நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

முனைவர் செல்வநாயகி சிறிதாசு

 

முனைவர் செல்வநாயகி சிறிதாசு 

[முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்கள் இலங்கையில் பிறந்தவர். இப்பொழுது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். வரி மதிப்பிடுதல் துறையில் பெரும் புலமை பெற்றவர். தமிழ் ஈடுபாட்டின் காரணமாகத் தமிழை முறைப்படி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் வளர்ச்சிக்கும் முனைந்து தொண்டாற்றி வருபவர். கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக உள்ள இவரின் முன்னெடுப்பில் கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. சங்க இலக்கியம், தொல்காப்பியம் குறித்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.] 

2016 ஆம் ஆண்டு, சூன் மாதம் 4, 5 ஆகிய நாள்களில் கனடா நாட்டில் நடைபெற்ற உலகத் தொல்காப்பிய  மன்றத்தின், கனடாக் கிளையின்  தொடக்க விழாவுக்குச்  சென்றிருந்தபொழுது அங்குச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்துத் தமிழ்ப்பணிகளைக் கண்ணுறும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்குத் தொண்டுள்ளத்துடன் தமிழ்ப்பணியாற்றிக்கொண்டிருந்த முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் நடந்த தமிழாராய்ச்சிக் கருத்தரங்குகளில் முனைவர் செல்வநாயகி அவர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடும் வாய்ப்பினைப் பெற்றேன். 

சில திங்களுக்கு முன்பாகக் கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2024, செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற உள்ள அறிவிப்பினைக் கண்டு பெரும் மகிழ்வுற்றேன். தொல்காப்பியத்துக்கு என்று ஓர் உலகு தழுவிய ஆராய்ச்சி மாநாடு, தன்னார்வலர்களால், எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் கனடா நாட்டில் நடத்தப்படுவது அறிந்து அவர்களின் தமிழ் ஈடுபாட்டையும் தொல்காப்பிய ஈடுபாட்டையும் நெஞ்சார வாழ்த்திக்கொண்டிருந்தேன். 

கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பினை ஆர்வமுடன் செய்துவரும் முனைவர் செல்வநாயகி அவர்களின் தமிழ் ஈடுபாட்டினை நான் முன்பே அறிவேன் எனினும் அவர்களின் பணிகளைத் தொடர்ந்து உற்றுநோக்கியபொழுது, அவரின் செயல்திறனும், தமிழ் வளர்ச்சிக்காகத் தம்மை முழுமையாக ஒப்படைத்துப் பணியாற்றும் ஈடுபாடும் கண்டு வியப்புற்றேன். மாநாட்டை ஒருங்கிணைப்பது, கட்டுரைகளைப் பெற்று, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துப் பிழையின்றி அச்சிடுவது, பேராளர்களை நேரடியாகவோ, இணையம் வழியாகவோ உரையாற்றச் செய்வது, நிகழ்ச்சி நிரலினை முறைப்படுத்துவது என்று மாநாட்டுக்காகப் பல்வேறு பணிகள் இருக்கும். இதற்குத் தகுந்த ஒரு பணிக்குழு இருந்தால்தான் மாநாட்டைச் சிறப்பாக நடத்திக்காட்ட இயலும். உலக அளவிலான மாநாட்டினை ஒருங்கிணைக்கும் பெரும் பொறுப்பில் இருந்து, தொல்காப்பியத் தொண்டாற்றும் முனைவர் செல்வநாயகி அம்மாவுக்கு என் வாழ்த்துகளைச் சொல்லி, அவர்களின் தமிழ் வாழ்க்கையை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்கின்றேன். 

முனைவர் செல்வநாயகி அவர்கள் 1942 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் நாள் இலங்கையில், அனுராதபுரத்தில் பிறந்தவர். பெற்றோர் பெயர் செல்லையா வேலுப்பிள்ளை – சௌந்தரம் செல்லையா  ஆகும். தொடக்கக் கல்வியை அனுராதபுரத்தில் பயின்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைத் தமிழ் பயின்றவர். முதுகலையும் முனைவர் பட்டமும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஓர் ஆண்டுக்கு ஐக்கிய நாடுகளின் புலமைப் பரிசிலைப்பெற்று, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகளாவிய வரி மதிப்பீடு (International Taxation) குறித்த படிப்பினைப் படித்தவர் (1986-1987). 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக 1966 - 1968 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர். 1968 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மூத்த வரி மதிப்பாளராகப் பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு முதல் கனடாவில் உள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப், பல மாணவர்கள் தமிழ் படிப்பதற்கு உதவியவர்.  மேலும் 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிருவாகப் பணிப்பாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் பணியாற்றியவர். 



கனடாவுக்குக் குடிபெயர்ந்த நாள் முதல் செல்வநாயகி அவர்கள் பல்வேறு தமிழ் அமைப்புகளில் இணைந்து, தமிழ்த்தொண்டும், சமூகப் பணியும் ஆற்றி வருகின்றார். தொல்காப்பிய விரிவுரை, சங்க இலக்கிய விரிவுரைகள் ஆற்றித் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிவருகின்றார். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கனடாவில் இயங்கி வருகின்றது. அதன் தலைவராக இருந்து, செயற்கரும் பணிகளை ஆர்வமுடன் செய்துவருகின்றார். வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பெண் சாதனையாளர் விருதினைப் பெற்றவர்(2022). கனடாவில் உள்ள “விழித்தெழு பெண்ணே” அமைப்பின்  உயர் சாதனையாளர் விருதினை 2022 இல் பெற்று விருதுக்குப் பெருமை சேர்த்துள்ளார். கனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு இதழில் தொன்மையைத் தேடி என்னும் கட்டுரைத் தொடரை எழுதி, அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். பேராசிரியர் வித்தியானந்தனின் தமிழர் சால்பு நூல் குறித்த இவரின் அறிமுகவுரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும். கீழடியும் சங்க இலக்கியமும் என்ற இவர்தம் கட்டுரையும் அரிய செய்திக் குறிப்புகளை நல்குவன. இலக்கியம், இலக்கணம், தொல்லியல் குறித்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வரைந்து தமிழ்த்தொண்டாற்றி வருபவர். 

திட்டமிடலும், செயல்திறனும் கொண்டு, தமிழ் உணர்வுடன் தொய்வின்றித் தொண்டாற்றிவரும் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் தமிழ்த்தொண்டினை அரசும், தமிழமைப்புகளும் போற்றிக் கொண்டாடும் நாள்தான் தமிழுக்கு வளமூட்டும் நாளாக அமையும்.

 

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

இருவர் முயன்று வெளியிட்டிருக்கும் இணைய ஆற்றுப்படை - பேராசிரியர் த. பழமலை

 



அடுத்தது காட்டும் பளிங்கு. கடுத்தது காட்டும் முகம். அடுத்ததையும் கடுத்ததையும் அறிந்துகொள்ள உதவும் கருவியைப் பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார்

செய்தித்தொடர்பு என்பதுதான் அறிவு. மாந்தர் இதற்காகவே ஒலிவடிவிலான சொற்களையும், வரிவடிவிலான எழுத்துகளையும் கண்டுபிடித் திருக்கிறார்கள். 

தமிழர்கள், சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே செய்திப் பரிமாற்றத்திற்காக ஓவியங்களையும் எழுத்துகளையும் பயன்படுத்தியவர்கள். 

செய்தித்தொடர்பு என்பதுதான் முன்னேற்றம். கருத்துப் பரிமாற்றமே நாகரிக வளர்ச்சி. 

தமிழ்மொழியில் பழங்காலப் பாடல்களான பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை வகையிலானவை. ஆறு .- வழி; ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல். அதாவது ஒன்றைப் பற்றி ஒருவருக்குத் தெரியப்படுத்தல். 

தூது என்பதும் செய்திப் பரிமாற்றமே. அதியமானுக்காக ஔவையார் தகடூரிலிருந்து காஞ்சிக்குத் தூது போயிருக்கிறார். கால்வலிக்க நடந்திருப்பார்!. 

ஆள் உதவி இல்லாதவர்கள் என்ன செய்யலாம்? சத்திமுற்றப்புலவர் செங்கால் நாரையிடம் செய்தி சொல்லி அனுப்புகிறார். 

இன்னும் தனிப்பட்ட செய்திகளைப் பரிமாறிக்கொள்ளப் பாங்கன், பாங்கி – என அல்லாமல், பறவை, விலங்கு எனத் தேடியிருக்கிறார்கள். 

தமிழில் “தமிழ்விடு தூது” குறிப்பிடத்தக்கது. வடமொழியில் “சந்தேசம்” என்னும் தூது இலக்கியத்தில் காளிதாசரின் “மேக சந்தேசம்” பெயர் பெற்றது. 

தமிழர்கள் விருந்து - என்று சொல்லிப் புதுமையை வரவேற்பவர்கள். “புதியன கண்டபோது விடுவரோ புதுமை பார்ப்பார்” என்றார் மகாகவி கம்பர். 

தூது, அஞ்சல், தொலைபேசி என இருந்த காலம் போய்க் கணினி, அலைபேசி என வந்துவிட்டன. இன்று இவற்றை வரவேற்பதும் அறிமுகப்படுத்திக்கொள்வதும் நவீன வாழ்க்கைக்கு இன்றியமையாதன ஆகிவிட்டன. 

இந்தத் துறையின் தேவை குறித்தும், இத்துறையின் வளர்ச்சி குறித்தும், இத்துறையில் நேற்றும் இன்றும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள் குறித்தும் ஒரு சமூக அக்கறையுடன் இயற்றப்பட்டிருக்கும் அரிய நூல்தான் இணைய ஆற்றுப்படை. இதனை யாத்தளித்திருப்பவர் புதுவைப் பேராசிரியர், உலகத் தொல்காப்பிய மன்றம் கண்டவர் முனைவர் மு.இளங்கோவன் ஆவார். 

இளங்கோவனார் பழமைக்குப் பழமையானவர். புதுமைக்குப் புதுமையானவர். 

நாசா விண்வெளி அறிவியலறிஞர் முனைவர் நாக. கணேசன் அவர்கள் உ.வே.சாவின் மாணவரான பேராசிரியர் கு.அருணாசலக் கவுண்டரின் உறவினர். பொள்ளாச்சி. 

இந்தக் கல்விப் பின்புலம் உள்ள இவர்கள் இந்த நூலை வெளியிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகின் நன்றி பாராட்டலுக்கு உரியவர்கள் ஆகியிருக்கிறார்கள். நன்றி அறிவோம். 

ஆற்றுப்படை நூல்களுள் அதிகமான அடிகளை உடையது கூத்தராற்றுப்படை. 583 அடிகள் கொண்டது. இந்த இணைய ஆற்றுப்படை 563 அடிகள். 

பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கூகுள் நிறுவனத்தில் வெற்றிக்கொடி நாட்டிய மதுரை சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களையும் ஈழத்தமிழர்களையும் கவனப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் செயமோகன், சுசாதா ஆகியோரையும் மறக்கவில்லை. சுரதா.காம்(ஊடகத் தொகுதி) குறித்த குறிப்பு உள்ளது.

மெய்தான். முனைவர்கள் மு.ஆனந்தகிருட்டினன், வா.செ. குழந்தைசாமி, அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோரின் அன்புத் தழுவலுக்கும் அரிய வாழ்த்துகளுக்கும் உரியவர் இந்நூலை இயற்றிய மு.இளங்கோவன் மட்டுமல்லர். இந்நூலை வற்புறுத்தி எழுதவைத்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ள முனைவர் நாக. கணேசனும் ஆவார்.

 

விழுப்புரம்,

07.08.2024


திங்கள், 19 ஆகஸ்ட், 2024

“தற்கால பிரெஞ்சு மொழி அகராதி” ஆசிரியர் எச். நாகராஜன்

எச். நாகராஜன் 

[எச். நாகராஜன் புதுச்சேரியில் பிறந்தவர். இப்பொழுது பிரான்சு நாட்டில் வாழ்ந்து வருகின்றார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி அறிந்தவர். இவர் உருவாக்கிய தற்கால பிரெஞ்சு மொழி அகராதி பிரஞ்சுமொழியைக் கற்க விரும்பும் தமிழ் மக்களுக்குப் பெருந்துணைபுரிகின்றது. பிரான்சு நாட்டில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு இவரின் அகராதியைப் பயன்படுத்துகின்றனர். பிரான்சு நாட்டின் நீதித்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக இருந்து, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நீதி மன்ற ஆவணங்களை மொழிபெயர்த்துள்ளார்.] 

புதுச்சேரியிலிருந்து பிரான்சு நாட்டுக்குச் சென்ற தமிழர்கள் பலர் தங்களால் இயன்ற வகையில் எல்லால் தமிழ் மொழிக்குத் தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர். படைப்புகள், மொழிபெயர்ப்புகள், அகராதிகள், இலக்கிய அமைப்புகள், இலக்கிய நிகழ்வுகள் என்று இவர்களின் பணிகள் பல தரத்தனவாக விரியும்.  அவ்வகையில் அண்மையில் பிரெஞ்சு பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயக்கருடன் உரையாடிக் கொண்டிருக்கும்பொழுது பிரான்சுநாட்டில் வாழ்ந்துவரும் எச். நாகராஜன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. 

எச். நாகராஜன் தாம் உருவாக்கிய தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூலினை எனக்குக் கையளித்துப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்த நூல் 790 பக்க அளவில் அமைந்து, பிரெஞ்சு மொழியைக் கற்பவர்களுக்குக் கைவிளக்காக இருந்து பேருதவிபுரியும் நூலாகும். பிரான்சு நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்த அகராதியை ஆர்வமுடன் வாங்கிப் பயன்படுத்துவதை அறிஞர் நாகராஜன் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 

எச். நாகராஜனின் இளமைப் பருவமும் கல்வியும் 

அகராதியியல் அறிஞர் நாகராஜன் அவர்கள் புதுச்சேரியில் 21. 08. 1950 இல் பிறந்தவர். பெற்றோர் பெயர் அரிகிருஷ்ணன், ருக்மணி அம்மையார் ஆகும். இவர்களுக்கு நான்காவது பிள்ளையாக நாகராஜன் பிறந்தவர். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கிப் பல்வேறு துன்பங்களுக்கு இடையே தம் பள்ளிக் கல்வியை முடித்தவர். புதுவையின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான "பெத்தி செமினார்" பள்ளியில் பயின்றவர். பின்னர் புதுச்சேரி தாகூர் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். 

தாகூர் கல்லூரியில் பேராசிரியர் வேணுகோபால் நாயரிடம் நான்கு ஆண்டுகள் ஆங்கில இலக்கியம் பயின்று, தம் ஆங்கிலப் புலமையை வளர்த்துக்கொண்டவர். பேராசிரியர் நாயர் அவர்கள் தாகூர் கல்லூரியில் படிக்கும் மாணவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பேராசிரியர் ஆவார். ஆங்கில இலக்கியங்களை மனப்பாடமாக எடுத்துரைக்கும் பேராற்றல் பெற்றவர். மேலும் மாணவர்கள் விரும்பும் வகையில் பயிற்றுவித்தலிலும் தனித்திறன் கொண்டவர். 

நாகராஜன் பள்ளியில் படிக்கும்பொழுதே The Hindu, Illustrated weekly of India, அமுதசுரபி,  கலைமகள், தீபம், ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் முதலான இதழ்களைப் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தவர். எனவே, ஆங்கிலமொழியும் தமிழும் இவருக்குக் கைவரப்பெற்றிருந்தது. Youth Age என்னும் இதழில் இளமைப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதிப் பழகினார். மேலும்   The Pondy Observer என்ற ஆங்கில ஏட்டிலும் எழுதினார். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்று பட்டம் பெற்றவர். புதுச்சேரியில் உள்ள “அல்லியான்ஸ் பிரான்சேஸ்” என்னும் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் படித்து, பிரெஞ்சுமொழி அறிவைக் கைவரப்பெற்றவர். புதுவை அரசு பணியில் சுகாதாரத்துறையில் ஐந்து ஆண்டுகள் இளநிலை எழுத்தராகப் பணியாற்றியவர். உரோமன் ரோலந்து நூலகத்தில் முதுநிலை எழுத்தராக ஆறாண்டுகள் பணியாற்றியவர். புதுச்சேரி அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த திரு. கதிர்வேல் அவர்களின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். 

புதுவை அரசு பணியை விட்டு நீங்கி, 1982 ஆம் ஆண்டு பிரான்சுக்குச் சென்றவர். பிரான்சில் உள்ள ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் பணியில் இணைந்து 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பிரெஞ்சு அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராகப் பலவாண்டுகள் பணியாற்றி, மக்களுக்குப் பேருதவியாக இருந்தவர். பிரான்சு நீதிமன்றத்தில் பத்தாண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிரெஞ்சு, ஆங்கில ஆவணங்களை மொழிபெயர்த்தவர். 

தற்கால பிரெஞ்சு மொழி அகராதியின் சிறப்புகள் 



தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் தன்னிகரற்ற புலமைகொண்டிருக்கும் நாகராஜன் தாம் கற்ற கல்வியின் அறிவு அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் தற்கால பிரெஞ்சுமொழி அகராதியை அரிதின் முயன்று உருவாக்கினார். தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நாகராசனின் ஏழாண்டு உழைப்பில் கிடைத்துள்ளது. இந்த அகராதியில் 25,000 தலைச்சொற்கள் உள்ளன. 15,000 –இற்கும் மேற்பட்ட சொற்றொடர்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான எடுத்துக்காட்டு வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் தலைசிறந்த அகராதிகளை முன்மாதிரியாகக் கொண்டு இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மொழியைக் கற்க விரும்புபவர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகும். அகராதியின் பிற்பகுதியில் வட்டார வழக்குச் சொற்கள், இலக்கியத்தில் கையாளப்படும் பிரெஞ்சு சொற்கள், பிரெஞ்சு பழமொழிகள், பிரெஞ்சு எண்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. குடும்ப உறவுமுறைகள், மாதங்கள், வார நாட்கள், பறவைகள், விலங்குகள், மரங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் பெயர்களையும் தொகுத்துத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. இவை பிரெஞ்சுமொழி கற்பவர்களுக்குப் பெருந்துணையாக இருக்கும். 

தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூல் பிரெஞ்சு சொற்களுக்குத் தமிழில் விளக்கம் அளிப்பதுடன் அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்குரிய வகையில் தமிழ் வழக்கில் உள்ள எளிய சொற்களால் உருவாக்கப்பட்டுள்ளமை பாராட்டினுக்கு உரியது. இவ்வகராதியின் பின்னிணைப்பாக அமைந்துள்ள பகுதிகள் அகராதியைப் பயன்படுத்துவதற்குரிய குறிப்புகளையும், பிரெஞ்சுத் தொடர்களுக்கு உரிய நேரிய ஆங்கிலத் தொடர்களையும் கொண்டு, அகராதி அளிக்கும் பயனைப் பன்மடங்காக்கியுள்ளது. அறிஞர் எச். நாகராஜனார் போன்றவர்களைத் தமிழர்கள் போற்றும் நாள்தான் உண்மையான தமிழ் வளர்ச்சி நாளாக இருக்கும். தற்கால பிரெஞ்சு மொழி அகராதி நூல் எச். நாகராஜனின் பெருமையை என்றும் நினைவுகூறிக்கொண்டேயிருக்கும். 

குறிப்பு: இக்கட்டுரைக் குறிப்புகளை எடுத்தாள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில் இணைய ஆற்றுப்படை

 

 

நூலின் தகவல்கள் :

நூல் : இணைய ஆற்றுப்படை

ஆசிரியர் : மு.இளங்கோவன்

பதிப்பகம் : வயல்வெளிப் பதிப்பகம்

இடைக்கட்டு, உள்கோட்டை (அஞ்சல்), கங்கைகொண்ட சோழபுரம் வழி, அரியலூர் மாவட்டம் – 612901

விலை : ரூ.100 

அறிவுப்பெட்டகத்தின் வரலாறு 

ஆற்றுப்படை இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. ஆற்றுப்படை என்ற சொல்லுக்கு வழிகாட்டுதல் அல்லது வழிப்படுத்துதல் என்று பொருள். ஓர் அரசனையோ அல்லது வள்ளலையோ சந்தித்து தன் வறுமையைப் போக்கிக்கொள்ளும் விதமாக போதுமான செல்வத்தைப் பெற்றுவந்த ஒருவர், திரும்பி வரும் வழியில் சந்திக்க நேரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரிடம் அவருடைய சிறப்புகளையெல்லாம் எடுத்துரைத்து, அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை. பத்துப்பாட்டுத் தொகுப்பில் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் உள்ளன. கால ஓட்டத்தில் மரபுவழிப்பாடல்கள் குறையக்குறைய, இந்த வகைமையிலான பாடல்களை எழுதுவதும் நின்றுவிட்டது

என் கல்லூரிக்காலத்தில் பாவலர் . இலெ. தங்கப்பா எழுதிய இயற்கையாற்றுப்படை என்னும் புத்தகத்தைப் படித்த நினைவிருக்கிறது. இயற்கையில் தோய்ந்திருப்பதையே மானுட வாழ்வில் பேரின்பம் என்று கருதிய அவர், அக்கருத்தை வலியுறுத்தும் வகையில் இயற்கையின் கூறுகளைப் பல கோணங்களில் உணர்த்தி மனிதக்குலத்தை இயற்கையை நோக்கிச் செலுத்தும் விதமாக அந்த நூலை அவர் எழுதியிருந்தார். அமெரிக்கச் சிந்தனையாளரான எமேர்சன் இயற்கை சார்ந்து எழுதிய கட்டுரைகளின் சாரத்தை அந்த ஆற்றுப்படைநூலில் உணரமுடியும். ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு புதுவையைச் சேர்ந்த பேராசிரியரான மு.இளங்கோவன் புதியதொரு வகைமை சார்ந்த ஆற்றுப்படை நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இன்றைய இளைஞர்களுக்கு இணையம் உருவான காலத்திலிருந்து நிகழ்ந்த பலவிதமான மாற்றங்களை ஒன்றையடுத்து ஒன்றாக எடுத்துரைத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் அம்மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப தமிழைத் தகவமைத்து வளர்த்தவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைத்து, அவ்வழியில் எதிர்காலத்துக்கு ஏற்ற சாதனைகளை நிகழ்த்த அனைவருக்கும் ஒரு பொது அழைப்பு விடுத்து இணையத்தை நோக்கி ஆற்றுப்படுத்தும் விதமாக இந்த நூல் அமைந்திருக்கிறது

முதன்முதலாக வங்கித்துறை தொழில்நுட்பத்தில் இணையம் நுழைந்த ஆதிக்கதையை சுருக்கமாக எடுத்துரைக்கும் இளங்கோவன், மெல்ல மெல்ல அது ஒவ்வொரு துறையிலும் நுழைந்து தன்னைத் தவிர்க்கவே முடியாத ஒரு பேராளுமையாக நிறுவிக்கொண்டுவிட்டது. இணையத்தின் உதவி இல்லாமல் அடுத்தகட்ட வாழ்வோ, வரலாறோ இல்லவே இல்லை என்னும் நிலைக்கு இன்று நாம் வந்தடைந்துவிட்டோம். நடைமுறை வாழ்வியல் தேவைகளை எதிர்கொள்ள இணையத்தின் உதவியை ஏற்றுக்கொள்வது என்பது வளர்ச்சியின் ஒரு பக்கமே. பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகள் வழியாகவே காப்பாற்றப்பட்டு வந்த தமிழிலக்கியப்பிரதிகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்புதான் கொஞ்சம் கொஞ்சமாக அச்சு வடிவத்துக்கு மாறின. இன்று அவையனைத்தும் எண்மவடிவத்துக்கு மாறவேண்டிய நெருக்கடி உருவாகிவிட்டது. அடுத்த தலைமுறையின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் அவற்றைப் பாதுகாக்க இணையம் அருந்துணையாக வாய்த்திருக்கிறது

வெள்ளத்தால் போகாது, வெந்தழலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது கள்ளத்தால் எவராலும் களவாட முடியாது கல்வி என்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெங்கும் பொருள் தேடி உழல்வதேனோஎன்னும் விவேகசிந்தாமணி கல்விச்செல்வத்தை மாபெரும் செல்வமாக எடுத்துரைக்கிறது. அத்தகு மாபெரும் செல்வத்தைப் பாதுகாக்கும் நிரந்தரப்பெட்டகமாக இணையம் இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. வங்கிப்பெட்டகம் போல, இணையவழி உருவாகும் நூலகம் இன்று அனைவரும் அணுகுவதற்கு எளிதான அறிவுப்பெட்டகமாக விளங்குகிறது

வங்கித்துறையை அடுத்து அறிவுசார் துறைகள் அனைத்தும் படிப்படியாக இணைய வசதிகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கின. ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளில் இணையம் இல்லாத கல்வி நிலையங்களோ, பல்கலைக்கழகங்களோ இல்லவே இல்லை என்னும் நிலை உருவாகிவிட்டது

கணிப்பொறி என்பது அடிப்படையில் மேலை நாட்டினரின் கண்டுபிடிப்பு. கணிப்பொறியின் விசைப்பலகை முழுக்கமுழுக்க ஆங்கிலமயமானது. ஆங்கில எழுத்துக்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. மாற்ற முடியாத சட்டகத்தை தமிழ் மொழியின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தகவமைத்ததுதான் முதல் தலைமுறை ஆய்வாளர்களின் சாதனை. விசைப்பலகையை மாற்றாமல் ஆங்கில எழுத்துகள் வழியாகவே தமிழ் எழுத்துகளை உருவாக்கிய கலை அவர்கள் நிகழ்த்திய பெரும் சாதனை. ஆய்வாளர்களின் எண்ணிக்கை பெருகப்பெருக, அவர்கள் உருவாக்கிய எழுத்துருக்களும் பெருகின. அது ஒரு சாதனை என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த வளர்ச்சியே ஒரு கட்டத்தில் இடராக மாறியது. ஒவ்வொரு எழுத்துருவும் ஒவ்வொரு குழுவுக்குள் மட்டுமே பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒன்றாக சுருங்கிவிட, பரவலாக்கத்துக்கு அதுவே தடையாக நின்றுவிட்டது. கணிப்பொறியும் அடுத்த கட்ட வடிவத்தை நோக்கி வளரத் தொடங்கியது. அதன் விளைவாக, அனைத்து வகை கணிப்பொறி வடிவங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு, ஒரு பொது வடிவத்தை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த மாற்றம் கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வைத்தது

தரப்படுத்தப்பட்ட வடிவத்துக்கு ஒரே நாளில் அனைவரும் மாறுவது எளிதான செயலல்ல. நீண்ட காலம் கைவிரல்களுக்குப் பழகிய ஒரு வடிவத்தைச் சட்டென உதறிவிட்டு, முற்றிலும் புதுவகையான ஒரு வடிவத்துக்குத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியாது. நேரிடையாக புது வடிவத்தை உடனடியாக கையாளமுடியாத அத்தகையோருக்கு ஏற்ற வகையில் பழைய வடிவத்திலிருந்து புதுவடிவத்துக்குத் தானாகவே உருமாற்றிக் கொடுப்பதற்கு ஒரு தற்காலிக நிவாரணமென ஓர் உருமாற்றியை தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இந்த உருமாற்றியை ஒருபக்கம் பயன்படுத்தியபடியே புதுவடிவத்தைக் கையாளும் திறமையையும் மெல்ல மெல்ல வளர்த்துக்கொண்டனர். ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே உருமாற்றியின் தேவையே இல்லாத வகையில், முதல் தலைமுறையினரும் இரண்டாம் தலைமுறையினரும் இணைந்து தரப்படுத்தப்பட்ட புது வடிவத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டனர். அதற்குத் தோதான வகையில் கணிப்பொறியின் அல்லது மடிக்கணினியின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன

எழுத்தாளர் பாவண்ணன்

ஒவ்வொரு காலகட்டத்திலும் கணினியில் தமிழின் பயன்பாடு தொடரும் வகையில் தன்னலமற்ற ஆர்வலர்கள் உலகெங்கும் பல மூலைகளிலிருந்து உருவானபடி இருந்தனர். அவர்களுடைய உழைப்பு அளப்பரியது. மதிப்புக்குரியது. அது முதல்கட்ட சாதனை. காகிதப்பக்கத்தை எண்மப்பக்கமாக உருமாற்ற முடியும் என்ற கண்டுபிடிப்பையும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி அவற்றை கண்ணால் பார்க்கமுடியாத எண்ம அறைகளில் சேமித்துவைப்பதில் வெற்றி கண்டது இரண்டாம் கட்ட சாதனை. இதன் விளைவாக, மேலைநாட்டினர் ஏற்கனவே தொடங்கி உருவாக்கிப் பாதுகாத்து வரும் சேமிப்புப்பெட்டகங்களின் வரிசையில் இப்போது தமிழும் இணைந்துகொண்டது. கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் இணைய சேமிப்புப்பெட்டகத்தில் கணக்கிலடங்காத புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் நாம் செல்லவேண்டிய தொலைவு அதிகம்

இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடு தொடங்கிய காலகட்டத்திலிருந்து, இன்று இணையப்பெட்டகத்தில் எண்மவடிவ தமிழ்நூல்களைக் கொண்டு சேர்த்துள்ள காலம் வரையிலுமான வரலாற்றுச் செய்திகளை ஆய்வாளர் மு.இளங்கோவன் ஆற்றுப்படை நூலின் வடிவத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஒரு கதையைப் படிக்கும் சுவாரசியத்தோடு அதைப் படித்துவிடலாம். ஒரு சுருக்கக் கையேடாக விளங்குகிற இந்த ஆவணம், இந்த வரலாற்றை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குகிறது. நூலின் பிற்பகுதியில் தமிழ் இணையத்துறைக்குப் பங்காற்றியிருப்பவர்களைப்பற்றிய குறிப்புகளும் தமிழ் வளம் தாங்கிய இணையதளங்களைப் பற்றிய குறிப்புகளும் அடங்கியுள்ளன. முனைவர் மு.இளங்கோவனின் முயற்சி பாராட்டுக்குரியது

நூல் அறிமுகம் எழுதியவர் :

பாவண்ணன் 

நன்றி: புக் டே

நூல் பெறுவதற்கு: 9442029053 / muetamil@gmail.com


 

புதன், 14 ஆகஸ்ட், 2024

ஒளிப்படக் கலைஞர் கோ. இரமேஷ்குமார்…

 

கோ. இரமேஷ்குமார் 

 புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்(IFP) குறிப்பிடத்தக்க ஆய்வு நிறுவனமாக வளர்ந்து வந்துள்ளது. உலக அளவில் ஆய்வு அறிஞர்கள் பலர் இந்த நிறுவனத்திற்கு வருகைபுரிந்து, தங்கள் அறிவாராய்ச்சிக்கு வேண்டிய ஆய்வு வளங்களைப் பெற்றுச் செல்கின்றனர். நூலகம், ஓலைச்சுவடிக் காப்பகம், புகைப்படக் காப்பகம் என்று விரிந்து பரந்திருக்கும் இந்த நிறுவனத்தின் ஆவணத் தொகுப்புகளை இளம் ஆய்வாளர்கள் முதல் மூத்த ஆய்வறிஞர்கள் வரை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். 

 இந்த நிறுவனத்தில் கடந்த 27 ஆண்டுகளாக மூத்த புகைப்படக் கலைஞராக இருந்து, அரிய திட்டப்பணிகள் பலவற்றில் தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றிவரும் கோ. இரமேஷ்குமார் அவர்களின் பணிகளைப் பலவாண்டுகளாக அறிவேன். 

 தமிழகத்தின் கோவில்கள், குகைகள், அரண்மனைகள், மாளிகைகள், வீடுகள், நூலகங்கள் என்று பல இடங்களுக்குச் சென்று, அங்கு இருக்கும் மூலிகை ஓவியங்கள், அரிய புகைப்படங்கள், செப்பேடுகள், குறிப்புச் சுவடிகள், பத்திரங்கள், ஒப்பந்த அறிக்கைகள், கல்வெட்டுகள், கோவில் சிலைகள், சிற்பங்கள், கலைப்பொருட்களைப் படமாக்கிப் பாதுகாக்கும் அரிய பணியைச் செய்து வருபவர். இவர்தம் பட்டறிவுகளைப் பலமுறை நேரில் கேட்டு வியந்துள்ளேன். எம் நிறுவனத்தில் சில பயிலரங்குகளுக்கு அழைத்து, மாணவர்களுக்கு இவர்தம் பணிகளை அறிமுகம் செய்துள்ளேன். சலிப்பின்றி உழைக்கும் இத்தகு ஆவணத் தொகுப்பாளர்கள் நம் நன்றிக்கும் மதிப்புக்கும் உரியவர்கள். 

 கோ. இரமேஷ்குமார் அவர்கள் சென்னையில் 08.03.1970 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் கோதண்டபாணி, விசயலெட்சுமி ஆவர். 1987 இல் மேல்நிலைக் கல்வி முடித்தவர். பின்னர் இயற்பியல் துறையில் தம் இளம் அறிவியல் பட்டப்படிப்பை நிறைவுசெய்தவர். இரயில்வே துறையில் பணியாற்றியவர். புகைப்படத் தொழிலில் தமக்கு இருந்த ஆர்வம் காரணமாக இரயில்வே பணியை விடுத்து, சில புகைப்படக் கலை வல்லுநர்களிடம் பயிற்சி பெற்று 1997 இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனப் பணியில் இணைந்தவர். பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய மூத்த புகைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி, புதுவித அனுபவங்களைப் பெற்றவர். ஐரோப்பிய அறிஞர்களுடனும், இந்திய அறிஞர்களுடனும் இணைந்து, பல்வேறு ஆவணத்தொகுப்புப் பணிகளைச் செய்தவர். 

 இவரை நேர்காணல் செய்து, இவர்தம் வாய்மொழியாகப்  பலவாண்டு உழைப்பு வரலாற்றை அறிந்துகொண்ட நான், உலகத் தமிழர்கள் கேட்டு மகிழ இணையத்தில் பதிகின்றேன். வழக்கம்போல் எம் பணிகளுக்கு ஊக்கம் நல்கும் தமிழுலகம் இந்த முயற்சியையும் போற்றும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

கோ.இரமேஷ்குமார், மு.இளங்கோவன்

நேர்காணலைப் பார்த்து மகிழ்வதற்குரிய இணைப்பு

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இணைய ஆற்றுப்படை அறிமுகம்: பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

 

முனைவர் கு. ஞானசம்பந்தன் 

நான் போற்றி மதிக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுள் முனைவர் கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்கள் முதன்மையானவர். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் தகைசால் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். இவர்தம் நினைவாற்றலையும், நேர மேலாண்மையையும், பேச்சாற்றலையும், தமிழ்ப் புலமையையும், நண்பர்களைப் போற்றும் பெரும் பண்பையும் எண்ணி எண்ணி வியப்பதுண்டு. உலகம் முழுவதும் சென்று தமிழின் சிறப்பைப் பல முனைகளில் எடுத்துரைத்து வருபவர். தம் அயலகச் செலவு, பட்டிமன்றப் பணிகள், திரைத்துறைப் பணிகள், தொலைக்காட்சிப் பணிகள், இணையதளப் பங்களிப்புகளுக்கு இடையிலும் என்னின் இணைய ஆற்றுப்படை என்ற நூலினைப் படித்து, என்னை ஊக்கப்படுத்தும் வகையில் அரியதொரு நூல் அறிமுகவுரையை வழங்கியுள்ளார்கள்.

பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் அவர்களின் தாயுள்ளத்தைப் போற்றி, நன்றி தெரிவிக்கின்றேன்.

பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஐயாவின் வாய்மொழியாக இணைய ஆற்றுப்படை நூலறிமுகத்தை நீங்களும் செவிமடுக்கலாம்.

 இணைப்பு