நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 1 ஜனவரி, 2013

தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா




 மக்கள் அரங்கில் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் நிறுவுரையாற்றுதல். அருகில் மு.மணிவண்ணன், அ.இளங்கோவன், வள்ளி ஆனந்தன், ப.அர. நக்கீரன், மு.இளங்கோவன்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் 2012, திசம்பர் 28,29,30 ஆகிய மூன்று நாள்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மக்கள் அரங்கின் பொறுப்பாளராக உத்தமம் அமைப்பினர் எனக்கு வாய்ப்பு நல்கினர். நண்பர்களின் துணையுடன் நானும் சிறப்பாக உழைத்து மக்கள் அரங்கைத் திறம்பட நடத்திக் கொடுத்தேன்.

மாநாட்டுக்கு முதல்நாள் இலங்கையிலிருந்து திரு. சரவணபவன் அவர்கள் புதுச்சேரிக்கு வந்தார்கள். இருவரும் பகலுணவுக்குப் பிறகு நம் இல்லத்திலிருந்து மாலையில் சிதம்பரம் புறப்பட்டோம். இரவு எங்களுக்கு உரிய அறை சிறப்பாக ஒதுக்கப்பட்டிருந்தது. இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் ப.அர. நக்கீரன் அவர்களுடன் தங்கும் வாய்ப்பு அமைந்தது. மனம் திறந்து உரையாடினோம்.

மலேசியாவிலிருந்து நண்பர் திரு. முனியாண்டி அவர்களும் வந்து இணைந்துகொண்டார். திருச்சியிலிருந்து திரு. மணிகண்டன் அவர்களும் வந்தார். இரவு ஒருசுற்றுப் பேச்சுக்குப் பிறகு அனைவரும் ஓய்வெடுத்தோம்.

காலையில் மாநாட்டுக்கு ஆயத்தமானோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்த நண்பர்களைக் கண்டு அளவளாவினோம். மாநாடு காலை 10. 15 மணிக்குப் புதிய அரங்கில் சிறப்பாகத் தொடங்கியது. (இது பற்றி முன்பே பதிந்துள்ளேன்). இரண்டாம் நாள் நிகழ்வில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்  சிதம்பரம் தலைமையில் திரு. செல்வமுரளி இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி, மின்பலகை பற்றி சிறப்பான அறிமுகவுரையாற்றினார். பலரும் பயன்பெற்றனர். திரு.குணசீலன், திரு.பழனி, திருவள்ளுவன், சிதம்பரம் ஆகியோர் காலை அமர்வில் உரை வழங்கினர்,

பிற்பகல் அமர்வில் பேராசிரியர் சேம்சு தலைமையில் பேரா. காமாட்சி, துரையரசன், பேராசிரியர் சுப்பிரமணி, திரு. சையத் ஆகியோர் கட்டுரை வழங்கினர். இதில் பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணி அவர்களின் கட்டுரை சமூக வலைத்தளங்கள் குறித்து அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. மாலையில் பேராசிரியர் இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படங்கள் இணைப்பது குறித்து அறிமுகவுரையாற்றினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் (30.12.2012)  காலை இளம்பரிதி அவர்கள் விக்கிப்பீடியாவில் படம் இணைப்பது குறித்து விரிவான உரையாற்றினார். தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களின் படங்களை இணைந்ததைப் பரிதி விளக்கிப் பேசினார். விக்கியில் தமக்கு அமைந்த பங்களிப்புப் பணிகளை நினைவுகூர்ந்தார்.

பரிதியை அடுத்து தகவல் உழவன் அவர்கள் விக்கிப்பீடியாவிலும் விக்சனரியிலும் சொற்களை இணைப்பது குறித்து விரிவான காட்சி விளக்கம் கொண்டு அமைந்த உரையை வழங்கினார்.

30.12.2012 பகல் 12 மணிக்கு நிறைவு விழா தொடங்கியது. கண்காட்சிப் பொறுப்பாளர் வள்ளி ஆனந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மணி. மணிவண்ணன் தலைமையில் நிறைவுவிழா நடைபெற்றது. திரு. அ. இளங்கோவன். முனைவர் ப. அர. நக்கீரன் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ நிறைவுரை வழங்கி ஒவ்வொரு மாநாட்டிலும் மக்கள் அரங்கம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி விரிவான உரை வழங்கினார். நிறைவில் முனைவர் மு.இளங்கோவன் (மக்கள் அரங்கப் பொறுப்பாளர்) நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்குத் தினமலர், தினமணி, இந்தியன் எக்சுபிரசு, தினகரன், தினத்தந்தி, விகடன், தட்சு தமிழ், தமிழன் வழிகாட்டி, புதியதலைமுறைத் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, செயா தொலைக்காட்சி, தினத்தந்தி தொலைக்காட்சி உள்ளிட்ட பல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தியை உடனுக்குடன் வெளியிட்டன. அனைத்து ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்றி.

மக்கள் அரங்கிற்கு வருகை தந்து தொடங்கிவைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மருத்துவர் மா. இராமநாதன் அவர்களுக்கும், நிறைவு விழாவில் கலந்துகொண்டு நிறைவுரையற்றிய முனைவர் மு. பொன்னவைக்கோ (துணைவேந்தர், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்) அவர்களுக்கும் நன்றி. அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய அறிஞர் பெருமக்களுக்கும், கட்டுரை வழங்கியவர்களுக்கும்  பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்களுக்கும் நன்றி. உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்ந்த பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் நன்றி.


மக்கள் அரங்கில் கலந்துகொண்ட அறிஞர் பெருமக்கள்



 விக்கி பங்களிப்பாளர் தகவல் உழவன் உரை



பேராசிரியர் தமிழ்ப்பரிதி உரை




பேராசிரியர் க.துரையரசனுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் பேராசிரயர் சேம்சு


மக்கள் அரங்கிற்கு வருகை தந்த அ.க.இராமகிருட்டின்(பெங்களூர்)



மணி.மணிவண்ணன்(தலைவர்,உத்தமம்) மற்றும் குழுவினர்




2 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Avargal Unmaigal சொன்னது…

இந்த விழாவிற்கு மிக குறைந்த அளவே ஆட்கள் வந்தாக கேள்விப்பட்டேன். அடுத்த முறை இதை நடத்துபவர்கள் வலைபதிவாளர்களையும் இதில் கலந்துக் சொல்லி அழைக்கலாமே மிகவும் சிறப்பாக இருக்கும்தானே