பணியில் 24.06.1963 இல் உரையாளராக இணைந்தவர். 1967 இல் காரைக்கால் கல்லூரியில் பணியேற்று அங்குப் பதின்மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் புதுச்சேரியில் அமைந்துள்ள தாகூர் கலைக்கல்லூரியிலும், பட்டமேற்படிப்பு மையத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதகடிப்பட்டு, பெருந்தலைவர் காமராசர் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக மூன்று ஆண்டுகள் இருந்து இவராற்றிய கடமை அனைவராலும் போற்றும் தரத்தில் இருந்தது.

பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் 1991 இல் வெளியிட்ட மதுரை வீரன் கதைகள் ஓர் ஆய்வு என்னும் நூல் மதுரைவீரன் கதைகளை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அரிய ஆய்வு நூலாகும்.


1. முன்னுரை, 2. அ. மதுரை வீரன் கதைச்சுருக்கம், ஆ. நிகழ்ச்சிகள் - ஒப்பாய்வு 3. சமுதாயச் சூழலும் மதுரைவீரன் கதையும், 4 மதுரை வீரன் கதைக்கருவும் அதன் வளர்ச்சியும், 5. முடிவுரை என்னும் தலைப்புகளில் இந்த நூல் அமைந்துள்ளது. 184 பக்கம் கொண்ட இந்த நூல் நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு முன்மாதிரியாக அமைந்த நூலாக உள்ளது.


பேராசிரியர் வே.ச. திருமாவளவன் எழுதிய கோபுரச்சிலை என்னும் நூல் 10 கட்டுரைகள் அடங்கிய நூலாகும். கோபுரச்சிலை, மூதின் முல்லை, புதுத்தீ, கள்ளும் காமமும், வித்துவக்கோட்டம்மா, கம்பன் படைப்பில் கும்பகர்ணன், குமரகுருபரரின் தமிழ் நெஞ்சம், நாட்டுப்புறப் பாடல்களில் பாட்டாளியின் குரல், நாட்டுப்புறப் பாடல்களில் கூந்தல் புனைவு, பாரதிதாசன் நோக்கில் பாரதியார் என்னும் தலைப்புகளில் அமைந்த இந்த நூல் மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்ற மாணவர்களுக்குப் பாடநூலாக இருந்துள்ளது.


அகநானூறும் காதா சப்தசதியும் - ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்த பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு 2008 ஆம் ஆண்டு நூல்வடிவம் பெற்றுள்ளது.

முன்னுரை, 1. அகநானூறும் காதா சப்தசதியும் ஓர் அறிமுகம், 2. அகநானூறு காட்டும் அக வாழ்க்கை, 3. காதா சப்தசதி காட்டும் அக வாழ்க்கை, 4. அகநானூறும் காதா சப்த சதியும் ஒப்பீடு, முடிவுரை என்னும் தலைப்புகளில் இந்த நூல் செய்திகள் உள்ளன.


தமிழ் நூலினையும், பிராகிருத மொழி நூலினையும் ஒப்பிட்டு நம் பேராசிரியர் வழங்கியுள்ள ஆய்வுச் செய்திகள் கற்போர்க்குக் கழிபேருவகை வழங்குவனவாகும். இந்த ஆய்வின் நெறியாளராக இருந்து நெறிப்படுத்தியவர் முனைவர் எஸ்.ஆரோக்கியநாதன் ஆவார்.

2009 ஆம் ஆண்டு புதுவை அரசின் கலைமாமணி விருதுபெற்ற பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள், புதுவைத் தமிழ்ச்சான்றோர் பேரவையை நிறுவித் தமிழ்த்தொண்டு செய்துவருகின்றார். கவிதைச்சோலை என்னும் மரபுப்பாடல் நூலினை வெளியிடும் பணியில் இப்பொழுது உள்ளார். தம் பெற்றோர் நினைவாகப் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் ஓர் அறக்கட்டளை நிறுவியுள்ளார்.

பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் 1964 இல் திருமதி கஸ்தூரி அம்மாளை மணந்து, இல்லறப் பயனாய் இரண்டு ஆண் மக்களும் இரண்டு பெண் மக்களும் இவர்களுக்கு வாய்த்தனர். நிறைவாழ்வு வாழும் பேராசிரியர் வே.ச. திருமாவளவன் அவர்கள் நீடு வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.


கருத்துகள் இல்லை: