நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 18 ஜூலை, 2013

சிங்கப்பூர் ஆசிரியர் மா.இராஜிக்கண்ணு அவர்கள்

திரு.மா.இராஜிக்கண்ணு அவர்கள்

சிங்கப்பூரில் எனக்கு வாய்த்த நண்பர்களுள் திருவாளர் மா.இராஜிக்கண்ணு அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 2001 இல் நான் சிங்கப்பூருக்கு உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்ற பொழுது எனக்கு அறிமுகம் ஆனவர். அதன் பிறகு அவர் தமிழகம் வரும்பொழுதும், நான் சிங்கப்பூர் செல்லும்பொழுதும் அடிக்கடி எங்களுக்கு இடையே சந்திப்புகள் நிகழும்.

என் திருமணத்தின்பொழுது ஐயா அவர்கள் அனுப்பிய வாழ்த்து மடல் கண்ணாடிச் சட்டம் இடப்பட்டு எங்கள் வீட்டு வரவேற்பறையில் இன்றும் எங்களுக்கு அவர்களின் நட்பை நினைவூட்டிக்கொண்டிருக்கும். ஐயா அவர்கள் சிங்கப்பூரில் ஆசிரியப்பணியாற்றி ஓய்வுபெற்றவர். பல நூல்களைத் தமிழன்னைக்குப் படையல் செய்தவர். மா.இராஜிக்கண்ணு ஐயா அவர்களின் “தேசியக் கல்விக்கழகச் சிறப்புப் பயிற்சித் திட்டத் தமிழ்த்துறையின் கல்விப்பயணம் ஒரு கண்ணோட்டம்”  என்ற நூல்  வரும் காரிக் கிழமை(20.07.2013) சிங்கப்பூரில் வெளியிடப்பட உள்ளது. ஐயா அவர்களின் தமிழ்வாழ்க்கையைப் பதிந்துவைப்பதில் மகிழ்கின்றேன்.

மா.இராஜிக்கண்ணு அவர்கள் தஞ்சை மாவட்டம் ஆம்பல்பட்டு என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் மாரிமுத்து, மீனாட்சி ஆவர். 1957 இல் தம் எட்டாம் அகவையில் சிங்கப்பூருக்கு வந்தவர். உயர்நிலைக் கல்வியை முடித்ததும் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். தமது 45 ஆண்டுக்காலத்தின் கல்விப்பணியில் தொடக்கநிலை, உயர்நிலை, தொடக்கக் கல்லூரிகளில் தமிழாசிரியராகவும், சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவில் பாடநூலாக்கக் குழுவில் சிறப்பு எழுத்தாளராகவும் கடமையாற்றியவர்.

சிம் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும், தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவுசெய்யும் நிலையில் உள்ளார்.


பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொள்வதற்கு இந்தியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்குச் சென்று வந்தவர். தேசியக் கல்விக்கழகத்திற்காக உருவாக்கப்பட்ட கதை அரும்பு, சிறுகதைக் கனி, கதைச்சோலை, கதை அரங்கம் உள்ளிட்ட நூல்களின் தொகுப்பாசிரியராகப் பணிபுரிந்துள்ளார். திரு.மா. இராஜிக்கண்ணு அவர்களின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகள்.1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சிங்கையில் தமிழ் செழித்தமைக்கு இத்தகையோரின் அரும் பணியே காரணம், ஐயாவின் இனிய பணிகள் தொடர வாழ்த்துக்கள்.