
பார்வையாளர்கள்
தஞ்சாவூரை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவோம் என்று செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு.பிரின்சு ஒரு விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இருவரும் சென்னையில் மீண்டும் ஒருமுறை சந்தித்து நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம். இந்த மாதம்(செப்டம்பர்) 27 ஆம் நாள் நடத்துவோம் என்று 23.ஆம் நாள் குறிப்பிட்டார். நானும் இசைவு தெரிவிதேன். உடனடியாக அழைப்பிதழ் ஆயத்தம் ஆனது.
இணையத்தில் என் பக்கத்திலும் விடுதலை நாளேட்டிலும் செய்தி வெளியானது முதல் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதில் உண்மையான ஆர்வம்கொண்ட அன்பர்கள் சிலர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து கூறியதுடன் நில்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு என் முயற்சியைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டு அனைத்து வகையிலும் உதவ வேண்டினர். அவ்வகையில் மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் நா.கணேசன்,திருவாளர் ஆல்பர்ட்டு பெர்னான்டோ உள்ளிட்டவர்களின் தமிழன்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.
26.09.2010 மாலை 3 மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஒருமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர் சென்று சேரும்பொழுது இரவு 10.30 மணி.வழியில் என் நண்பர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் தம் அன்பான வாழ்த்துகூறி தொலைபேசியில் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தஞ்சையில் இராசராசன் விழா நிறைவுநாள் என்பதால் மக்கள் திரள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றது.காவலர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் நண்பர் பிரின்சு அவர்கள் எனக்காக ஒரு மூடுந்துவண்டியில் வந்து நின்றார். இரவு உணவை அங்கு முடித்துகொண்டு நேரே பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றோம். புத்தாயிரம் ஆண்டு குடிலில் எனக்கு உயர்தர அறை ஒதுக்கியிருந்தனர். இயற்கையான அமைப்பில் கட்டப்பட்ட குடில் என்று நண்பர் பிரின்சு அந்த அறையின் சிறப்பைக் கூறினார். இயற்கை எழில்சூழ்ந்த அந்த அறையில் தங்குவது ஒரு மகிழ்வாக இருந்தது. நெடுநாழிகை யானும் பிரின்சும் உலக நடப்புகளையும் தமிழக, உலக அரசியில் நடப்புகளையும் உரையாடிப் பகிர்ந்துகொண்டோம். காலையில் விரைந்து எழ வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இருவரும் இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றோம்.
காலையில் வைகறையில் எழுந்து என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போகும் வழியில் பழகுமுகாம் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை அன்புடன் பழகவும் அறிவுசார்ந்த செய்திகளை அறியவும் நற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தப் பயிற்சிமுகாம் ஏற்பாடாகி இருந்தது. ஆண்,பெண் சிறுவர்கள் இந்தப் பயிலரங்கில் பெற்றோர் நினைவு மறந்து மகிழ்ச்சியாக இருந்ததை நேரில் கண்டு வியந்தேன்.
சீருடையில் சிறுவர்கள் பெரியார் பிஞ்சுகளாக உண்மையில் தெரிந்தனர்.நான் 9.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும் அரங்கத்திற்குப் புறப்பட அணியமானேன். தொடக்கவிழா ஒரு வகுப்பறையில் நடந்தது.மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
பொறியியல் பயிலும் மாணவர்களும், முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் மாணவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகப் புலமுதன்மையர் திரு.இரா.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.தமிழ் வழி இணையத்தை அறிவதன் சிறப்பை விளக்கினார்.பேராசிரியர் அருணாசலம் அவர்கள் என்னை அரங்கிற்கு அறிமுகம் செய்து பெருந்தன்மையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பேராசிரியர் அருணாசலம் அவர்கள் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலை நிறைவாண்டு பயின்றபொழுது அவர் இளம் முனைவர்பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்பொழுதே மூத்த மாணவர்களின் அன்புக்கு உரியவனாக நான் விளங்கிய பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் ஒரு பெரும் பண்பாளர் என்று உறுதிப்படுத்தினார். ஏனெனில் இன்றைய கல்வி உலகத்தினர் பிறரைத் தாழ்த்துவதன் வழியாகத் தம்மை உயர்த்திப் பார்ப்பர்.ஆனால் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் பண்பால் தாமும் உயர்ந்து நின்றார்.
நான் இன்று நடைபெறும் பயிலரங்கில் பேசப்படும் செய்திகளையும் பயிலரங்கு நடப்பதன் நோக்கத்தையும் அரங்கத்திற்கு எடுத்துக்காட்டினேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் என் உரையைச் செவி மடுத்தனர். செல்வி இளங்கவின் வரவேற்புரையாற்றவும், செல்வி ஈழவேங்கை அவர்கள் நன்றியுரையாற்றவும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.
தொடக்க விழாவுக்குப் பிறகு சிறிது தேநீர் அருந்தி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் கூடினோம். அங்கு என் மடிக்கணினியைப் பொருத்திப் பேராசிரியர் அறிவுச்செல்வன் அவர்கள் காட்சி விளக்கதுடன் என் உரை அமைய உதவினார். காலை 11 மணியளிவில் தொடங்கிய என் உரை 1 மணி வரை நீண்டது. தமிழ் இணைய வரலாற்றை நினைவுப்படுத்தி,தமிழ் இணையத்திற்கு உழைத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.புகழ்பெற்ற பல தளங்களை அறிமுகம் செய்தேன். தமிழ்த்தட்டச்சு, எழுத்துரு சிக்கல், திரட்டிகள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் பற்றி தேவையான இடங்களில் சுருக்கியும் உரிய இடங்களில் பெருக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்.
பகலுணவுக்கு மீண்டும் உணவுக்கூடம் சென்றோம். அங்கு மழலைகள் பழகுமுகாம் முடித்துக்கொண்டு உணவுக்கு வந்திருந்தனர்.வந்த இளம் பிஞ்சுகளை ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் அன்புடன் ஒவ்வொருவராக வினவி ஊக்கப்படுத்தினார்கள். பிள்ளைகளுடன் பழகுவதில் ஆசிரியர் பெரிய ஈடுபாடு காட்டினார். என் நிகழ்ச்சிப்போக்கு பற்றி நண்பர்கள் ஆசிரியர் கி.வீரமணி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினர். பிற்பகல் நிகழ்வுக்கு வருவாதக உரைத்து ஊக்கப்படுத்தினார்கள். அனைவரும் உணவு உண்டோம்.
மீண்டும் பயிலரங்கம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. வலைப்பூ உருவாக்கம் பயிற்சியாக நடந்தது. முதல் இரண்டு படி நிலைகளைச் செய்தபொழுது வலைப்பூ உருவாக்கத்தில் சிக்கல் நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சில பயன்பாடுகளுக்கு இணையதளத்தில் கட்டுப்பாடு இருந்ததால் புதிய வலைப்பூ உருவாக்கமுடியவில்லை என்று நினைத்தேன். பிறகு என் கணக்கைத் திறந்து செய்தி உள்ளிடல், தவறு களைதல், படம் இணைத்தல், ஒலி,ஒளி இணைத்தல், இணைப்பு இணைத்தல் பற்றி செய்முறையாக விளக்கினேன். கலந்துகொண்ட அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதால் என்னை விட அவர்கள் வேகமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன். பின்னர் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றியும் அதன் தேவை பற்றியும் செய்தி உள்ளிடல் பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின் பயன்பாடுகளை விளக்கிச் சுரதா தளத்தின் சிறப்பைப் பயிற்சிபெற்றவர்களுக்கு எடுத்துரைத்தேன்.
5 மணி வரை இது நீண்டது.இந்த நேரத்தில் தமிழர்தலைவர் கி.வீரமணி ஐயா அவர்கள் அரங்கத்திற்கு வந்தார்கள்.அவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், புலமுதன்மையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன் ஐயா உள்ளிட்ட அன்பர்களும் வந்திருந்தனர். காலைமுதல் நடந்த பயிலரங்க நிகழ்வுகளின் சுருக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி ஐயா உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டினேன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படத்தை அவர்கள் முன்பாக வலைப்பூவில் ஏற்றிக்காட்டினேன். அரங்கத்தினர் மகிழ்ந்து கைதட்டி ஆரவாரித்தனர். அதன் பிறகு தம் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இத்தகு பயிலரங்குகளை நடத்தி அறிவுப்புரட்சி நடத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.நிகழ்ச்சி நிறைவுற்றது. மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தஞ்சையில் 7 மணியளவில் பேருந்தேறி, நள்ளிரவு 1.30 மணிக்குப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.

மு.இளங்கோவன்,கி.வீரமணி,பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்

அரங்கில் மு.இ,புலமுதன்மையர் இரா.கந்தசாமி,பேராசிரியர் அறிவுச்செல்வன்

பேராசிரியர் அருணாசலம் உரை

உரையை உற்றுக் கேட்கும் மாணவிகள்

ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்

பயிற்சிபெறும் மாணவர்கள்

மு.இளங்கோவன் உரை

மாணவர்களுடன் நான்

அருட்தந்தையாருடன்...

நன்றியுரை வழங்கும் ஈழவேங்கை