
நூலட்டை
அண்மையில் ஊற்றங்கரை பயிலரங்கத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்த இரவுப்பொழுது எங்கள் தாத்தா இறந்த செய்தி கிடைத்தது. பயிலரங்கு ஒழுங்குசெய்வது பெருஞ்செயல். இச்செய்தியால் கிடைத்த வாய்ப்பும் நழுவப் பார்க்கின்றதே என்று நினைத்தேன். இந்த நெருக்கடியில் என்ன செய்வது என்று திட்டமிட்டேன். காலையில் 120 கி.மீ. உள்ள எங்கள் ஊருக்குச் சென்று இறப்புச்சடங்கில் கலந்துகொள்வது எனவும் அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் புதுவைக்குப் புறப்பட்டு வந்து, அங்கிருந்து ஊற்றங்கரைக்கு மாலையில் புறப்படுவது என்றும் எண்ணினேன்.
என் திட்டப்படி காலையில் கடலூர் வழியாக வடலூர் வந்து இறங்கினேன். காலை 9 மணி என்பதால் அங்குள்ள கடையில் சிற்றுண்டி முடித்துப் பேருந்தேற நின்றேன். அப்பொழுது அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகையில் திரைப்பா ஆசிரியர் அண்ணன் அறிவுமதி அவர்களின் பெயர் இருக்கக்கண்டு என்ன நிகழ்வு என்று படித்துப் பார்த்தேன். மறுநாள் “வீணங்கேணி என்கிற அழகாபுரம்” என்ற நூல்வெளியீடு எனவும் அண்ணன் அறிவுமதி அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வு எனவும் அறிந்தேன். மறுநாள் நான் ஊற்றங்கரையில் இருக்க வேண்டியுள்ளதால் நல்ல இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்ததுடன் என் பிறந்த ஊர் சென்று இறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அடுத்த அரைமணி நேரத்தில் புதுவைக்குப் பேருந்தேறினேன்…..
இரு கிழமை கழித்து நெய்வேலியிலிருந்து ஒரு செல்பேசி அழைப்பு. வி.சண்முகம் பேசுகின்றேன் என்றார். இவர்தான் வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூலாசிரியர். செயல்திறம் மிக்க இளைஞர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட மக்கள் பற்றாளர். தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அதற்குள் வீணங்கேணி ஆசிரியர் பற்றிய பல செய்திகள் நண்பர்கள் வழியாக அறிந்தேன். அடுத்தமுறை ஊருக்குச் செல்லும்பொழுது திருவாளர் வி.சண்முகம் அவர்களைக் கண்டு உரையாட நினைத்திருந்தேன். அதற்குள் அவர் எழுதிய வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூல் தனித்தூதில் வந்தது.
நிலக்கரியாலும் அனல் மின் உருவாக்கத்தாலும் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெரும் செல்வம் ஈட்டித் தரும் நெய்வேலியை ஒட்டியுள்ள ஒரு சிற்றூரான வீணங்கேணியில் பிறந்த வி.சண்முகம் அவர்களின் தன்வரலாறும், ஊர்வரலாறும்தான் நூல் செய்தி.
வீணங்கேணி ஊர் முன்னேற்றத்திற்கு வி.சண்முகம் அவர்கள் நடத்திய பலநிலைப் போராட்டங்கள் இந்த நூலில் சிறப்பாகப் பதியப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட வரலாறு, வடலூர் சார்ந்த முதன்மை ஊர்கள், வள்ளலார் அறநிலை குறித்த தகவல்கள் என்று பல அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. வி.சண்முகம் அவர்களின் முன்னோர்கள் இந்த ஊருக்குக் குடிபெயர்ந்த வரலாறு சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவுக்கொள்கையும், தமிழ்ப்பற்றும், மக்கள் பற்றும் கொண்ட வி.சண்முகம் அவர்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்தபடி பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளதை அறிந்து வியப்பு மேலிடுகின்றது.
வீணங்கேணியின் நிலப்பரப்பு, நீர்நிலைகள், குடும்பவரலாறுகள், இப்பகுதியில் உள்ள கல்விநிறுவனங்களின் வரலாறு, இயற்கைக் காட்சிகள், மக்கள் வாழ்க்கைமுறை, இங்கு நடந்த சாதிய மோதல்கள் குறித்து அரிய செய்திகள் பலவற்றைத் தந்துள்ளார்.
ஒவ்வொருவரும் தம் வரலாற்றை எழுத வேண்டும் என்ற உந்துதலையும் அவ்வாறு எழுதும்பொழுது தம் ஊர்வரலாற்றையும் இணைத்து எழுத வேண்டும் என்ற அரிய விருப்பத்தையும் இந்த நூல் தருகின்றது. இந்த நூலில் ஏற்றம் இறைக்கும்பொழுது பாடப்படும் பாடல்கள் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வருவதற்கு முன்பு இந்தப் பகுதியில் இயற்கையான ஆர்ட்டீசியன் ஊற்றுகள் இருந்தன. அந்த அளவு நீர்வளம் மிகுந்த பகுதி இது. கரி தோண்டியெடுக்கச் சுரங்கம் தோண்டிய பிறகு தண்ணீர் வளம் குறைந்தது. இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையும் நீர்வளமும் காணாமல்போயின. அவற்றைப் போலவே மக்கள் நாவில் குடியிருந்த ஏற்றப்பாடல்களும் இன்று காணாமல் போகும் சூழலில் அரிய பாடல்களைப் பதிவுசெய்து மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்த வி.சண்முகம் போன்ற இளைஞர்கள்தான் தமிழக வரலாற்றை எழுதுவதற்கு முன்வர வேண்டும்.
வீணங்கேணி என்கிற அழகாபுரம் நூல் தொடர்புக்கு:
வி.சண்முகம்
வீணங்கேணி சிற்றூர்
வடக்குச் சேப்ளாநத்தம் ஊராட்சி
வடலூர் அஞ்சல் – 607 303
கடலூர் மாவட்டம்
செல்பேசி : + 91 94434 02522
நூல் விலை: 70 உருவா, பக்கம் 120.
சென்னையில் நூல்பெற: தமிழ் அலை இசாக், பேசி: 9786218777
3 கருத்துகள்:
700 இடுக்கைகளுக்கு மேல் பதிந்துள்ளமைக்கு வாழ்த்துகள் ஐயா.
- கணேஷ் காந்தி
Congrats for posting more than 700 Posts.
- Ganesh Gandhi
தங்கள் அன்பான வாழ்த்தினுக்கு நன்றி ஐயா
புத்தகம் பற்றி அறிந்துகொண்டோம். நன்றி.
கருத்துரையிடுக