புலவர் மு. சன்னாசி
[புலவர் மு.சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் பிறந்தவர். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தமிழாசிரியராக முப்பத்தேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திருவாசகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களுக்கு உரை வரைந்தவர். சமய இலக்கியங்களிலும் இலக்கணத்திலும் பெரும் புலமைகொண்டவர்]
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி எண்ணற்ற தமிழறிஞர்களை உருவாக்கிய கல்விச் சாலையாகும். இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களும், பயின்றவர்களும் தமிழுக்கு ஆற்றிய பணிகள் தனித்து ஆராயத்தக்கவையாகும். கே.எம். வேங்கடராமையா, தமிழ்நூற்கடல் தி.வை.கோபாலையர் முனைவர் கு. சுந்தரமூர்த்தி, தா.ம.வெள்ளைவாரணம், மு.சுந்தரேசம் பிள்ளை, ம.வே.பசுபதி, ச. திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பேராசிரியர்களும் இவர்களிடம் பயின்ற பலநூறு மாணவர்களும் பல்வேறு நிலைகளில் தமிழ்த்தொண்டாற்றியுள்ளனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவரும் திருவாசகம் நூலுக்கும், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூலுக்கும் உரை வரைந்தவருமான புலவர் மு.சன்னாசி அவர்களின் தொடர்பு அண்மையில் எனக்குக் கிடைத்தமை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பேறு எனலாம்.
அண்மையில் தினமணி நாளேட்டின் இணைப்பு வெளியீடான தினமணிக் கதிரில் என் பணிகளை அறிமுகம் செய்து, எழுத்தாளர் அருள்செல்வன் அவர்கள் அரியதொரு கட்டுரை வரைந்திருந்தார்(11.05.2025). அக்கட்டுரை தமிழகத்தில் உள்ள அறிஞர்கள் பலரின் பார்வைக்குச் சென்றது. அதனைக் கண்ணுற்ற பெருமக்கள் என் தொடர்பு எண்ணைப் பெற்று என் முயற்சியைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை வித்துவான் வகுப்பில் பயின்றவரும் மதுரையை அடுத்துள்ள சமயநல்லூரில் வாழ்ந்துவருபவருமான புலவர் பெருந்தகை மு. சன்னாசி ஐயா என்னுடன் தொடர்புகொண்டு, உரையாடி, தம் கல்வி பயின்ற காலத்துப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். தம் படிப்புக் காலத்து நினைவுகளையும், தம் தமிழ்ப்பணிகளையும், தமிழ் இலக்கியங்களில் தமக்கிருக்கும் புலமையையும் என்னுடன் உரையாடியபொழுது உணர்த்தினார்கள். திருவாசகத்திலும் சமய நூல்களிலும் மிகப்பெரும் புலமை பெற்ற அப்பெருமகனார் போலும் தமிழ்ச்சுரங்கங்கள் பலர் நம் பார்வைக்கு வராமல் உள்ளனர். புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ்ப் பணிகளையும் தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்கின்றேன்.
புலவர் மு. சன்னாசி அவர்களின் தமிழ் வாழ்க்கை:
மு. சன்னாசி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் 15.12.1950 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் முத்திருளன் - பேச்சியம்மாள் என்பதாகும். புலவருடன் உடன் பிறந்தவர்கள் ஐந்து ஆண்கள், ஒரு பெண் ஆவர். மு. சன்னாசி அவர்கள் ஆத்தூரில் இருந்த மாவட்டக் கழகத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையும், கழக உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 11 ஆம் வகுப்பு வரையும் பயின்றவர்.
ஆத்தூரில் பள்ளியிறுதி வகுப்பு நிறைவுற்றதும் 1967 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றவர். 1971 முதல் 1972 வரை(ஆறு திங்கள்) குமாரபாளையம் அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பயிற்சி பெற்றவர். அப்பொழுது குமாரபாளையம் கல்லூரியை வழிநடத்திய முதல்வர் பெருந்தகை சந்தானம் என்னும் பேராசிரியர் ஆவார். தமிழ்த்துறையில் சற்குணபாண்டியனாரும் தாணுமாலையபெருமாள் அவர்களும் ஆசிரியர்களாக அருந்தமிழ்ப் பணியாற்றினர்.
மு. சன்னாசி அவர்கள் 1972 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி, சவரியப்ப உடையார் நினைவு மேனிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கியவர். முப்பத்தேழு ஆண்டுகள் பணியனுபவம் கொண்ட புலவர் மு. சன்னாசி அவர்கள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிய பட்டறிவுகொண்டவர். 2009 மே மாதம் பணி நிறைவு பெற்றவர். தம் பணிக்காலத்தின் இடையில் 1978 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக முதுகலைப் பட்டம் பெற்றவர். 1979 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக எம்.எட். பட்டமும் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை 1990 இல் பெற்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு இவர் தேர்ந்த தலைப்பு “திருவாசகத்தில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம்” என்னும் தலைப்பாகும்.
பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் பயிற்றுவிப்பதில் தன்னிகரற்று விளங்கிய புலவர் மு. சன்னாசி அவர்கள் மேடைப்பேச்சிலும் வல்லவர் ஆவார். அறிவாராய்ச்சியாக நடைபெற்ற அக்காலத்துப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு தவத்திரு குன்றக்குடி அடிகளார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, முனைவர் மு. தமிழ்க்குடிமகன், முனைவர் சோ. சத்தியசீலன், பேராசிரியர் இராதாகிருட்டினன் (தேசியக்கல்லூரி) முதலானவர்களின் தலைமையில் உரையாற்றிய பெருமைக்குரியவர். தமிழ்ச்சமயம் சார்ந்து பொழிவாற்றுவதில் நிகரற்றவர். பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் இலக்கணத்தையும், அடிப்படை மொழியியலையும் ஆர்வமுடன் பயிற்றுவித்து வருபவர்.
மதுரையில் அமைந்துள்ள நான்காம் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெறும் செந்தமிழ்க் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் இவருக்குத் "தமிழ்த்தென்றல்" என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர். திரு மகேந்திரபாபு அவர்களின் துணையுடன் பைந்தமிழ்த் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்த உரைகளைப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார். அவ்வகையில் சிலப்பதிகாரம் முப்பது காதைகளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. உ. வே. சா. வின் என் சரித்திரம் 65 பிரிவுகளில் பிரித்துப் பாடமாக வலையொளியில் தரப்பட்டுள்ளது.
இல்லற வாழ்க்கை
மு. சன்னாசி அவர்கள் 23.05.1977 இல் தம் இல்லறவாழ்வின் துணைவியாகத் திருவாட்டி மங்கையர்க்கரசி அவர்களை ஏற்று, மூன்று மக்கள் செல்வங்களைப் பெற்றவர். அவர்கள்: 1. ச.அருள்முருகன், 2. ச.சிவபாரதி 3. ச. மாணிக்கவாசகம் ஆவர்.
மு.சன்னாசி அவர்களின் தமிழ்க்கொடை:
1. பொற்றாமரையும் திருவாசகமும் – 2021
2. திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனைகள் - 2019
3. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் – உரையாசிரியர்
- 2021
4. அருள்மிகு திருக்காளத்தீசுவரர் ஞானாம்பிகை
திருக்கோவில் – திருத்தல வரலாறு – 2005
5. திருக்கழுகுமலைச் சிவபெருமான் இரட்டை மணிமாலை
உரை – 2023
6. கழுகுமலைப் பதிகம் உரை – 2023
7. 2022 முதல் 2025 வரை தொடர்ந்து மீனாட்சியம்மை – சொக்கநாதர் திருமணத்தை முன்னிட்டு, திருமுறைப் பாடல் தொகுப்பு நூல் புலவர் மு.சன்னாசி உரையுடன் திருக்கோவில் சார்பில் வெளிவருகின்றது.
புலவர் மு. சன்னாசி அவர்கள் தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்கும், மொழிவளர்சிக்கும் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்பதும் தமிழ் இலக்கியங்களை
மக்கள் மனங்களில் பதிவுசெய்தல் வேண்டும் என்பதும் நம் எதிர்பார்ப்பாகும். புலவர் பெருந்தகை மு.சன்னாசி ஐயா நீடு வாழி என வாழ்த்துகின்றேன்.