நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

கலைமாமணி, புலவர் அரங்க. நடராசனார்


புலவர் அரங்க. நடராசனார் 

புதுச்சேரியில் புகழ்வாழ்க்கை வாழ்ந்துவரும் புலவர்களுள் புலவர் அரங்க. நடராசனார் அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தமிழை எழுதும்பொழுது ஐயம் ஏற்பட்டால் நீக்கிக்கொள்ள அனைவரும் முதலில் நாடுவது புலவர் அரங்க.நடராசனாரையே ஆகும். சிற்றிலக்கியம் பலவற்றைப் படைத்த படைப்பாளராகவும், உரையாசிரியராகவும் விளங்கும் அரங்க. நடராசனார் அவர்கள் புதுச்சேரியில் அம்பலத்தடையார் மடத்துத்தெரு 144 ஆம் எண்ணுள்ள வீட்டில் 1931 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 29 ஆம் நாள் பிறந்தவர், பெற்றோர் அரங்கநாதன்-தையல்நாயகி ஆவர்.

புலவர் அவர்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சுமொழிகளைக் கற்ற பெருமைக்குரியவர். 10.11.1950 இல் தம் பதினெட்டாம் அகவையில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 1974 இல் முதல்நிலைத் தமிழாசிரியராகவும், 1984 இல் தேர்வுநிலை முதல்நிலைத் தமிழாசிரியராகவும் பணி உயர்வுபெற்றவர்.

24.02.19955 இல் திருவாட்டி சகுந்தலை அம்மையார் அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்லற வாழ்வைத் தொடங்கினார். ஆண்மக்கள் மூவரும் பெண்மக்கள் இருவருமாக ஐந்து மக்கட் செல்வங்கள் இவர்களுக்கு வாய்த்தனர்.

புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருது(1987), கலைமாமணி விருது(2007) அந்தாதிச் செல்வர், சந்தப்பாமணி விருது, மொழிப்போர் மறவர் விருது, கவிமாமணி விருது, குறள்நெறிப் பாவலர் விருது, கண்ணியச் செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர்தம் தமிழ்ப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளன.

அம்பகரத்தூர் அந்தாதி, புதுவைக் காமாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பெத்ரோ கனகராய முதலியார் பாமாலை, மரபும் பாடலும், அகரத்து அபிராமி அந்தாதி, திருக்குறள் அம்மானை, இருளும் ஒளியும், சிற்றிலக்கியங்கள் ஒரு கண்ணோட்டம், இலக்கிய மணிகள், சங்க இலக்கிய மணிகள் இதோ, பஞ்சுவிடுதூது உள்ளிட்ட நூல்களைத் தமிழுக்குத் தந்தவர்.

முனைவர் இரா. திருமுருகனாரின் சிந்துப்பாவியல், பேராசிரியர் தங்கப்பாவின் ஆந்தைப்பாட்டு, ஔவையாரின் பந்தன் அந்தாதிக்கு உரை வரைந்த பெருமைக்குரியவர்.


புதுச்சேரியில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்கள், தமிழ்க்காப்புப் போராட்டங்கள் அனைத்திலும் முன்னின்று தமிழுக்கு உழைப்பவர். அன்பு, எளிமை, அடக்கம், பணிவுடைமை உள்ளிட்ட நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கும் புலவர் அரங்க.நடராசனார் அவர்கள் நூற்றாண்டு விழாவினைக் கண்டு நிறைவாழ்வு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: