நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 23 மே, 2012

பெங்களூரு செலவு…


நடுவண் அமைச்சர் திரு.வீரப்ப மொய்லியின் இலக்கியப்பணியைச் சிறப்பிக்கும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தினர்

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் கருத்தரங்கம் மே 19, 20 ஆகிய நாள்களில் நடப்பதை என் பதிவில் ஐந்து மாதங்களுக்கு முன்பே பதிந்திருந்தேன். அதனைப் பலர் பார்வையிட்டுள்ளதைக் கருத்தரங்கிற்கு வந்தவர்களின் பேச்சால் அறிந்தேன்.

நான் பெங்களூருவிற்குப் புதுச்சேரியிலிருந்து கே.பி.என். பேருந்தில் புறப்படவும் திரும்பிவரவும் முன்பதிவு செய்திருந்தேன். முதுகுவலி எனக்கு அவ்வப்பொழுது ஏற்படுவதால் படுத்தவாறு செல்வது நன்று என நினைத்தேன். எனவே கூடுதல் கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்தேன்.

18.05.2012 புதுவையில் இரவு 11 மணிக்குப் பேருந்து புறப்பட்டது. நன்றாக உறங்கியபடி சென்றேன். காலை 6 மணியளவில் பேருந்து பெங்களூர் நகருக்குள் நுழைந்தது. என் வருகையை என் மாணவர் திரு.சு.பழனி அவர்களுக்கு முன்பே தெரிவித்திருந்தேன். அதன்படி நான் வந்துகொண்டிருக்கும் இடத்தைக் குறிப்பிட்டதும் அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு சு. பழனியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. பழனி வேலூர் மாவட்டம் வள்ளிமலையை அடுத்த பெருமாள்குப்பம் ஊரினர். கலவைக் கல்லூரியில் படித்த என் உள்ளங்கவர் மாணவர்களுள் ஒருவர். தந்தையார் வேளாண்மைத் தொழில் செய்கின்றார். ஒருவருக்கொருவர் உரையாடியபடி அவரின் உந்துவண்டியில் அவர் இல்லம் சென்றோம். பெங்களூரின் நகர அழகும், இயற்கைச்சூழலும் சில்லென்ற இளங்காற்றும் உள்ளத்தை மகிழ்வித்தன.

அவர் வீட்டில் குளித்து முடித்து, சிற்றுண்டி முடித்து, அல்சூர் ஏரிக்கரையில் இருக்கும் தமிழ்ச்சங்க அரங்கைக் காலை பதினொரு மணிக்கு அடைந்தோம் (19.05.2012). நான் அரங்கில் நுழைவதற்கும் தமிழ்த்தாய் வாழ்த்துத் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாவேந்தரின் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அதனைத் தொடர்ந்து கன்னட மொழி வாழ்த்தும் பாடப்பெற்றது. முறையாகத் தொடக்கவிழா நடந்தது. தொடக்கவிழா பற்றி முன்பே பதிந்துள்ளேன்.

எனக்குத் தெரிந்த பல நண்பர்கள் அங்கு இருந்தனர். ஒருவருக்கொருவர் நலம் வினவினோம். பேராசிரியர்கள் கனல்மைந்தன், கடவூர்மணிமாறன், நெய்வேலி தியாகராசன், திருவனந்தபுரம் சீனிவாசன், உள்ளிட்டவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். அந்த நேரத்தில் சிவகாசிப் பேராசிரியர் நயினார் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் நடைபெற்ற முறையற்ற பணியமர்த்தம் பற்றிய தம் சினத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு அமைவு கூறினேன்.

தொடக்க விழாவுக்குப் பிறகு உணவுக்கு அனைவரும் அருகில் இருந்த மண்டபத்திற்குச் சென்றோம். பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் ஐயாவைக் கண்டு அளவளாவினேன். தமிழூர் வரும்படி ஐயா அவர்கள் அன்பு அழைப்பு விடுத்தார். அடிக்கடி மடல் எழுதும்படி அறிவுறுத்தினார். என் பிள்ளைகள் சிலப்பதிகாரப் பெயர் தாங்கியவர்கள் என்பதால் ஒவ்வொரு பெயராகச் சுட்டி நலம் வினவினார். அந்தப் பெருமகனாருக்குச் சிலப்பதிகாரத்தில் இருக்கும் ஈடுபாடே அதற்குக் காரணம்.

அவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது திருவாளர் சீனிவாசன் என்னும் அன்பரைக் காணும் வாய்ப்பு அமைந்தது. அவர் எழுதிய WHY TAMIL SHOULD BE DECLARED AS CLASSICAL LANGUAGE? (Published by ACADEMY OF DRAVIDOLOGY, 49/2, Geddhala Halli, Gundu Toppu, Kothanoor post, Bangalore – 560 067, India) என்ற நூலை நம் பேராசிரியர் ச.வே.சு அவர்களிடம் வழங்க, அந்த நூலை என்னிடம் வழங்கும்படி ஐயா அவர்கள் ஓர் அன்புக் கட்டளையிட்டருளினார். திரு.சீனிவாசன் அவர்கள் பெங்களூரில் பிறந்த தமிழர் (1937). இவர்தம் தந்தையார் அவர்கள் தமிழ்ப்புலமை மிக்கவர். சித்திரக்கவி எழுதும் ஆற்றல் பெற்றவர். திரு.சீனிவாசன் அவர்களின் இல்லத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்நூல்கள் கொண்ட நூலகம் உள்ளது. திராவிடவியல் கழகம் நிறுவி ஆராய்ச்சி செய்துவருகின்றார். அயலகத்தாரின் தமிழ்ப்பணிகள் குறித்தும் நூல் எழுதியுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவர். உலகத்தமிழ் மாநாடுகளில் பங்குகொண்ட பெருமைக்குரியவர்.

இந்தியத் தொடர்வண்டித் துறையில் பணிபுரிந்து ( Dy. Chief Accounts Officer Indian Railways) ஓய்வுபெற்ற திரு.சீனிவாசன் அவர்கள் தமிழின் சிறப்பைப் பற்றி பல ஆங்கில நூல்கள் எழுதியுள்ளார். பெங்களூரில் வாழும் சீனிவாசன் அவர்கள் தாம் எழுதிய நூல்களை நம் தமிழக, இந்தியத் தலைவர்களுக்கு அனுப்பியதாகவும் ஒருவரும் கிடைத்தது என்றுகூட ஒருவரி எழுதவில்லை என்றும் வருந்தினார். இதில் எனக்கும் பட்டறிவு உண்டு என்பதால் நம் நாட்டினரின் நிலைக்கு அவருடன் இணைந்து நானும் வருந்தினேன்.

பகலுணவுக்குப் பிறகு கருத்தரங்க அமர்வுகள் தொடங்கின. பேராசிரியர் கனல்மைந்தன் அவர்களின் தலைமையில் இணையத்தில் மொழிபெயர்ப்புகள் என்ற என் கட்டுரையைப் படித்தேன். முனைவர் அண்ணா கண்ணன் உள்ளிட்ட நண்பர்கள் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து என் கட்டுரைக்கு வலிமை சேர்க்கும் சில கருத்துகளை உரைத்தனர். சுவையானதாக உரையாடல் இருந்தது. அதனை அடுத்து, பல நண்பர்கள் கட்டுரை படித்தனர். மாலை ஐந்துமணி வரை கருத்தரங்கம் தொடர்ந்தது.

கருத்தரங்க அமர்வின் நிறைவுக்குப் பிறகு வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா உள்ளிட்ட நாங்கள் அல்சூர் ஏரிக்கரையில் பல ஆண்டுகள் மூடப்பட்டு இருந்து, அண்மையில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையைக் கண்டோம்.

திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட்ட பிறகு மீண்டும் தமிழ்ச்சங்கத்திற்குத் திரும்பினோம். அல்சூர் ஏரியழகினைச் சுவைத்தபடி நண்பர்களுடன் உரையாடியபடி நடந்து வந்தோம். அப்பொழுது என் தமிழ் இணைய வகுப்பில் கலந்துகொண்டு பயற்சிபெற்ற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஒருவர் முன்வந்து உரையாடினார். தமிழ் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதாக உரைத்தார். இப்பொழுது இணையத்த்தில் உரையாடல் செய்து அயல்நாட்டு நண்பர்களுடன் பேசுவதாக உரைத்தார். அவருக்கு வாழ்த்துச்சொல்லி நடந்தேன்.

திருவனந்தபுரத்தின் ஆய்வு மாணவி ஒருவர் முகநூல் வழியாக என் படைப்புகளைப் பார்வையிடுவதாகவும். என் வலைப்பூவை அடிக்கடிப் பார்ப்பதாகவும் கூறி, தாமே முன்வந்து உரையாடினார். நான் அமைதியாகச் செய்யும் பணிகள் பலரின் பார்வைக்கு உட்படுவது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

இரவு உணவு முடிப்பதற்கும் தம்பி பழனி அவர்கள் என்னை அழைக்க வருவதற்கும் சரியாக இருந்தத. இரவு திரு.பழனி அவர்களின் இல்லத்தில் ஓய்வெடுத்தேன். காலையில் எழுந்து கடமைகளை முடித்து மீண்டும் தமிழ்ச்சங்கம் சென்றோம். காலையில் கருத்தரங்க அமர்வு. நண்பர்களுடன் உரையாடியபடி காலைப்பொழுது மகிழ்ச்சியாகக் கழிந்தது.

வேலூரிலிருந்து நண்பர் முனைவர் தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார். நாங்கள் இருவரும் கலவைக் கல்லூரியில் ஒன்றாகப் பணிபுரிந்தோம். இப்பொழுது அவர் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பணிபுரிகின்றார். மேலும் தஞ்சாவூர் திருவையாறு கல்லூரிப் பேராசிரியர் சுபாசு சந்திரபோசு, சரபோசி கல்லூரிப் பேராசிரியர் கோவிந்தராசு, உடுமலை அரசுகல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் மதியழகன், முனைவர் கிருட்டினன் உள்ளிட்டவர்களைக் கண்டு உரையாடினேன். மாலைப்பொழுது நெருங்கியதும் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றவண்ணம் இருந்தனர்.

மாலையில் நிறைவு விழா ஐந்து மணியளவில் தொடங்கியது நடுவண் அமைச்சர் திரு.வீரப்பமொய்லி அவர்கள் கலந்துகொண்டு தாம் வெளியிட்ட இராமாயண நூலை முதன்மை விருந்தினர்களுக்குப் பரிசளித்தார். அரசியல் அறிஞர் ஒருவருக்கு இலக்கிய ஈடுபாடு ததும்பி இருப்பதை அனைவரும் பாராட்டினோம். நிறைவு விழாவில் பேராசிரியர் ஆறு.அழகப்பனார், பேரா.நாச்சிமுத்து, முனைவர் க. இராமசாமி உள்ளிட்டோர் சிறப்பிக்கப்பட்டனர். அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தம்பி பழனி அவர்களுடன் அவர் இல்லம் வந்தேன். வரும்வழியில் நம் மழலைச்செல்வங்களுக்குப் புத்தாடை சில வாங்கினேன். எனக்கு ஒரு டி.சர்ட்டு வாங்கினேன்.

பெங்களூரு நகர நம்பியர் திரிதரு மருங்கில் சில முதன்மை இடங்களைப் பழனி காட்டியபடி வந்தார். ஒரு கடையில் சிற்றுண்டி முடித்தோம். அவர் வீட்டுக்கு வந்து என் பைகளை எடுத்துகொண்டு கே.பி.என். பேருந்தைப் பிடிக்க அவர்களின் கலாசிப்பாளையம் அலுவலகத்தை அடைந்தோம். பத்து மணிக்கு அந்த இடத்தை அடைந்தோம்.

20.05.2012, இரவு 10.30 மணிக்குப் பேருந்து. பேருந்து எண் K A 50 / 9699. பழைய பேருந்து. அனைவரும் ஏறிப் பேருந்தில் அவரவர்களுக்கு உரிய இடத்தில் அமர்ந்தோம்; படுத்தோம். பேருந்தும் புறப்பட்டது. பெங்களூரு எல்லையைக் கடக்கும்வரை பேச்சொலிகள் பேருந்தில் இருந்தன. அனைவரும் கண்ணயர்ந்தோம். காற்றுக்கட்டுப்பாடு செய்யப்பட்ட வண்டி என்பதால் பெங்களூரு- புதுச்சேரிக் கட்டணம் உருவா 640 வாங்கிக் கொண்டனர். ஆனால் காற்றுக்கட்டுப்பாடு இப்பொழுது செயல்படவில்லை என்பதை அவரவரும் நற்காற்று வாங்குவதற்குப் பேருந்தில் நடு இரவில் அலைந்த அலைச்சலில் தெரிந்துகொண்டோம். காற்று இல்லாமல் அனைவரும் தவித்துப்போயினர். பேருந்து ஓட்டுநரிடம் “ஏ.சி. போடுக” என்று இந்தியாவின் அனைத்துமொழிகளிலும் கேட்டுப்பார்த்துப் பயணிகள் சண்டையிட்டனர்.

கண்ணாடிக் கதவுகளைத் திறந்து இயற்கைக் காற்றை வாங்கும்படி ஓட்டுநர் அறிவுறுத்தினார். கோடைக் காலம் என்பதால் அனைவருக்கும் காற்று தேவைப்பட்டது. தூக்கம் இல்லாமலும் காற்று இல்லாமலும் கே.பி.என் பேருந்து எங்களைச் சுமந்து வந்துகொண்டிருந்தது, சாலைகள் சரியில்லாததால் வண்டி மேடு பள்ளங்களில் துள்ளித்துள்ளி எழுந்தது. பெருமுக்கல் மலையில் கருங்கல் சல்லி ஏற்றும் சரக்குந்தில் பயணம் செய்தது போல கே.பி.என் பேருந்துப் பயணம் இருந்தது.

எங்களுக்கு நேர்ந்த குறையைக் கே.பி.என். பேருந்து அலுவலகத்துக்குத் தெரிவிக்க பேருந்து முன்பதிவுச்சீட்டில் உள்ள 0413 2203369 என்ற புதுச்சேரி எண்ணுக்குப் பேசினோம். இந்த எண் இப்பொழுது உபயோகத்தில் இல்லை என்று பதில். அடுத்து 0413 420 5657 என்ற மற்றொரு எண்ணுக்குப் பேசினோம். ஐந்து நிமிடக் கெஞ்சலுக்குப் பிறகு 0427-4222222 என்ற சேலம் தலைமையிட எண்ணுக்குப் பேசச் சொன்னார்கள். அந்தத் தொலைபேசியில் பேச முயன்றும் எடுக்கவில்லை.

தவறுதல் அழைப்பு கொடுத்தால் முறையீடு தீர்க்கப்படும் என்று கே.பி.என். பேருந்து முன்பதிவுச்சீட்டில் 9486107109 என்று ஒரு எண் உள்ளது. அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்த்தேன். அதுவும் எடுக்கப்படவில்லை. சிங்கப்பூர், மலேசியாவில் பேருந்துப் பயணம் மிகச்சிறப்பாக இருக்கும். “குத்துக்கூலியும் கொடுத்து எதிர்மூச்சு போட்டக் கதையாக” ப் பணத்தையும் பெருந்தொகை இழந்து உடல்வலியுடனும் காற்று இல்லாமலும் என் கே.பி.என். பேருந்துப் பயணம் இருந்தது. பகல் முழுவதும் ஓய்வெடுத்தும் உடம்புவலி போகவில்லை.


கருத்தரங்கில் நடுவண் அமைச்சர் வீரப்ப மொய்லி அவர்களுடன் தமிழறிஞர்கள் ஆறு.அழகப்பனார், முனைவர் க.இராமசாமி, முனைவர் நாச்சிமுத்து உள்ளிட்டோர்.


திரு.சீனிவாசன், முனைவர் ச.வே.சுப்பிரமணியன்


பேராசிரியர் கனல்மைந்தன் (கருதரங்கத் தலைமை)



பேரா.ச.வே.சுப்பிரமணியன், மு.இளங்கோவன்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அல்சூர் ஏரி தூய்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தமிழுக்கென்று முறையாகப்போட்டிகள் ஏதும் நடக்கின்றனவா எனவும் தெரியவில்லை. திருவள்ளுவர் சிலையை கன்னட அரசு திறக்கும் முன்னே காற்று திறந்தது என்பதே உண்மை.

Murugeswari Rajavel சொன்னது…

நீங்கள் அமைதியாகச் செய்யும் ஆக்கப்பணிகள் காலத்தால் பதிவு செய்யப்படுகிறது.உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.எங்களைப் போன்றோர் அதனால் பயனெய்த வேண்டும்.

அ. வேல்முருகன் சொன்னது…

திரு நடராஜன், உரிமையாளர், KPN கைபேசி எண்9443733333 தொடர்பு கொள்ளுங்கள் தீர்வு கிடைக்கிறதா என்று பார்ப்போம்

புன்னியாமீன்... சொன்னது…

https://www.facebook.com/photo.php?fbid=477773612248994&set=a.374595912566765.112191.100000490773143&type=1&theater