நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015
தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கமும்,  நேஷ்னல் புக் டிரஸ்ட்டும் இணைந்து அரியலூர் மாநகரில் அரியலூர்ப் புத்தகத் திருவிழா-2015 என்னும் பெயரில் அரியதொரு புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. சூலை 17 முதல் சூலை 26 வரை இந்தப் புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டுத்திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மொழி நிறுவனத்தில் சீரிய பணியாற்றிய பேராசிரியர் க. இராமசாமி அவர்களின் பெரும் முயற்சியில் இந்தப் புத்தகக்கண்காட்சி நடைபெற உள்ளது. முதல்நாள் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும் தொடக்கவிழா நிகழ்வில் மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் விழாவினைத் தொடங்கிவைத்துச் சிறப்புப் பேருரையாற்றுகின்றார்.

திரு. சீனி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் திரு. எ. சரவணவேல்ராஜ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையுரையாற்றுகின்றார். திரு. சந்திரசேகர் சாகமூரி இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகின்றார். திரு. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்கள் நன்றியுரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், திரைத்துறைக் கலைஞர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். உடையார்பாளையம் அரண்மனை, அரியலூர் அரண்மனை சார்ந்த அரசகுடியினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், தொழில் முனைவோர்களும் நிரம்பிய ஊர். இவ்வூரில் நடைபெறும் புத்தகத் திருவிழா மாணவர்கள், பொதுமக்களுக்குப் பெரும் பயன் நல்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரியலூருக்குத் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பலூர், சிதம்பரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பேருந்துகளில் பயணம் செய்யலாம். அதுபோல் சென்னை - திருச்சிராப்பள்ளி தொடர்வண்டிகள் அனைத்தும் அரியலூரில் நின்று போகும்.

திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம் மாவட்டம் சார்ந்த பொதுமக்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இந்தப் புத்தகத் திருவிழாவை நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்.


மேலும் விவரங்களுக்கு: அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

அழைப்பிற்கு நன்றி.