நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்த பேராசிரியர் பெ. இலக்குமிநாராயணன்

முனைவர் பெ.இலக்குமிநாராயணன் அவர்கள்

இன்று (26.01.2014) காலை பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பேராசிரியர் தங்கியுள்ள புதுச்சேரி இராகவேந்திரா நகர் இல்லத்திற்குச் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன். முன்பே ஓரிருமுறை சந்தித்த நினைவுகளைப் பேராசிரியர் அவர்கள் சொல்லி வரவேற்றார். சென்ற பணியை முடித்துகொண்டு, பேராசிரியரின் தமிழ் வாழ்க்கையை அறிய விரும்பினேன். உரையாடலின் ஊடே பேராசிரியர் தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்துரைத்த வரிகளும் விளக்கங்களும் எனக்குப் பெருமகிழ்வைத் தந்தன. 

தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்றுள்ள பேராசிரியரின் புலமையை எண்ணியெண்ணி மகிழ்ந்தேன். "மக்கள் தேவர் நரகர்" என்ற சொற்களுக்கு அளித்த விளக்கம் மணிக்கணக்கில் நீண்டது. “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்று குறுந்தொகையிலிருந்து(283) காட்டிய வரிகளும்,  “நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே” என்று புறநானூற்றிலிருந்து(176) காட்டிய வரிகளும் விளக்கங்களும் வாழ்வில் என்றும் நினைவில் நிற்கும் விளக்கங்களாகும்.


பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் சித்தேரிப்பட்டு என்ற சிற்றூரில் 21.08.1952 இல் பிறந்தவர். பெற்றோர்  இல.பெருமாள், அமிர்தவள்ளி என்ற பார்வதி ஆவர். காரணை பெருச்சானூரில் உயர்நிலைக்கல்வியை முடித்து, விழுப்புரம் அரசு கல்லூரியில் புகுமுக வகுப்பினை முடித்தவர். இளங்கலை, முதுகலை, முனைவர்பட்டம், கல்வியியல் பட்டங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்கள். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் வெள்ளைவாரணனார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பாடம் கேட்ட பெருமைக்குரியவர். பேராசிரியர் இலக்குமிநாராயணன் அவர்கள் அதிவீரராமபாண்டியனார் நூல்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, சென்னை வைணவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் தமிழ்ப்பணி செய்தவர். வைணவக் கல்லூரியின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருத்தப்பட்ட தமிழ்ப்பேரகராதியின் பதிப்புப்பணியிலும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். தமிழ் ஆங்கிலம் இருமொழியிலும் உரையாற்றும் ஆற்றலுடையவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களில் நல்ல பயிற்சியுடைய பெருமகனார் இவர். தொல்காப்பிய நூற்பாக்களுக்குச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் இவர்தம் தமிழ்ப்புலமை அறிந்து வியப்புற்றேன். தமிழ் நினைவில் எழுதுவதிலும், படிப்பதிலும், பேசுவதிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பேராசிரியர் பெ.இலக்குமிநாராயணன் அவர்களின் சீரியப் பணியினைப் போற்றுவோம்