நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 27 அக்டோபர், 2012

சென்னையில் தமிழ் இலக்கணம் குறித்த கலந்துரையாடல்

முனைவர் பொற்கோ(வலமிருந்து),மருத்துவர் பொன்முடி, பொன்முடியின் உடன்பிறப்பு
தமிழ்நாட்டு அரசின் பாட நூல்களிலும், தமிழ்நாட்டின் செய்தி ஏடுகள், தொலைக்காட்சிகளிலும் தமிழ் முறையாக எழுதவும் பேசவுமாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இது குறித்து காரைக்கால்(திருநள்ளாறு) மருத்துவர் பொன்முடி அவர்கள்(பிறந்த ஊர் ஆயக்காரன்புலம், வேதாரண்யம் அருகில்) ஒரு நூல் எழுதி வருகின்றார். அந்த நூலில் ஏற்கத் தகுந்த, மறுக்கத் தகுந்த பல கருத்துகள் உள்ளன. இதனை மனங்கொண்ட தமிழறிஞர் முனைவர் பொற்கோ அவர்கள் தமிழில் ஈடுபாடுகொண்ட, இலக்கணத்தில் ஆர்வம்கொண்ட அறிஞர்களை அழைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வினைச் சென்னை அண்ணா நகரில் உள்ள வசந்தபவன் உணவகத்தின் அருகில் (அட்சயா அரங்கு) ஏற்பாடு செய்திருந்தார்கள்(27.10.2012).

மருத்துவர் பொன்முடி அவர்கள் தம் நூலின் செய்திகளையும் உள்ளடக்கத்தையும் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். காலை 10. 30 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு பகல் 2 மணி வரை  நடைபெற்றது. சற்றொப்ப மூன்று மணிநேரம் மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் சீர்மையற்றுச் சொற்களைப் பிரித்து அச்சிட்டுள்ளதைச் சான்றுகளுடன் எடுத்துரைத்தார்.

சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் எழுதுவதால் ஏற்படும் பொருள் வேறுபாடுகளை எழுத்து வழக்கிலிருந்தும் பேச்சு வழக்கிலிருந்தும் மிகுதியான மேற்கோள் வழி மருத்துவர் பொன்முடி எடுத்துரைத்தார். மேலும் தமிழ் இலக்கணத்தில் இரண்டாம் வேற்றுமை மிகும் இடம், நான்காம் வேற்றுமை மிகும் இடம் இவற்றில் ஒற்று மிகுக்க வேண்டியதில்லை என்று தம் மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். இதற்கெல்லாம் தீர்வுகாணும் வகையில் இந்தக் கலந்துரையாடலை முனைவர் பொற்கோ அவர்கள் நெறிப்படுத்தினார்.

 கலந்துரையாடல் அரங்கில் வெளிப்பட்ட கருத்துகளைக் கவனித்த அறிஞர்குழு பொருத்தமான கருத்துகளை ஏற்றுக்கொண்டனர். வேற்றுமைஉருபு குறித்த பொருத்தமற்ற கருத்துகளை மறுத்துரைத்தனர். முனைவர் பொற்கோ அவர்கள் மொழியியல் அடிப்படையிலும், இலக்கண மரபுநெறி நின்றும் ஆழமான மொழியியல் உண்மைகளை எடுத்துரைத்தார். மருத்துவத் துறையில் பணியாற்றிக்கொண்டு தமிழின் தொடரமைப்பு, இலக்கண அமைப்புகளை ஆழமாக உற்றுநோக்கிக் கருத்துரைத்த மருத்துவர் பொன்முடி அவர்களை அனைவரும் பாராட்டினர்.

முனைவர் பொற்கோ கருத்து:

மருத்துவர் பொன்முடி அவர்கள் தமிழில் உள்ள சில சிக்கல்களைக் கவனித்துள்ளார். மொழிச்செய்திகளைக் கவனித்துத் தம் கருத்தை உரைத்துள்ளார். சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் முறையை மருத்துவர் புணர்ச்சி என்கின்றார். இது பொருத்தம் இல்லை. இது தழுவுத்தொடர் என்று இலக்கண நூல்களில் உள்ளது. பாட நூல்களில் பிரித்து எழுதுதலில் சீர்மை இல்லை என்பதை இக்குழுவினர் ஏற்றுக்கொள்கின்றனர். பாடநூல்களில் புணர்ச்சிப்பிழை உள்ளதைத் தவிர்க்க வேண்டும். 

ஒலி அழுத்ததால் தமிழில் பொருள் வேறுபடுவது உண்டு. ஒலி அழுத்தத்தை எழுத்தில் காட்ட வழியில்லை. தொகைகளைச் சேர்த்து எழுத எல்லா இடங்களிலும் இயலாது. பேசுவது போல எழுத முடியாது. பேசும்பொழுதும் நுட்பமான ஒலி இடைவெளி உண்டு.

இரண்டாம் வேற்றுமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாகப் புறநானூறு, அகநானூறு என்று குறிப்பிடலாம். பேச்சுமொழியில் நீண்ட தொடர்கள் உண்டு. மொழியில் உள்ள தொடர்களைக் கணக்கிட முடியாது.

முனைவர் செம்பியன் கருத்து:

திரு.வி.க., மு.வ போன்றோர் எளிமை கருதிச் சொற்களைப் பிரித்து எழுதினர். மீண்டும் சொற்களைச் சேர்த்து எழுதினால் பழைய நிலைக்குச் சென்றுவிடுவோம். வினைத்தொகையைச் சேர்த்து எழுதவேண்டும். தொகைகளைப் பிரித்து எழுதவேண்டாம்.

பொற்கோ நிறைவுரை:

சொற்களைப் பிரித்து எழுதினால் தெளிவு கிடைக்கும்.
உள் தொகைகளைப் பிரித்து எழுதலாம்.
வினைச்சொல்லில் நீண்ட தொடர் உள்ளது. இடம் விட்டுப் பிரித்து எழுதலாம்.
சிக்கலைச் சிக்கல் என்று உணர வேண்டும்.
தீர்க்க வேண்டிய சிக்கல் தமிழில் நிறைய உள்ளன.

தமிழ்ப்பாட நூல்களில் உள்ள குறைகளைப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கும் எழுதுதல் வேண்டும். தமிழில் பிரித்து எழுதுதல் பற்றிய செய்திகளை இதழ்கள், பதிப்பகங்களுக்கு எழுதலாம் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முனைவர் பொற்கோ, முனைவர் தங்க.மணியன், கவிக்கோ ஞானச்செல்வன், முனைவர் கி.செம்பியன், முனைவர் அர்த்தநாரீசுவரன், முனைவர் அமிர்தலிங்கம், முனைவர் மெய்கண்டான், முனைவர் ஒப்பிலா.மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன், ஆய்வாளர் சாம்சன், மருத்துவர் பொன்முடியின் நண்பர்கள், உறவினர்கள் எனச் சற்றொப்ப ஐம்பதின்மர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மருத்துவர் பொன்முடி
கருத்துரைக்கும் கவிக்கோ ஞானச்செல்வன்
கலந்துரையாடலில் பங்கேற்றோர், கவிக்கோ ஞானச்செல்வன்.
கலந்துரையாடும் அறிஞர் குழு
முனைவர் அர்த்தநாரீசுவரன், முனைவர் தங்க மணியன், முனைவர் அமிர்தலிங்கம்.
மருத்துவர் பொன்முடி, முனைவர் பொற்கோ, முனைவர் செம்பியன், முனைவர் மு.இ.
முனைவர் ஒப்பிலா மதிவாணன், முனைவர் மு.இளங்கோவன்

8 கருத்துகள்:

PRINCENRSAMA சொன்னது…

அவ்வப்போது இப்படி செழுமைப்படுத்தும் முயற்சிகள் விவாதங்கள் நடைபெற வேண்டும்.
இல்லையேல் தேக்கம் ஏற்பட்டுவிடும்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

i missed it

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்க வேண்டும்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

நாங்களும் க்லந்து கொள்ள விரும்புகிறோம்

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

your blog is very powerful and use ful .. than q and keep it up

Sivakumar சொன்னது…

ஐயா வணக்கம்,

பகிர்வுக்கு நன்றி.

மருத்துவர் பொன்முடியெழுதிய ‘தமிழ்வெள்ளத்தாழி’ என்னும்நூலை நான் முழுவதும்படித்துள்ளேன். அவரது கருத்துகள் ஏற்கத்தக்கதே.

தமிழிலக்கணத்தில், சொற்கள் சேரும்போது எவ்வாறுசேரவேண்டும் என்பதைக்கூறுவது ‘புணர்ச்சியிலக்கணம்’. சொற்கள் சேரும்பொதுதான் அதைப்பயன்படுத்தவேண்டும்.

ஆனால் தமிழில் சொற்கள் எப்போதுசேரவேண்டும் என்பதைச்சொல்ல இலக்கணமிருப்பதாக தெரியவில்லை. இந்நூலைப்படித்தால் அது நன்றாகப்புரியும். தமிழ்மொழிக்கு மிகவுந்தேவையான கருத்துகளை கூறியுள்ளார் அவர். தமிழறிஞர்கள் அவற்றை தேர்வுசெய்து தமிழார்வாளர்களுக்கு பரிந்துரைச்செய்தல் நன்று.

மருத்துவர் கூறுவதென்னவென்றால், புணர்ச்சியைப்பயன்படுத்தியபிறகு சொற்களை பிரித்தெழுதாதீர், (’என்பதைக் கூறுவது’ புணர்ச்சிக்காக ‘க்’ வந்தபிறகு சொற்கள் ஏன் தனித்துநிற்கின்றன?).

தொகைமொழியின் இன்றியமையாத இலக்கணம், அவை சேர்ந்தேவரவேண்டும். அதுதான் தொல்காப்பியர் சொன்னது. இவரும் அதைத்தான் சொல்கிறார்.
எ-டு. ’சென்னை அருகே உள்ளது’ - நாம் இருக்குமிடத்திலிருந்து சென்னை அருகிலுள்ளது எனப்பொருள்.

‘சென்னையருகே உள்ளது’ - என்றால் ஏதோவொன்று ‘சென்னை’யின்’ அருகே உள்ளது எனப்பொருள். ‘இன்’ மறைந்துவருவதை சொற்களை சேர்த்தெழுதியே உணர்த்தவேண்டும் அதுவே தொகைமொழி.

இவ்வாறு பல மறந்துவிட்ட இலக்கணத்தை, தெரியாத பயன்பாட்டுகளை அந்நூல் விளக்குகிறது.

’பாலைக்குடி’ - இது இரண்டாம்வேற்றுமையுருபு (ஐ) தெரிநிலை. இங்கு ‘க்’- வலிமிகுகிறது. இதை மருத்துவர் மறுக்கவில்லை.

‘பாலை குடித்தாயா கொட்டிவிட்டாயா?’ - இங்கு பாலைவிட அதை என்னசெய்தான் என்பதற்கே பொருட்சிறப்பு, இங்கு சொற்கள் புணராது, அதனால் வலியும் மிகாது. இரண்டாம்வேற்றுமை ‘ஐ’ வந்தாலே வலிமிகும் என்பதல்ல, சொற்கள் புணர்ந்தால்தான் வலிமிகும் என்பதே மருத்துவர் சொல்வது. அது மிகவும் ஏற்கத்தக்கவொன்றே. அறிஞர்களும் இதை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

Sivakumar சொன்னது…

’எளிமைகருதி சொற்களை பிரித்தெழுதுகிறோம்’ என்பது ஏற்கதக்கதே. இதனால் என்னவாயிற்றென்றல், இக்கால தமிழெழுத்துகள் இலக்கணத்தைவிட்டு வெகுதொலைவு சென்றுவிட்டது.

காலப்போக்கில் மொழிமாற்றமடையத்தான் செய்யும் அதற்கேற்ப இலக்கணத்தையும் வகுங்கலாமே. இல்லையேல் மொழி மேலுஞ்சிதைவடையும். பள்ளிப்பாடநூல்களில் தமிழ் சிதைந்துக்கிடப்பதைவிட ஒரு மொழிக்கு வேறென்ன நலிவானநிலைவேண்டும்.

இக்காலஎழுத்துகளைப்பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையாக எழுதுகிறார்கள், அது மொழி மிகவும் வலுவிழந்திருப்பதற்கோர் அறிகுறி.

பேசுவதுபோல் எழுதுவதுதான் உரைநடை, தமிழிலக்கணத்தில் செய்யுளுக்கான யாப்பிலக்கணத்தைத்தவிர மற்ற எல்லாவிலக்கணங்களும் உரைநடைக்கு பொருந்தும். மருத்துவர்சொல்வதுப்போல் எழுதினால் சொற்கள் மிகநீளமாகத்தான்போய்விடும் எளிதில் புரியாதுதான். அவர்நூலில் அதையும் குறிப்பிட்டுள்ளார், மிகநீளமாகவிருந்தால் சற்றே பிரித்துமெழுதிக்கொள்ளலாமென்று.

இப்போதிருக்கும் நிலை என்னவென்றால் பெரும்பாலானோருக்கு (ஏன் அனைவருக்கும் என்றே சொல்லலாம்) எங்கு சொற்கள் சேர்ந்திருக்கவேண்டும் எங்கு தனித்திருக்கவேண்டுமென்று தெரியாது. இது மொழிக்கு வளமான நிலையல்ல என்பதையுணர்ந்து இந்நூலை பரிந்துரைக்குமாறு அறிஞர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் இந்நூலை வெளியிடவும் அறிஞர்கள் இயன்றவரை உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நேசமிகு ராஜகுமாரன் சொன்னது…

அன்புமிக்க திரு.மு.இளங்கோவன் அவர்களுக்கு,வணக்கம். நண்பர் மருத்துவர் பொன்முடி அவர்கள் என்னை இந்நிகழ்வில் பங்குபெற அழைத்திருந்தார்.தவிர்க்க இயலாத ஒரு காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை.நிகழ்ச்சி நல்வண்ணம் நிகழ்ந்ததறிந்து மகிழ்ந்தேன். அரசாங்கமும்,மொழி ஆய்வு நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க நற்பணியை உங்களைப் போன்ற அறிஞர்களின் துணையுடன்,திரு பொன்முடிஆற்றத் துணிவது பாராட்டுதலுக்குரியது.உலகின் தொன்மைமிகு பதினெட்டுத் தலை மொழிகளில் பெருமைமிக்க ஒன்றாய் விளங்கும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள் என்பதை,வாழுங்காலம் முழுதும் எண்ணிக் கொண்டாட வேண்டாமா?!அந்த மொழிக்கு நம்மாலியன்ற நற்பணிகளை ஆற்றுதல் கடமையன்றோ!குறைந்த அளவில்,இம்மாதிரி முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம்-இத்தகு நிகழ்வுகளில் கலந்துகொள்வதே சிறந்த ஊக்கமூட்டுட்டுதலன்றோ!அந்த இனிய நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன்.உங்கள் நற்செயல்களுக்கு என் வணக்கமும் வாழ்த்துகளும் என்றும் உண்டென்பதை இங்கே உவகையுடன் பதிவு செய்கிறேன்.தொடரட்டும் உங்கள் தும்பைப்பூத் தூய தாய்த்தமிழ்ப் பணிகள்!................நேசமிகு
எஸ்.ராஜகுமாரன் 02-11-2012 செல்பேசி:9840124602