
தில்லித் தமிழ்ச்சங்கம்
தில்லித் தமிழ்ச்சங்கம்அறுபதாண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தலைநகரில் சீரிய தமிழ்ப்பணியைச் செய்து வருகின்றது. பேராசிரியர் சாலை இளந்திரையன் உள்ளிட்ட அறிஞர்கள் வழியாகத் தில்லித் தமிழ்ச்சங்கம் பற்றி முன்பு அறிந்துள்ளேன். நான் குடியரசுத்தலைவர் விருதுபெறச் செல்லும்பொழுது அந்தச் சங்கத்தில் தமிழன்பர்களைச் சந்தித்துத் தமிழ் இணையம் பற்றி உரையாடுவதற்குரிய ஒரு வாய்ப்பு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். என் விருப்பத்தை வடக்கு வாசல் ஆசிரியர் திரு. பென்னேசுவரன் அவர்களிடம் தெரிவித்தேன்.அவர் தில்லித் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிடம் பேசி அதற்குரிய ஒரு வாய்ப்பை உருவாக்கினார்கள். தொலைபேசி,மின்னஞ்சல் வழியாக நிகழ்ச்சி உறுதிசெய்யப்பெற்றது.
திட்டமிட்டபடி 05.05.2011 மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி நடத்த எண்ணியிருந்தோம். ஆனால் குடியரசுத்தலைவர் மாளிகையில் எனக்குரிய கடமைகளை முடித்துத் திரும்ப மணி ஆறு முப்பது ஆனது. ஏழுமணியளவில் தில்லித் தமிழ்ச்சங்கம் அடைந்தோம். இதன் இடையே தில்லிப் பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் திரு.கிருட்டினசாமி சான் சுந்தர் அவர்கள் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து என்னை அழைத்துச்சென்றார்கள்.
தமிழ்ச்சங்கத்தில் வடக்குவாசல் ஆசிரியர் திரு.பென்னேசுவரன், திரு.கிருட்டினமூர்த்தி (தலைவர்), திரு. சக்திபெருமாள் உள்ளிட்ட அன்பர்கள் இருந்தனர். திரு.பென்னேசுவரன் அவர்கள் தலைமையில் கலந்துரையாடல் தொடங்கியது.முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர். வலைப்பதிவர் கயல்விழி உள்ளிட்டவர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோ.இராசகோபால் அவர்கள் வருகை தந்திருந்தார். புலவர் இரா.விசுவநாதன் உள்ளிட்ட தமிழார்வலர்களும் கலந்துகொண்டனர்.
என் கல்வியார்வம், தமிழார்வம், தமிழ் இணையத்துறையில் என் முயற்சி, ஊர்தோறும் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதன் நோக்கம்,தமிழ் இணையம் வளர்ந்துள்ள வரலாறு, தமிழ் இணையத்துக்கு உழைத்தவர்கள்,பங்களித்தவர்கள் பற்றி எடுத்துரைத்தேன். இணையத்தைப் பயன்படுத்தித் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நினைவுகூர்ந்தேன்.இணையம் சார்ந்த பல செய்திகளைப் பரிமாறினேன்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அன்பர்கள் பலரும் பல வகையான வினாக்களை எழுப்பிக் கலந்துரையாடலைச் சுவையானதாக மாற்றினர். இணையம் தொடர்பான விரிவான ஒரு பயிலரங்கை நடத்த வேண்டும் என்று செயலாளர் சக்தி பெருமாள், தலைவர் கிருட்டினமூர்த்தி, வடக்குவாசல் ஆசிரியர் பென்னேசுவரன் ஆகியோர் குறிப்பிட்டனர். தில்லியில் நடக்கும் நிகழ்வுகளை நாம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தில்லியில் பல வலைப்பதிவர்களை உருவாக்குவது காலத்தில் தேவையாகும். அதற்குரிய முயற்சிகளில் தில்லி வாழும் தமிழ் அன்பர்கள் முயற்சி செய்ய வேண்டுகின்றேன்.

திருவள்ளுவர் சிலையுடன் காட்சிதரும் தமிழ்ச்சங்கம்(சான்சுந்தர்,மு.இ)

கலந்துரையாடலில் ஈடுபட்டிருக்கும் தில்லித் தமிழன்பர்கள்

மு.இ உரையாடல்

சான்சுந்தர் அவர்கள் கருத்துரை வழங்குதல்

மு.இ, பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளர் சான்சுந்தர்

மு.இ. கலந்துரையாடல்