திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்ற நேரம் அது(1990). ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன். என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார். ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன்.
திருப்பனந்தாள் ஏழு கடை மாடியில் தங்கியிருந்து, குமார் என்னும் அண்ணனின் உணவுக் கடையில் உணவு உண்ணுவது வழக்கம். அங்குத் தங்கிப் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் அயலூரிலிருந்து வந்து தங்கிப் பயின்றனர். அனைவரும் கணக்கு வைத்து உண்ணுவதும், மாத இறுதியில் வீட்டிலிருந்து கொணரும் தொகையைக் கொடுப்பதும் வழக்கம்.
பல மாணவர்கள் தொகையைக் கொடுக்க முடியாத வறுமைச் சூழலில்தான் படித்தோம். தொகை கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள். இல்லையேல் வருந்த மாட்டார்கள். தொடர்ந்து உணவு கொடுத்து உதவுவது அவர் வழக்கம். அதற்காக அவர் கடையில் ஒன்றும் மிகப்பெரிய வணிகம் நடப்பது இல்லை. பொதுவான வணிகம்தான். பலருக்குக் கடன் கொடுத்தும் அந்தக் கடை என்னவோ அமுதசுரபியாக இன்றும் பலருக்கு உணவை வழங்கிக்கொண்டுதான் உள்ளது.
அந்தக் கடையில் அண்ணன் குமார் முன்பு வணிகம் கவனித்தார். இன்று அவர் உடன்பிறப்புகள் வணிகத்தைக் கவனித்து வருகின்றனர். புளிச்சோறு, தயிர்ச்சோறு, பூரி, இட்டிலி, வடை உள்ளிட்ட உணவுகளைக் கொண்டு அந்தக் கடையில் வணிகம் நடக்கும்.மூன்றுவேளையும் மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடையில் உண்டு மகிழ்வோம். இரவு உணவு பெரும்பாலும் முட்டையடை இணைந்து இருக்கும். எங்களுக்கு உணவுகொடுத்து ஆதரித்த அந்தக் குமார் என்னும் ஆண் தாயை உயிர் உள்ளவரை மறவோம்.
அந்தக் கடைக்குச் சென்று முன்பு உண்டு வந்த நண்பரைக் கண்டு இன்று என்ன உணவு? என்பது ஒவ்வொரு நாளும் வாடிக்கையாக இருந்தது. என்னையும் மாணவர்கள் அவ்வாறு கேட்பார்கள். அந்தக் கடையில் இருக்கும் உணவுப் பண்டங்களின் பெயரை நான் தனித்தனியே சொல்வதில் சலிப்படைவேன். ஒரு நாள் அழகிய கட்டளைக் கலித்துறையில் ஒரு பாட்டாக்கி அங்கிருந்த நண்பர்களுக்குச் சொன்னேன்.
இட்டிலி உப்புமா ஈர்வகைச் சோறுடன் பூரிரொட்டி
முட்டை யடையும் குளம்பி முறுவலம் தோசையுடன்
கெட்டித் துவையலைக் கேட்க உடனே மகிழ்ந்தபடி
கட்டித் தருவான் குமாரெனும் வள்ளல் கடையினிலே
என்பது அந்தப் பாடல்.
விடுப்பு மடல்கூடப் பாட்டில் வடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பாட்டு எழுதுவதில் பலமுறை பரிசில் பெற்றுள்ளேன் என்பதையும் இங்கு நினைத்துப்பார்க்கிறேன்.
மரபுப்பாடலும் நாட்டுப்புறப் பாடலுமாக இணைந்த என் வாழ்வில் திரைபடத்துறைக்குப் பாடல் எழுத வேண்டும் என்பதுதான் என் பயிற்சியின் நோக்கம். ஆனால் ஆய்வுத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டதால் பாட்டெழுத இன்று வாய்ப்பில்லாமல் போனது.
அவ்வாறு மரபில் விளையாண்ட காலத்தில் ஒரு நாள் வகுப்பறையில் எங்கள் அன்புக்குரிய பேராசிரியர் முனைவர் வே. சீதாலெட்சுமி அவர்கள் பக்தி இலக்கியம் சார்ந்த பாடத்தை எடுத்துக்கொண்டிருந்தார். கல்லூரிப் பணியாளர் ஒருவர் சுற்றறிக்கை ஒன்றை எடுத்து வந்தார். அந்த ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவுக்கு மாணவர்களிடம் இருந்து படைப்புகளை வேண்டியிருந்தது. என்ன படைப்புகள் தரலாம் என வகுப்பில் சிறு சலசலப்பு.
என்னைப் பேராசிரியர் அம்மா அவர்கள் எழுப்பி ஒரு ஒரு சிற்றிலக்கியம் வரையலாமே என்றார். நானும் எழுதுகிறேன் என்று சொல்லி வகுப்பு முடிந்து, அறைக்குச் சென்றேன். இரவு முழுவதும் ஆற்றுப்படை எழுதுவதில் மனம் ஈடுபட்டுக்கிடந்தது. இப்படித் தொடங்கலாமா? அப்படித் தொடங்கலாமா? என வினவிக் கிடந்த மனம் நடு இரவில் கண்ணயர ஓய்வு கொண்டது. விடியற் காலையில் எழுந்து எழுதத் தொடங்கினேன். ஒரே மூச்சில் எழுதி முடித்தேன். 168 அடி நிலைமண்டில ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்.
வகுப்பறைக்குச் சென்றதும் என் படைப்பை மாணவர்களுக்குக் காட்டினேன். அனைவரும் வியந்தனர். மகிழ்ந்தனர். பேராசிரியர் அம்மா அவர்களின் வகுப்புக்காக அனைவரும் காத்துக்கிடந்தோம். அவர் வருகைக்குப் பிறகு என் ஆற்றுப்படை உருவான விதத்தைக் கூறினேன். மகிழ்ந்தார். திருத்தங்களைக் குறிப்பிட்டார். என் ஆசிரியர் குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்களின் பார்வைக்கும் உட்பட்டது. பிழைகள் செப்பம் செய்யப்பெற்றுக் கல்லூரி மலருக்கு உரிய பொறுப்பாளப் பேராசிரியரிடம் படைப்பை வழங்கினேன். அதன் சிறப்பை உணராத பேராசிரியர் 168 வரிகளை உடைய கல்லூரி வரலாறு சொல்லும் அந்தப் படைப்பை வெளியிட முடியாது என வரிக்கணக்குப் பார்த்து ஒதுக்கினார்.
என் முதல் படைப்புக் குழந்தையை வீசியெறிய மனம் இல்லை. அப்பொழுது நெய்வேலியில் இருந்த தமிழ் உணர்வு மிக்க பொறியாளர்கள் பலர் எனக்கு நல்ல அறிமுகமானார்கள். அவர்களை ஒவ்வொரு காரி, ஞாயிறு சென்று காண்பது என் வழக்கமாகும். பொறியாளர்கள் மு.அறவாழி, செ.மேதலைவன், ஆ.கருப்பையா உள்ளிட்டவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உறவாகவும் நட்பாகவும் பெற்றிருந்தேன். ஈழத்துத் தமிழ் அன்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானதும் உண்டு.
ஒருநாள் மாணவராற்றுப்படையின் படியைக் கண்ணுற்ற மேதலைவனார் திருத்தி மகிழ்ந்தார். அது கல்லூரி மலருக்கு எழுதப்பெற்றது என்றும் அச்சேறாமல் போனது என்றும் குறிப்பிட்டேன். அதனை நாம் அச்சிட்டு விடலாமே என்றார். திரு.கருப்பையா அவர்களிடம் பேசி வெளியிடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தார். ஒர் இரவு நான் கருப்பையா அவர்களின் இல்லம் சென்றேன். அவர் மகன் வழியாக மாணவராற்றுப்படை கையெழுத்துப்படி குறிஞ்சிப்பாடியில் இருந்த அழகிரி அச்சகம் சென்றது.
சில நாள் கழித்து நானும் குறிஞ்சிப்பாடி சென்று அழகிரி அச்சக உரிமையாளர் திரு. மாசிலாமணி அவர்களைக் கண்டேன். முகப்பட்டைக்குப் படக்கட்டை செய்து வாங்கி வரும்படி சொன்னார். குடந்தையில் உள்ள ஓவியக்கல்லூரியில் மாற்கு என்னும் இளைஞர் ஓவியக்கலை பயின்றார். இவர் என் நண்பர் திரு ஆ.வே.இராமசாமி ஐயாவின் மகன் திருவள்ளுவன் வழி எனக்கு நன்கு அறிமுகம் ஆனார்.
மாற்கு அவர்களின் அண்ணார் செயங்கொண்டத்தில் கடை வைத்திருந்தார். அவர் வழியாகவும் மாற்கு உறவு எனக்கு வலிவாக இருந்தது. என் விருப்பத்தைச் சொல்லி மாற்கு அவர்களிடம் படம் வரையச் சொன்னேன். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற ஒரு மாணவன் துன்பத்துடன் வெளியேறுவதாகவும், உள்ளே ஒரு மாணவன் ஆர்வமுடன் படிக்க வருவதாகவும் படம் அமைக்க வேண்டினேன்.
அப்பொழுது எங்கள் கல்லூரி கே.எஸ்.எஸ். கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்க் கல்லூரியில் அவ்வாறு ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததில் எனக்கு ஒரு நெருடல் தெரிந்தது. ஏனெனில் அக்கல்லூரி தமிழ் வளர்க்கும் நோக்கில் தவத்திரு சாமிநாத சுவாமிகள் அவர்களாலும் அவர்களின் காலத்திற்குப் பிறகு அருள்நந்தித் தம்பிரான் என்னும் அருளாளராலும் புரந்தருளப்பெற்றது. இத்தகு கல்லூரியின் பெயரைத் தமிழில் மாற்றி வழங்க நினைத்த என் தமிழுள்ளம் கா.சா.சு.கலைக்கல்லூரி என்று அட்டையில் மாற்றி வழங்க விரும்பியது. அதன் அடிப்படையில் அட்டை மிகச்சிறப்பாக வடிவமைக்கப் பெற்றது.
மாணவராற்றுப்படை மெதுவாக அச்சேறத் தொடங்கியது. அதுபோல் கல்லூரி மலரும் வெளிவர ஆயத்தமானது. கல்லூரி மலர் வெளிவருவதற்குள் மாணவராற்றுப்படை வெளிவர வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. அச்சு வேகத்தைக் கூட்டினோம்.
நானே குறிஞ்சிப்பாடி சென்று தங்கி, இரண்டு நாளில் அச்சு வேலையை முடித்தோம். இரவு பகல் பாராமல் அச்சு வேலை நடந்தது. அழகிரி அச்சகம் மிகச்சிறிய அளவிலான அச்சகம். எங்கள் நூல் மிகவும் குறந்த பக்கம் என்றாலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் மெதுவாக அச்சேறியது.
1990 மார்ச்சு 30 இல் நூல் வெளியிடும் நாள் குறிக்கப்பட்டது. இதற்கு இடையே கல்லூரி வகுப்புகள் நிறைவு நிலைக்கு வந்தன. தேர்வு நெருங்கியது. நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் பல ஊருக்கும் அனுப்பினோம். அப்பொழுது மடத்தின் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அவர்கள் என் நூல் வெளிவருவதற்குப் பல வகையில் உதவினார். அன்னாரை வாழ்நாள் முழுவதும் நினைவேன். அவர்தம் அணிந்துரை அந்த நூலுக்கு அழகு சேர்த்தது. பாவலர் இறைக்கோ என்பவரின் அணிந்துரையும் சிறப்பு.
நூல் வெளியீட்டு விழாவுக்குரிய அழைப்பை என் பெற்றோருக்கு வழங்குவதற்குச் சுண்ணாம்புக்குழியில் இருந்த கொல்லைக்குக் கொண்டுபோய் காட்டினேன். எங்கள் கொல்லையில் கடலை ஆய்ந்துகொண்டிருந்த எங்கள் குடும்பம் முழு உழவர் குடும்பம் என்பதை அன்றும் காட்டியது. அந்த நிலத்திலிருந்து என் நூல்வெளியீட்டு விழாவால் பெற்றோரைப் பிரித்தெடுக்கமுடியவில்லை.
எங்கள் ஊரிலிருந்து அண்ணன் மேகநாதன் அவர்களும் முத்துக்குமரனும் மட்டும் மிதிவண்டியில் வந்து சேர்ந்தனர். என் தந்தையாரும் வந்திருந்தார்.
கதிர் ஐயா சிறப்பாகப் பேசினார். என் ஆசிரியர்களும் வந்து வாழ்த்திப் பேசினர். திருமடத்தின் தலைவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஐந்நூற்று ஒரு உருவா பரிசளித்துப் பாராட்டினார்கள். அன்றைய நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன. ஒலிப்பதிவிலும் பாதுகாத்தோம். 19 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து பாதுகாக்கும் வழக்கம் எனக்கு உண்டானதை இந்த ஆவணங்கள் இன்றும் காட்டும். அனைவரும் வாழ்த்திப் பேசினர்.
நிறைவில் நான் பேசும் நன்றியுரைப்பகுதி அழுகுரலில் பதிவாகியுள்ளது. ஆம். மகிழ்ச்சிக்கடலில் நீந்தியதாக இருக்கலாம். அந்த நூல் வெளியிட அன்றைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராகப் பணிபுரிந்த இரத்தின. சாமிநாதன் அவர்கள் பேருதவி புரிந்தார். கூடுதல் படிகளை வாங்கி ஊக்குவித்தார். தமிழறிஞர்கள் வட்டத்துக்கு என் நூல் அறிமுகம் ஆனது. திருப்பனந்தாள் கல்லூரிக்கு மாணவனாக நுழைந்தேன். கல்லூரி என்னை நூலாசிரியனாக வழியனுப்பியது...
6 கருத்துகள்:
//விடுப்பு மடல்கூடப் பாட்டில் வடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்//
சுவாரசியமாக இருக்கும் போல. நினைவில் இருக்குமானால் இடுகையாக்குங்களேன்.
'ஓய்ச்சல் இன்றி உழைப்பு இருந்ததால்
காய்ச்சல் வந்து கவ்விக் கொண்டது'
என்றெல்லாம் எழுதியதாக நினைவு
மு.இளங்கோவன்
எதுகை மோனையில் விளையாடி இருக்கீங்க..
மாணவர் பெருமை உணரா ஆசிரியர்
ஆசிரியர் அருமை புரியா மாணவர்
அவையுந் தாண்டிய நீர்க் குமுழி
அமுதாய்ப் பொழியும் தமிழ் ஊற்றாய்
அன்பில் வளர்ந்தீர் தமிழ்ப் பாலில்
அறிவில் சிறந்தீர் தமிழ்ப் பாவில்
நன்றே செய்திடும் பணிகளினால்
நாடும் போற்றும் உம் பணியை!
வாழிய இளங்கோ பெயர் கொண்டோய்!
அண்ணா வணக்கம், தங்களின் மாணவராற்றுப்படை உருவான வரலாற்றை படித்தேன். நெகிழ்ச்சியாக இருக்கிறது.
அண்ணா வணக்கம், தங்களின் மாணவராற்றுப்படை உருவான வரலாற்றை படித்தேன். "குமார் என்னும் ஆண் தாயை உயிர் உள்ளவரை மறவோம்" என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
கருத்துரையிடுக