நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 6 ஜூன், 2015

விகாஸ்பீடியா – ஓர் அறிமுகம்



  இணையதளங்கள் மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதில் முன்னிற்கின்றன. ஒவ்வொரு இணையதளமும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பராமரிக்கப்படுகின்றன. அந்தவகையில் விகாஸ்பீடியா என்ற இணையதளம் இந்திய மக்களின் சமூக மேம்பாட்டிற்கான பல தகவல்களைக் கொண்டு, பன்மொழி இணையதளமாக வளர்ந்துவருகின்றது. இந்த இணையதளத்தின் உள்ளடக்கம், சிறப்புகளை இங்கு உற்றுநோக்குவோம்.

இந்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், ஐதராபாத்தில் இயங்கும் கணினி வளர்ச்சி மையத்தின் (Centre for Development of Advanced Computing –CDAC ) சார்பில், விகாஸ்பீடியா (http://vikaspedia.in) என்னும் இணையதளம் செயல்படுகின்றதுஇந்திய மக்களுக்கு அவரவர் தாய்மொழிகளில் சமூக மேம்பாட்டுக்கு உரிய செய்திகள், தகவல்கள்  கிடைக்கும் வகையில் இந்தத் தளம் செயல்படுகின்றது. மேலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட செய்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த இணையதளம் செய்திகளைத் தருகின்றது.

விகாஸ் என்ற இந்திமொழிச் சொல்லுக்கு வளர்ச்சி என்று பொருள் (Hindi for Development). பீடியா என்பதற்குக் களஞ்சியம் என்றுபொருள். எனவே விகாஸ்பீடியா என்பது வளர்ச்சிக்கு அல்லது மேம்பாட்டுக்கு உரிய செய்திகளைக்கொண்ட கலைக்களஞ்சியம் என்று பொருள்கொள்ளலாம்.

விகாஸ்பீடியா தளம் 2014 பிப்ரவரி 18 இல் இந்தி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம், அசாமி ஆகிய மொழிகளில் தகவல்களைத் தரும்வகையில் தொடங்கப்பட்டது. 2014 சூலையில் தமிழ்மொழியில் சேவை வழங்கும் வகையில் வளர்ச்சி பெற்றது. தற்பொழுது தமிழ் மலையாளம், கன்னடம், பெங்காளி, குசராத்தி, இந்தி, தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம், அசாமி என மொத்தம் 10 இந்திய மொழிகளில் செய்திகளைத் தொடர்ந்து வழங்கும்வகையில் இத்தளம் வளர்ந்து வருகின்றது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் தகவல்களைத் தருவது இதன் இறுதி இலக்காகும். தமிழில் ஏறத்தாழ ஏழாயிரம் கட்டுரைகள் உள்ளிடப்பட்டுள்ளன.



விகாஸ்பீடியா தளத்தில் வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி என்ற பகுப்பில் செய்திகள் உள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் சிறு சிறு தலைப்புகளில் பல்வேறு பயனுடைய செய்திகள் கட்டுரைகளாக உள்ளன. சமூக மேம்பாட்டிற்கான அனைத்துக் கருத்துகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்வகையில் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளில் இந்தத் தளம் செயல்படுகின்றது. இந்தத் தளத்தின் மேம்பாட்டுக்குத் தன்னார்வலர்கள், அரசு, அரசு சாராத தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் இணைந்து பங்களிப்புச் செய்கின்றன.

விகாஸ்பீடியாவைப் பொறுத்தவரை நம்பகமான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அவரவர் தாய்மொழியில் இருப்பதால் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய உயரிய தளமாக இது பரிணாமம் பெற வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கில் இத்தளம் செயல்படுவதால் இந்தியச் சமூக வளர்ச்சியில் இந்தத் தளத்தின் பங்களிப்பு மிகுதியாக இருக்கும்.

விகாஸ்பீடியாவில் உள்ள செய்திகள் இணையதளத்தில் மட்டும் பயன்படுத்துவது என்று இல்லாமல் செல்பேசி சேவைகள்(மொபைல் ஆப்ஸ்), மின்பலகைகள்(டேப்லட்) மல்டிமீடியா பாடங்களாகவும், இணையவழிப் பாடங்களாகவும், கருத்துப் பகிர்வு மேடைகளாகவும் உள்ளமை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.


விகாஸ்பீடியா தளத்தில் உள்ள செய்திகள் வேளாண்மை, உடல்நலம், கல்வி, சமூகநலம், எரிசக்தி, மின்னாட்சி என்ற அமைப்பில் உள்ளன. இதில் கல்வி என்ற பகுப்பில் உள்ள செய்திகளைப் பார்வையிடச் சென்றால் குழந்தைகளின் உரிமைகள், கொள்கைகள் / திட்டங்கள், குழந்தைகள் பகுதி, ஆசிரியர்கள் பகுதி,  சிறந்த செயல் முறைகள், கல்வியின் முக்கியத்துவம், பல வகையான படிப்புகள், வேலைவாய்ப்பு வழிகாட்டி / பட்டியல், பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்,  கல்வி- கருத்துப்பகிர்வு, கல்லூரிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள், பல்கலைக் கழகங்கள் என்ற தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

மேலும் வேளாண்மை என்ற பகுப்பில் நுழைந்துசென்று பார்வையிட்டால், வேளாண் இடுபொருட்கள்,    தொழில் நுட்பங்கள், கால்நடைப் பராமரிப்பு, வேளாண் சார்ந்த தொழில்கள், பண்ணை சார் தொழில்கள்,  சிறந்த நடைமுறைகள், அரசு திட்டங்கள், விவசாயக் கடன்,  வேளாண் காப்பீடு, வேளாண்மையும் சுற்றுச் சூழலும்,   பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள், வேளாண்மை- கருத்து பகிர்வு என்னும் தலைப்புகளில் நம்பகமான தகவல் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காணொளிகளின் இணைப்புகள் இந்தப் பகுதியை வளமுடையதாக வைத்துள்ளது.

உடல்நலம் என்ற பகுப்பில் பெண்கள்உடல்நலம், குழந்தைகள் உடல்நலம், அரசு திட்டங்கள், ஆயுஷ், ஊட்டச்சத்து, நோய்கள், மன நலம், முதல் உதவி, சுகாதாரம் மற்றும் தூய்மை, வாழ்க்கைமுறை மாற்றங்கள்,  ஆரோக்கியக் குறிப்புகள், தெரிந்து கொள்ள வேண்டியவை,     உடல் நலம்- கருத்து பகிர்வு என்ற தலைப்புகளில் செய்திகள் தமிழில் உள்ளன.

சமூக நலம் என்ற பகுப்பில் ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, மலைவாழ் மக்கள் நலம், முறைப்படுத்தப்படாத துறை, மூத்த குடிமக்கள் நலம், கிராமிய வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, அரசு சார்பற்ற தன்னார்வத் துறை, நலிவடைந்த பிரிவினர், நிதி சேர்க்கை, சமூகநல விழிப்புணர்வு, மாற்றுத் திறனாளிகள் நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், திட்டங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், சமூக நலம்- கருத்து பகிர்வு, சாலைப் பாதுகாப்பு என்னும் தலைப்புகளில் அரிய செய்திகள் உள்ளன.

எரிசக்தி என்னும் பகுப்பில் எரிசக்தி அடிப்படை, எரிசக்தி சேமிப்பு, எரிசக்தி திறன், எரிசக்தி உற்பத்தி, சிறந்த செயல்முறைகள், பெண்களும் எரிசக்தியும், அரசாங்க உதவி, கிராம மக்களின் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல், தகவல் தொகுப்பு, எரிசக்தி - கருத்து பகிர்வு என்னும் தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

 இன்றைய தொழில்நுட்ப உலகம் மக்களுக்கு மின்னாளுமை வழியாக மக்கள் பணிகளை எளிமைப்படுத்தியுள்ளது. எனவே மின்னாளுமை சார்ந்த பயன்பாடுகளைப் பெற மின்னாட்சி என்ற பகுப்பிற்குச் சென்றால் இந்தியாவில் மின்னாட்சி, தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பொதுமக்களுக்கான இணையதள சேவைகள், மொபைல்வழி சேவைகள், சட்டத்துறையில் இணைய சேவைகள், அரசு மானியங்கள், பயனுள்ள ஆதாரங்கள், ஆதார் கார்ட் சேவை, மின்னாட்சி- கருத்து பகிர்வு, வங்கி சேமிப்பு, பொது இ-சேவை மையம், இந்தியக் கூலி வழங்கல் சட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம், இந்தியத் தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 (Information Technology Act, 2000) என்ற தலைப்புகளில் செய்திகள் உள்ளன.

விகாஸ்பீடியா மக்களுக்குத் தேவையான நம்பகமான செய்திகளைத் தருவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால் அதற்குத் தகுந்தவகையில் பிற இதழ்களில் வெளிவந்த செய்திகள், அரசு சார்ந்த அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் சேவைகள் என்ற தலைப்பில் வியாபார் (e-Vyapar) என்ற தலைப்பில் இணையம் வழியாகப் பொருள்களை வாங்கவும் விற்கவுமான வசதிகள் தரப்பட்டுள்ளன. மேலும் பொது அறிவு வினாடி வினாக்கள் (General Knowledge Quiz) மாணவர்கள் பயன்பெறும் வகையில் தரப்பட்டுள்ளன. வி.எல். பக்கம் (VLE Corner) என்ற தலைப்பில் மக்கள் கணினி முகவர்களுக்கு இந்தியாவெங்கும் உள்ள பொதுச்சேவை / மக்கள் கணினி மையங்களை நடத்தும் கிராமப்புற தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல் வளங்களை இத்தளம் வழங்குகிறது. மக்கள் கணினி மைய முகவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இத்தளம் வாய்ப்புகளை அளிக்கிறது.


 மதர் (MOTHER) என்னும் மென்பொருள் வழியாகக் கருவுற்ற, பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புத் தொடர்பான தகவல்களை, குறிப்பிட்ட பயனாளிக்குக் கைப்பேசி வழியாகக் குரல் அழைப்பு வடிவில் வழங்கப்படுகிறது.

வல்லுநரைக் கேளுங்கள் (Ask An Expert) என்ற மென்பொருள் வழியாகத் துறைசார் வல்லுநர்களிடமிருந்து நமக்குத் தேவையான விவரங்களை நம் தாய்மொழி வழியாகப் பெறமுடியும்.

ரீகாலர் (Recaller) மென்பொருள் வழியாக பதிவுசெய்யப்பட்ட  உறுப்பினர்களுக்கு நிதி நடவடிக்கை குறித்த விவரங்கள் மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகள் வழியாக வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது.

இணையவழிப் பாடங்கள் (e-Learning Courses) என்ற மென்பொருள் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள் அறிவுத்திறன்களை பயன்பெறும் வகையில் அவரவர் தாய்மொழியில் பாடங்களைக் கொண்டுள்ளன.

கற்பதற்கான வளங்கள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், பல்துறை சார்ந்த செய்திகளை உள்ளடக்கிய குறுவட்டுகள் விகாஸ்பீடியாவால் வழங்கப்படுகின்றது.

விகாஸ்பீடியா தளத்தில் செய்திகள், நிகழ்வுகள் என்ற தலைப்பில் அண்மையச் செய்திகள் பார்வைக்குக் கிடைக்கின்றன. அதுபோல் இந்தத் தளத்தில் பங்களிப்போர் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டு, அதிகம் பங்களிப்புச் செய்தோர் படத்துடன் சிறப்பிக்கப்படுகின்றனர்.


விகாஸ்பீடியாவைப் பயன்படுத்துவது எவ்வாறு?

விகாஸ்பீடியா தளம் இந்திய அரசின் நிறுவனமான சி டாக் வழியாகப் பராமரிக்கப்படுவதால் இதில் இணைந்து நாம் நம் அறிவு வளங்களைப் பங்களிக்க முடியும். அதிகம் பங்களிப்புச் செய்பவர்கள் உரியவாறு சிறப்பிக்கப்படுவதையும் இந்தத் தளத்தின் வழியாக அறியமுடிகின்றது. விகாஸ்பீடியாவில் பங்களிப்பது குறித்து விவரம் வேண்டுவோர் தளப் பராமரிப்பாளர்களுக்குத் தொடர்புகொண்டு அவர்களின் உதவியைப் பெறவும் வாய்ப்பு உள்ளது. நம் பகுதியில் விகாஸ்பீடியா குறித்து விழிப்புணர்வுக்கூட்டம் நடத்தவும் விகாஸ்பீடியா ஆர்வலர்கள் முன்வந்து உதவுவார்கள்.

விகாஸ்பீடியாவில் உறுப்பினர்களாக இணைந்து அதில் இடம்பெற்றுள்ள வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதுபோல் பங்களிப்பாளராக இணைந்து விகாஸ்பீடியாவில் செய்திகளை உள்ளிட இயலும். முன்பு உள்ளிடப்பட்ட செய்திகளை மேம்படுத்தவும் முடியும். விகாஸ்பீடியா அரசின் தளம் என்பதாலும் இதில் வெளியிடப்படும் தகவல்கள் நம்பகத்தன்மைகொண்டதாலும் இதனைக் கண்காணிக்க உரிய வல்லுநர் குழு உண்டு. எனவே இக்குழுவுடன் இணைந்து நாம் நம் பங்களிப்புகளை வழங்க இயலும். இந்திய மக்களைக் கல்வி, வேளாண்மை, மருத்துவம், தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் முன்னேற்ற, நம்மாலான பங்களிப்புகளைச் செய்யலாம். இதற்கு விகாஸ்பீடியா தளத்தில் உள்ள பதிவுப்படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை வழங்கி உறுப்பினராகவோ அல்லது பங்களிப்பாளராகவோ பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விகாஸ்பீடியாவில் உள்ள குறிப்பிட்ட மொழியில் ஒன்றில் மட்டும் இரண்டு துறைகளில் நாம் நம் பங்களிப்புகளை வழங்க இயலும். எடுத்துக்காட்டாகத் தமிழ் மொழியை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் இரண்டுதுறைகளில் கல்வி, வேளாண்மை என்ற இரண்டுதுறைகளில் மட்டும் பங்களிக்க முடியும். மற்ற துறையில் ஈடுபாடு உடையவர்கள் இதனையொத்த தங்களுக்கு விருப்பமான இரண்டு துறைகளை எடுத்துக்கொண்டு பங்களிப்பு வழங்கலாம்.


விகாஸ்பீடியா பதிவுப்படிவத்தில் கேட்கப்படும்  பெயர், மின்னஞ்சல், கமுக்கக் குறியீடு, செல்பேசி எண், பாலினம், கல்வித்தகுதி, மாநிலம், மாவட்டம், அஞ்சல் குறியீட்டு எண், வகை நீங்கள் சிறந்து விளங்கும் துறை உள்ளிட்ட விவரங்களைத் தந்து நிறைவாக அங்குத் தென்படும் நுழைவு எண்ணைத் தட்டச்சிட்டு நாம் விகாஸ்பீடியா உறுப்பினராக அல்லது பங்களிப்பாளராக இணையலாம்.

இந்திய மக்களின் சமூக மேம்பாட்டுக்காக அரசு உருவாக்கியுள்ள விகாஸ்பீடியா தளத்தை ஒவ்வொரு மொழியினரும் பயன்படுத்தித் தங்கள் அறிவுவளத்தை ஓரிடத்தில் தொகுத்து வைக்கலாம். தொகுத்து வைக்கப்பட்டுள்ள விவரங்களைத் தேவையானவர்களுக்கு அறிமுகம் செய்து நாட்டு முன்னேற்றத்திற்குத் துணை நிற்கலாம். அறிவுசார்ந்த குடிமக்களை உருவாக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பங்களிக்க வேண்டிய தளம் விகாஸ்பீடியா என்றால் அது மிகையில்லை.

தமிழ் விகாஸ்பீடியாவைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்


குறிப்பு: இக்கட்டுரையைப் பயன்படுத்துவோர் எடுத்த இடம் குறிப்பிடவும்.

2 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பேரறிஞர்களை அறிமுகப்படுத்தி வந்த தாங்கள் இப்போது விகாஸ்பீடியாவை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தற்போது தமிழ் விக்கிபீடியாவில் 200ஆவது பதிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். விரைவில் தாங்கள் அறிமுகப்படுத்திய விகாஸ்பீடியாவைப் பிடிப்பேன். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விகாஸ்பீடியாவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா