நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 9 ஜனவரி, 2012

பேராசிரியர் அடிகளாசிரியர் நினைவுகள்…


இந்தியக் குடியரசுத்தலைவர் திருவாட்டி பிரதிபா தேவிசிங் பாட்டில் அவர்கள் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது வழங்கிப் பாராட்டுதல்


பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களைச் சற்றொப்ப இருபது ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன். அவரின் தண்ணிழல் நூல் அவர்மேல் எனக்கு ஈடுபாட்டை உருவாக்கியது. அதன் பிறகு அடிகளாசிரியரின் தொல்காப்பியப் பதிப்புகளில் மிகுந்த ஈடுபாடு உண்டானது. பல ஆண்டுகளாக ஐயாவைக் காண நினைத்தும் 09.08.2008 இல்தான் ஐயாவைக் கண்டு உரையாடினேன். அவரை நூற்றுக்கணக்கன ஒளிப்படங்களில் பதிவுசெய்தேன். தமிழ் ஓசை நாளிதழில் வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி என்ற தலைப்பில் ஐயாவின் பெருமைகளை ஒரு கட்டுரையாக எழுதி வெளியிட்டேன். இணையத்திலும் ஐயாவின் வாழ்க்கை உலகத்து அறிஞர்களின் பார்வைக்குச் சென்றது. மீண்டும் ஒருமுறை அவரை இல்லம் சென்று கண்டு மகிழ நினைத்திருந்தேன்.

ஆனால் செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு வெளியானதும் ஐயாவுக்குத் தொல்காப்பியர் விருது(ஐந்து இலட்சம் உருவா) அறிவிப்பு வந்தது. பொருத்தமான தேர்வு என்று தமிழ் உலகமே மகிழ்ந்தது. எனக்கும் நண்பர்களுக்கும் செம்மொழி இளம் அறிஞர் விருது கிடைத்தது. அதன் தொகை பெறுவதற்குச் சென்னை சென்ற பொழுது ஐயாவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். பிறகு இந்தியக் குடியரசுத்தலைவர் அவர்களின் மாளிகையில் தொல்காப்பியர் விருது வழங்குவதற்குக் குழுவாகப் பயணம் செய்தோம்.

செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க.இராமசாமி ஐயாவும், பேராசிரியர் கு.சிவமணி ஐயாவும் ஏர் இந்தியா விமானத்தில் நாங்கள் அனைவரும் பயணம் செய்வதற்குரிய சூழலையும், ஒரே இடத்தில் தங்குவதற்கு உரிய சூழலையும் அமைத்தார்கள். அப்பொழுது அனைவரும் இணைந்து புதுதில்லி வானூர்தி நிலையத்தில் ஒன்றாகப் படம் எடுத்துக்கொண்டோம்.

பிறகு குடியரசுத்தலைவர் மாளிகையில் பரிசு பெறுவதற்கு ஐயாவுடன் ஒரே இடத்தில் சில மணி நேரம் கழிக்க வாய்ப்பு கிடைத்தது. மாலையில் புதுதில்லியில் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஐயாவுடன் ஒரே மேடையில் தமிகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களுமான சா.செகத்ரட்சகன், நெப்போலியன், பழனிமாணிக்கம் உள்ளிட்டவர்களுடன் இணைந்து படம் எடுத்துக்கொண்டு, பாராட்டுப் பெற்றதை வாழ்நாளில் மறக்க இயலாது.

மறுநாள் காலையில் வானூர்தி கிடைக்காமல் திண்டாடிய எங்கள் அணியில் சிக்காமல் முன்னதாக ஐயா அவர்கள் பாதுகாப்பாக வானூர்தியில் சென்னை வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு அவ்வப்பொழுது ஐயாவின் உடல்நலனைப் பற்றி வினவிய வண்ணம் இருப்பேன். நேற்று நடு இரவு 12 மணியளவில் திரு.சனதா சி.மாணிக்கம் அவர்கள் அடிகளாசிரியர் மறைவு குறித்த தகவல் தந்தார்கள். உடனடியாக பேராசிரியர் அ.சிவபெருமான் அவர்களிடம் ஆழ்ந்த இரங்கல் கூறிய கையுடன் இணையத்தில் ஐயாவின் மறைவை உலகத் தமிழர்களுக்குத் தெரிவித்தேன். ஆர்வமுடன் இந்தச் செய்திகளை வெளியிட்ட இணைய தளங்களுக்கு நன்றி. தொல்காப்பிய அறிஞர்களுள் ஒருவரை இழந்து நிற்கின்றோம். தொல்காப்பிய உரைநூல் ஒன்று இயற்கையின் பக்கத்தில் கிழிந்துவிட்டது…

2 கருத்துகள்:

முனைவர் அ.சின்னதுரை சொன்னது…

வணக்கம். அடிகளாசிரியர் பற்றிய தங்களின் கருத்துரைகள் மிக அருமை.நானும் அவரை அறிவேன்.பார்த்துப் பேசியிருக்கிறேன்.ஆனால் இவ்வளவு விவரங்களை அறிந்ததில்லை.தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.

Nayagar சொன்னது…

அடிகளாசிரியர் மறைவு பெரிய இழப்பு.
அவரது நிணைவிணை போற்றுவோமாக
உறிய முறையில் பதிவு செய்து பெருமைபடுத்திய உங்களுக்கு நன்றி
பிரஞ்சுப் பேராசிரியர் நாயகர்.