நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தொல்காப்பிய அறிஞர் செ.சீனி நைனா முகமது ஐயா அவர்கள் மறைவு!

 தொல்காப்பிய அறிஞர் சீனி.நைனா முகமது அவர்கள்

  மலேசியாவில் தொல்காப்பியத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கியவரும் உங்கள் குரல் என்னும் இதழின் ஆசிரியரும் பன்மொழிப் புலமையாளரும் தமிழ்ப்பற்றாளருமான ஐயா செ.சீனி நைனா முகமது அவர்கள் இன்று 07.08.2014 பகல் 2 மணியளவில் மலேசியத் திருமண்ணில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த துயருற்றேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்(20.05.2010) மலேசிய நண்பர்களுடன் பினாங்கு நகரில் நடு இரவில் ஐயா அவர்களைச் சந்தித்தபொழுது அன்பொழுக எங்களுடன் உரையாடிய பெருமைக்குரியவர். அது நாள் முதல் தொடர்ந்து தொடர்பில் இருந்தோம்.
                    
  கடந்த ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணன் எம். எ. முஸ்தபா அவர்களுடன் ஒரு இரவு விருந்தில் அருகமர்ந்து உண்டு மகிழ்ந்தமையும் மறுநாள் காலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் உரை கேட்டமையும் நெஞ்சில் நிழலாடுகின்றன. இசுலாமியப் பெருமக்களுள் தமிழுக்கு உழைத்தோர்களைப் பலராகப் பட்டியலிட்டுப் போற்றமுடியும். அந்த அறிஞர் பெருமக்களுள் தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்ற பெருமையும் மலேசிய மண்ணில் எடுத்துரைத்துப் பரப்பிய பெருமையும் ஐயா சீனி நைனா முகமது அவர்களுக்கு உண்டு. தமிழ் பற்றியோ, தமிழர் பற்றியோ எவரேனும் குறைத்துப் பேசிவிட்டு ஐயாவிடமிருந்து தப்பிச் செல்லமுடியாது. அந்த அளவு தமிழ்ப்பற்றுடையவராக விளங்கியவர்.

மலேசிய மண்ணில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து கடமையாற்றிய ஐயா சீனி நைனாமுகமது அவர்களின் இழப்பு தமிழுலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், மலேசியத் தமிழ் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

தொல்காப்பிய அறிஞர் சீனி. நைனா முகமது அவர்களின் புகழ் இந்த உலகம் உள்ளவரை நின்று நிலவட்டும்!!

 அறிஞர் சீனி நைனா முகமது அவர்கள் குறித்த என் பழைய இடுகை.


1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அறிஞரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்