நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 31 ஜனவரி, 2025

மும்பையில் கிடைத்த நெல்லை இரா. சண்முகம்(கோலாலம்பூர்) ஆவணங்கள்…

  

படத்தில்: தமிழப்பன், தமிழம்மாள், நெல்லை இரா.சண்முகம், அழகம்மாள், 
இலட்சுமி அம்மாள்

[நெல்லை இரா. சண்முகம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலத்தில் பிறந்து கோலாலம்பூரில் வாழ்ந்தவர். தமிழறிஞர். பன்னூலாசிரியர். இரண்டாம் உலகப் போரின் பொழுது, நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்துக்காக வானொலி வழியாக எழுச்சியுரையாற்றி இளைஞர்களை இராணுவத்தில் சேர்வதற்கு ஊக்கப்படுத்தியவர். தந்தை பெரியார், தமிழவேள் கோ. சாரங்கபாணி, வினோபா பாவே (Vinoba Bhave) உள்ளிட்ட தலைவர்களுடன் பழகியவர். தொல்காப்பியச் சிறப்புரைக்கும் நூலெழுதிய பெருமைக்குரியவர். இவர்தம் வரலாற்றை அறிவதற்கு மும்பை சென்று ஆவணங்களைத் திரட்டிய முயற்சி இப்பதிவில் இடம்பெற்றுள்ளது]

மும்பையில் வாழ்ந்துவரும் பொறியாளர் சு. குமணராசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தொல்காப்பியத் திருவிழாவில்(25,26-01.2025) கலந்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே வானூர்திச் சீட்டினைப் பதிந்திருந்தேன். அந்த நேரத்தில்தான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த நெல்லை இரா. சண்முகம் (கோலாலம்பூர்) அவர்களைப் பற்றிய விவரங்கள் ஒவ்வொன்றாகத் தெரியவந்தன

என் நண்பர் சித்தநாதபூபதி அவர்கள் வழியாக இரா. சண்முகம் அவர்கள் பிறந்து, வாழ்ந்த திருச்செந்தூருக்கு அருகில் உள்ள அங்கமங்கலம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. அந்த ஊர்தான் தொல்காப்பியத் தொண்டர் இரா. சண்முகனாரின் சொந்த  ஊராகும்.  திருச்செந்தூரில் வட்டாட்சியர் பணியில் உள்ள இரா. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பேருதவியால் அங்கமங்கலம் சென்றதும், சண்முகனாரின் குடிவழியினரைச் சந்திப்பதும் எளிதாக இருந்தது. இரா. சண்முகனாரின் இரண்டாம் மகளார் அழகம்மாள் மற்றும் உறவினர்கள் பொங்கல் திருவிழாவுக்காகப் பிறந்த ஊர் வந்திருந்தனர். அவர்களுடன் உரையாடிய பொழுது, இரா. சண்முகனாரின் தங்கைவழிப் பெயரன் மும்பையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் பெயர். . இளங்கோவன் என்பதும் தெரியவந்தது. அவரின் தொடர்புஎண்ணைப் பெற்றுக்கொண்டு ஊர் திரும்பினேன்

இரா. சண்முகனாரின் தமிழ்ப்பணிகளால் ஈர்ப்புண்டு கிடந்த நான் அவர்தம் வாழ்க்கையைக் குறித்து, தெரிந்த – அறிந்த  விவரங்களைக் கொண்டு ஒரு நினைவோட்ட உரையை வரைந்து என் வலைப்பதிவில் முன்பொருநாள் பதிந்தேன். வெளியிட்ட ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு, என் முயற்சியைப் பாராட்டியவண்ணம் இருந்தனர். அவ்வாறு திருவாளர் நீலகண்டன் ஐயா வரைந்தனுப்பிய பாராட்டுக் குறிப்பு இது

அடர்ந்த ஆளரவமற்ற வனத்தில் கிடைத்தற்கரிய ஒரு மூலிகைச் செடியினைத் தேடித் தேடி அயராது அலைகிற அர்ப்பணிப்பினை உங்களில் (கண்டு)வியக்கிறேன். தமிழ்த் தாய்க்கு(ப்) பெரும் பேறு” (19.01.2025). 

தொலைபேசியிலும், புலனத்திலும் நண்பர்கள் பாராட்டிய வகையில் கிடைத்த ஊக்கமொழிகளால் இரா. சண்முகனார் குறித்துத் தேடும் ஆர்வம் மேலும் பன்மடங்கு உயர்ந்தது. அந்த நிலையில்தான் வலைப்பதிவில் நான் எழுதியதைப் படித்து, மும்பையிலிருந்து இளங்கோவன் அவர்கள் தொலைபேசியில் அழைத்து, உரையாடி, இரா. சண்முகனார் குறித்து நான் தேடியலைந்து விவரம் திரட்டியமைக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன், தம்மிடம் மேலும் சில படங்களும், விவரங்களும் உள்ளன என்று குறிப்பிட்டதுடன் ஓரிரு படங்களை எனக்கு அனுப்பியும் வைத்தார்

அவருடன் அமைந்த உரையாட்டின்பொழுது, நான் மும்பைக்குத் தொல்காப்பியத் திருவிழாவுக்கு வர உள்ளமையைத் தெரிவித்தேன். அதுபொழுது அவரைச் சந்திக்க விரும்புகின்றமையையும் எடுத்துரைத்தேன். மும்பை . இளங்கோவனார் என்னைக் கண்டு உரையாட ஆர்வமாக இருப்பதைத் தெரிவித்ததுடன், வாய்ப்பு அமைந்தால் வானூர்தி நிலையத்தில் வரவேற்க ஆர்வமாக இருப்பதையும் தெரிவித்தார். அவருக்குத் தொல்லை தர விரும்பாமையால் நான் நேரடியாக விழாக்குழுவினரின் ஏற்பாட்டில்மும்பை  வானூர்தி நிலையத்திலிருந்து, நிகழ்வு நடைபெற உள்ள இடத்துக்கு அருகில் உள்ள விடுதிக்குச் சென்றேன்

மும்பை சென்ற என்னைக் காரை. இரவீந்திரன் அவர்கள் அன்புடன் வரவேற்று விடுதிக்கு அழைத்துச் சென்றார்கள். காரைக்குடியைச் சேர்ந்த காரை. இரவீந்திரன் நீண்ட காலமாக மும்பையில் தங்கியுள்ள தமிழ் ஆர்வலர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். மிகச் சிறந்த பண்பாளர் என்பதை உரையாடலின்வழித் தெரிந்துகொண்டேன். இருவரும் செட்டிநாட்டு விருந்தோம்பல் சிறப்பைப் பற்றி உரையாடியவண்ணம் மும்பையில்வாசி” என்னும் நகரப் பகுதிக்குச் சென்றோம். அங்குதான் தமிழ்த்தொண்டர் சு. குமணராசனாரின் அலுவலகம் உள்ளது

நாங்கள்வாசி”ப் பகுதியை அடைவதற்கும் குமணராசனார் தம் அலுவலகம் வருவதற்கும் சரியாக இருந்தது. நிகழ்ச்சிக்கு முதல்நாளும் நிகழ்ச்சி நாளன்றும் அனைவரும் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டோம். முதலில் நிகழ்ச்சி நடைபெற உள்ள தமிழ்ச்சங்கம் சென்று, அரங்கத்தைப் பார்வையிட்டோம். அடுத்ததாக என் கைச்சுமையை விடுதியில் வைத்துவிட்டு, தொல்காப்பிய ஆவணங்களைக் காட்சிக்கு வைப்பதற்கு உரிய வகையில் சு. குமணராசன் அவர்களிடம் ஒப்படைத்தேன். நெல்லை இரா. சண்முகனாரின் வாழ்க்கைக் குறிப்பைத் தேடி, . இளங்கோவன் ஐயாவைச் சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைச் சு. குமணராசன் அவர்களிடம்  தெரிவித்தேன். ஐயாவிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டு, . இளங்கோவன் அவர்களுக்கு  என்னை வந்து, அழைத்துக்கொண்டு, அவர் இல்லம் செல்லுமாறு வேண்டிக்கொண்டேன்

திருவாளர் . இளங்கோவனார் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரத்தில் விடுதிக்கு வந்து தம் மகிழுந்தில் என்னை அழைத்துக்கொண்டு அவர் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.  மும்பையில் பரந்து விரிந்திருக்கும் சாலையோரங்களில் மிகப்பெரிய அடுக்குமாடி வீடுகளும், வளமனைகளுமாகக் கண்ணில் தென்பட்டன. சாலையெங்கும் இந்தி எழுத்துகளே மின்னி மிளிர்ந்தன. போக்குவரவு நெருக்கடி மிகுதியாக இருந்தது. மக்கள் அனைவரும் சாலை நெறிமுறைகளைப் பின்பற்றியமை மகிழ்ச்சியளித்தது. மகிழுந்துகளும், இரு சக்கர வண்டிகளும் சாலையோரத்தில் முறையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  

நாங்கள் . இளங்கோவன் அவர்களின் இல்லத்துக்குச் செல்வதற்குச் சற்றொப்ப நான்கு மணி நேரம் ஆனது. இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தொலைவுதான் என்றாலும் நடுவண் அமைச்சர் ஒருவரின் வருகையால் சாலைகளில் போக்குவரவு மாற்றப்பட்டிருந்தது. மாலைநேரத்தில் அலுவலகம் முடிந்து அனைவரும் வீடு திரும்புவதும் இணைந்துவிட்டதால் போக்குவரவின் கடும் நெருக்கடியில் சிக்கிச், சென்றுகொண்டிருந்தோம்

நான்கு மணிநேரப் பயணத்தையும் பயனுடையதாக அமைத்துக்கொள்ளும் வகையில் . இளங்கோவன் அவர்களுடன் மகிழுந்தில்  அமர்ந்தபடி உரையாடி, நெல்லை இரா. சண்முகம் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை ஓரளவு அறிந்துகொண்டேன்

இரா. சண்முகம் அவர்களை அவர்களின் தாய்மாமன் மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது சற்றொப்ப இருபத்தைந்து வயதுடையவராக இரா. சண்முகம் இருந்திருக்கலாம். அதன் பிறகு இரா. சண்முகம் தம் உறவினர்களை ஒவ்வொருவராக மலேசியாவுக்கு அழைத்துச்சென்று, கடைகளில் பணிபுரிய வாய்ப்பமைத்தார்

இரா. சண்முகம் அவர்களுக்கு வேலு என்ற தம்பியும் பிரமு அம்மாள் என்ற தங்கையும் இருந்தனர். இரா. சண்முகம் அவர்களுக்கு ஒரே மகன் தமிழப்பனும், மகள்களாகத் தமிழம்மாளும், அழகம்மாளும் பிள்ளைச் செல்வங்களாய் வாய்த்தனர். அதுபோல் வேலு அவர்களுக்குத் தமிழ்ச்செல்வம், முருகேசன், சுதந்திரம், தமிழரசன், பூங்கொடி என்று ஐந்து பிள்ளைச் செல்வங்கள் வாய்த்துள்ளனர். பிரமு அம்மாவுக்கு வைணவப்பெருமாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர். முதல் பிள்ளை பெண்பிள்ளை ஆகும். அடுத்துக் கல்யாணசுந்தரம், அருணாசலம், செல்வராஜ் ஆகியோர் பிறந்தனர். 

1935 அளவில் தம் தங்கை மகன் கல்யாணசுந்தரத்தை இரா. சண்முகம் அழைத்துச் சென்று மலேசியாவில் பணியில் அமர்த்தினார். இவர்களின் கடை கோலாலம்பூர் நகரில் சிறப்பாக இயங்கியுள்ளது. நல்ல வருவாயும் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. அந்த நாளில்தான் இரண்டாம் உலகப் போர் மூண்டது(1941 அளவில்). சப்பானியப் படைகள் மலேசியாவைக் கைப்பற்றின. மலேசியாவும் சிங்கப்பூரும் அப்பொழுது ஒரே நாடாக இருந்தன. சப்பானியர்கள் நம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்துக்கு ஆதரவாக இருந்தனர். சிங்கையிலும் மலேசியாவிலும் இருந்த தமிழர்கள்இந்தியர்கள் பெருமளவு நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து, அந்நாளில் போர்ப் பயிற்சி பெற்றனர்

இரா. சண்முகம், நடுவில் உறவினர், வலப்பக்கம் கல்யாணசுந்தரம்

இந்திய தேசிய இராணுவத்தில் (INA) இளைஞர்கள் இணைந்து இந்திய விடுதலைப்போருக்குப் பணிபுரிவதற்கு வானொலி வழியாக உரையாற்றி, இளைஞர்களை ஈர்த்தவர் நம் இரா. சண்முகம் என்ற செய்தியை இளங்கோவன் பகிர்ந்துகொண்டார். 1942 முதல் 1945 வரை இந்தப் பணியை இரா. சண்முகம் மேற்கொண்டிருக்கு வாய்ப்பு உண்டு. மேலும் க. இளங்கோவனின் தந்தையார் வை. கல்யாணசுந்தரம் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சிபெற்ற வீரர் என்ற செய்தியையும் பகிர்ந்துகொண்டார். இவர்களின் படங்கள் தம் இல்லத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியதால் என் மும்பைப் பயணம் பயனுடையதாக அமைந்துள்ளது  என்று நினைத்து ஊக்கம்பெற்றேன். 

. இளங்கோவன் அவர்கள் தம் தந்தையார் கல்யாணசுந்தரம் மலேசியாவில் பணிபுரிந்த சூழலையும், தம் குடும்பத்தை வளர்த்தெடுக்க கல்யாணசுந்தரம் எடுத்த முயற்சிகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தம் தந்தையார் கல்யாணசுந்தரம் - தாயம்மாள் இணையரின் திருமணம் அங்கமங்கலத்தில் நடைபெற்றதையும்  நாங்கள் ஐந்து  பிள்ளைகள் (1.கோபால் 2. பூங்கோதை, 3. இளங்கோவன், 4. தமிழ்ச்செல்வி, 5. மதியழகன்) என்பதையும் என்னிடம் தெரிவித்தார். அனைவரும் அங்கமங்கலத்தில் பிறந்து கல்வி கற்றோம் என்று க.இளங்கோவன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். மலேசியாவிலிருந்து கல்யாணசுந்தரம் அவர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அங்கமங்கலம் வந்தமையையும், ஓராண்டு வரை ஊரில் தங்கியிருந்துவிட்டு, மீண்டும் மலேசியா செல்வதையும் வழக்கமாகக் கொண்டவர். இறுதியாக 1999 ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து திரும்பிய கல்யாணசுந்தரம் பின்னாளில் இயற்கை எய்தினார் என்ற விவரத்தையும் அவர் வழியாகத்  தெரிந்துகொண்டேன். மேலும் தாம் மும்பையில் கப்பல் பொறியியல் துறைசார்ந்த பணியில் முப்பதாண்டுகள் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றிய திறனையும் பகிர்ந்துகொண்டார். முன்பு தாம் மும்பையின்வாசி” என்ற பகுதியில் குடியிருந்ததையும் பின்னர் இப்பொழுது மேற்குப் போரிவலி (Borivali West) என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார்

நெல்லை இரா. சண்முகம், தந்தை பெரியார்(மலேசியா)



தந்தை பெரியாருடன் இரா. சண்முகம் உள்ளிட்ட தமிழன்பர்கள்(மலேசியா)

இரா. சண்முகனார் மலேசியாவில் வாழ்ந்தபொழுது, தந்தை பெரியார் மலேசியாவுக்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்துள்ளார். தந்தை பெரியார் அவர்களை  வரவேற்ற மலேசிய அன்பர்களில் நம் இரா. சண்முகனாரும் முதன்மையானவராக இருந்துள்ளார். தந்தை பெரியாருடன் இரா. சண்முகனார் அமர்ந்து எடுத்துக்கொண்டுள்ள படம் இதற்குச் சான்று என்று குறிப்பிட்டார். மேலும் அன்னை மணியம்மையார், தந்தை பெரியார், மலேசியத் தமிழன்பர்கள் அனைவரும் இயல்பாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது எடுக்கப்பட்ட படம் ஒன்று எங்கோ இடம் மாறி உள்ளது என்ற விவரத்தையும் சொன்னார்

பூமிதான இயக்கத் தலைவர் வினோபா பாவே (Vinoba Bhave) அவர்கள் தமிழகம் வந்தபொழுது திருச்செந்தூருக்கு அருகில் உள்ள குரும்பூரை அடுத்த அங்கமங்கலத்திற்கு வந்ததாகவும், தம் தாத்தா இரா. சண்முகனாரை இல்லம் தேடிவந்து வினோபாவா பார்த்து, இருவரும் உரையாடி மகிழ்ந்தனர் என்ற விவரத்தையும் க.இளங்கோவன் என்னிடம் பகிர்ந்துகொண்டார்

இரா. சண்முகனாரின் பரந்துபட்ட குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் அவர்கள் பணியின் பொருட்டுப் பல ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் அறிந்துகொண்ட நிறைவில் அவர் எழுதிய நூல்கள் ஏதேனும் இருப்பில் உள்ளதா? என்று கேட்டபொழுது, யாரிடமும் நூல்கள் இல்லை என்று குறிப்பிட்டார். நீண்ட உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபொழுது க. இளங்கோவன் ஐயாவின் வீடு கண்ணில் தென்பட்டது…. 

பயணக்களைப்பால் இருவரும் சோர்ந்திருந்தோம். ஏழாம் தளத்தில் இருந்த இல்லம் சென்று, முகம் கழுவி, சோர்வு நீக்கினோம். ஓரிரு ஆரஞ்சுப் பழங்களை உரித்து, நீர்வேட்கையைத் தணித்துக்கொண்டேன். அதற்குள் மிகச் சிறந்த தேநீர்க் குவளையுடன் இளங்கோவன் வந்து அமர்ந்தார். தேநீரைச் சுவைத்து மகிழ்ந்தோம். என் கவனம் முழுவதும் இரா. சண்முகனார், வை. கல்யாணசுந்தரம் ஆகியோரின் படங்களைப் பார்ப்பதில்தான் இருந்தது. தம் மடிக்கணினியை எடுத்து, அதில் இருந்த படங்களை ஒவ்வொன்றாகக் காட்டி, இரா. சண்முகனாரின் வாழ்வியலையும் பணிகளையும் உயிரோட்டமாக எனக்கு விளக்கினார். அந்தப் படங்களை எனக்கு வழங்கியுதவுமாறு கேட்டுக்கொண்டேன். முழு மனத்துடன் வழங்கி என் ஆய்வு முயற்சியையும் தேடலையும் ஊக்கப்படுத்தினார். ஒரு மணி நேரம் தங்கியிருந்தோம். இரவு உணவுக்கு ஒரு விடுதிக்குச் சென்றோம். அரேபிய உணவு ஒன்றை அறிமுகப்படுத்தி, உண்ணச்செய்தார். உண்டு மகிழ்ந்தோம். என் ஆய்வுக்கு வேண்டிய விவரங்களைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் நவி மும்பை நோக்கி இரவு 11 மணியளவில் புறப்பட்டோம். 

நள்ளிரவுப் பொழுதானதால் இப்பொழுது சாலைகள் நெருக்கடி இல்லாமல் ஒரளவு இடைவெளியாக இருந்தன. நாங்கள் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்து, பேசியபடியே நவி மும்பை நோக்கி வந்தோம். நான் தங்கியிருந்த நவி மும்பை விளையாட்டுக் கழகத்துக்கு (Sports Association) உரிமையான விடுதியை அடையும்பொழுது நள்ளிரவு 12.30 மணியாகும். க. இளங்கோவன் அவர்கள் என்னைப் பாதுகாப்பாக விடுதியில் கொண்டு வந்து சேர்த்த மனநிறைவுடன் தம் இல்லத்துக்கு மீண்டும் பயணமானார். நான் மறுநாள் பேசுவதற்கு உரிய குறிப்புகளையும், கவியரங்கில் பாடுவதற்குரிய கவிதைகளையும் எழுதத் தொடங்கினேன்…

மு.இளங்கோவன், க. இளங்கோவன்


ஆவணங்களைப் பார்வையிடும் மு.இளங்கோவன்

கருத்துகள் இல்லை: