நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்தின் திருமண விழா…



புலவர் செந்தலை ந.கௌதமன் அவர்கள் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் குருதி உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) அவரின் பிள்ளைகள். நாம் அவரின் தமிழ் உறவுடைய பிறங்கடைகள் (வாரிசுகள்) என்பார். ஆம். அதுபோல்தான் அமைந்துவிட்டது.

கல்லூரிப் பருவத்தில் பெருமழைப்புலவரின் உரைகளைக் கற்று அவர்மேல் ஏற்பட்ட மதிப்பு கடந்த கால் நூற்றாண்டாக வளர்ந்து அவரின் குடும்பத்துடன் நெருங்கிய நட்பாக மலர்ந்து நிற்கின்றது.

பெருமழைப்புலவரின் குடும்பத்தினரைச் சந்திக்க நான் முதன்முதல் சென்றமையும், அதன் பிறகு அக்குடும்பத்திற்குத் தமிழக அரசின் பரிவுத்தொகை உருவா பத்து இலட்சம் கிடைப்பதற்கு வழி செய்தமையும், புலவர் பிறந்த மேலைப்பெருமழை ஊரில் நூற்றாண்டுவிழா கொண்டாடியமையும், அமெரிக்காவில் பெட்னா விழாவில் புலவரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியமையும், அதன் பிறகு புதுச்சேரியில் பெருமழைப்புலவருக்கு ஒரு விழா எடுத்தமையும், கேப்டன் நியூசு சொலைக்காட்சியில் புலவரின் நினைவுநாள் ஒன்றில் உரையாற்றி அவரின் புகழையும் சிறப்பையும் நினைவுகூர்ந்தமையும் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்க நிகழ்வுகளாகும்.

இச்செயல்களின் ஊடே பெருமழைப்புலவரின் குடும்பத்தாரும், மேலைப்பெருமழை மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்ப்பெருமக்களும், அறிவார்ந்த இளைஞர்களும் என் மேல் காட்டி நிற்கும் அன்பிற்கு இணைசொல்லமுடியாதபடி அனைவரும் தொடர்புகொண்டு நிற்பதை எண்ணி மகிழ்கின்றேன்.

அந்த வகையில் புலவரின் இளையமகனார் திரு. சோ. மாரிமுத்து ஐயா அவர்களின் திருக்குமரன் சோ. மா. குமார் அவர்களுக்கும் புலவரின் குடும்பப் பெண்வழிப் பெயர்த்தி சி. கிருத்திகாவிற்கும் திருமணம் உறுதிசெய்யப்பெற்ற அரங்கிலிருந்து ஒரு செய்தி சொன்னார்கள். வரும் ஏப்ரல் 7 இல் திருமணம் உறுதி செய்துள்ளோம். தாங்கள் வந்திருந்து நடத்தித்தரவேண்டும் என்று உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் கேட்டுக்கொண்டனர்.

நானும் அதற்கு இசைந்து, அறிஞர் பெருமக்கள் சிலரையும் அழைத்து அந்தத் திருமணத்தை நடத்த எண்ணினேன். புலவர் குடும்பத்தாரும் உறவினர்களும் இசைந்தனர். அதன் அடிப்படையில் வரும் ஞாயிறு (07.04.2013) மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேலைப்பெருமழையில் அமைந்துள்ள அம்மன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.



திரு. சி.ரெங்கசாமித் தேவர் தலைமையில் நடைபெறும் திருமணவிழாவில் சோ.இராசமாணிக்கம் (முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்), இரா.வேதரத்தினம் ((உதவி ஆணையர், காவல்துறை), சி.சிவபுண்ணியம், முனைவர் மு.இளமுருகன், புலவர் செந்தலை கௌதமன், பேராசிரியர் கி.செம்பியன், அந்திமழை ஆசிரியர் நா. அசோகன், க.சக்திவேல் (ஊ. ஒன்றிய ஆணையர்), மு.இளங்கோவன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழர் நெறி நின்று திருமணத்தை நடத்திவைக்க உள்ளனர். தமிழார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் அறிய

கருத்துகள் இல்லை: