நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 10 ஜூன், 2022

திருவாடானை அரசு கல்லூரியின் முத்தமிழ் மன்ற விழா!

மு. இளங்கோவன் உரை

கல்லூரி முதல்வர் முனைவர் அ.மாதவி அவர்கள் நூல் பரிசளித்தல்.  அருகில் பேராசிரியர்கள் மு. பழனியப்பன், முனைவர் ப. மணிமேகலை.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அரசு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் அ. மாதவி அவர்கள் தங்கள் கல்லூரியில் நடைபெறும் முத்தமிழ் மன்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுமாறு தொலைபேசியில் என்னைத் தொடர்புகொண்டு, அழைப்பு விடுத்தார். என் அருமை நண்பர் பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் திருவாடானை சென்று திரும்புவதற்கும், தங்குவதற்கும் உரிய அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். 

நிகழ்ச்சியின் முதல்நாள் இரவே காரைக்குடிக்குச் சென்று தங்கினேன். காலையில் கல்லூரிக்குச் செல்ல மகிழுந்து ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்கள். தவிர்த்தேன். அரசு பேருந்தில் போகலாம் என்று நண்பரிடம் தெரிவித்தேன். பேராசிரியர் மு. பழனியப்பன் அவர்கள் நான் தங்கியிருந்த விடுதிக்குக் காலையில் வந்து உரையாடினார். காரைக்குடியில் சிற்றுண்டி முடித்து, இருவரும் பேருந்தேறித் திருவாடானை நோக்கிப் பயணித்தோம். ஒரு மணி நேரப் பயணம். அந்த நேரத்தில் தமிழகத்துக் கல்வி நிறுவனங்களின் நிலைகள், பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைச் சீரழித்த கல்வியாளர்கள்(!), அரசியல்வாணர்களின் திரு(!) விளையாடல்களை யெல்லாம் அசைபோட்டபடி திருவாடானை சென்றுசேர்ந்தோம். 

திருவாடானை அரசு கல்லூரி என்பது சிற்றூர்ப் பகுதியில் பிறந்து வளர்ந்த மாணவர்களை அரவணைத்து, கல்விப்பால் ஊட்டும் தாயாக விளங்குவதை அறிந்தேன். தமிழக அரசால் புதியதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிக்குப் பேராசிரியர் அ. மாதவி அவர்கள் முதல்வராகப் பணியாற்ற வந்த பிறகு பல்வேறு வசதிகளை மாணவர்களுக்குச் செய்து தந்துள்ளமையைப் பேராசிரியர்களும் பெற்றோர்களும் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். தண்ணீர்ப் பஞ்சம் போக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, எந்த நேரமும் மாணவர்களுக்குக் குடிதண்ணீர் கிடைக்குமாறு செய்தமை பெருஞ்சாதனை என்றார்கள். அதுபோல் வகுப்பறை, கணினி, இருக்கை வசதிகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்த நான், திருவாடானைப் பகுதி மாணவர்களையும், பேராசிரியர்களையும் சந்திப்பதற்குப் பெரும் விருப்பத்தோடு சென்றிருந்தேன். அனைவருடனும் உரையாடி மகிழ்ந்தேன். 

 முன்பே அறிமுகமான பேராசிரியர்கள் வந்து, ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டு, செய்யும் பணிகளைப் பகிர்ந்துகொண்டோம். காலை நிகழ்வின் முத்தமிழ் விழாவுக்குரிய நேரம் நெருங்கியது. 

கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாதவி அவர்கள் என்னை அறிமுகம் செய்யும் வகையில் என் பணிகளை எடுத்துரைத்து, பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்துவைத்தார்கள். சற்றொப்ப முக்கால் மணி நேரம் என் உரை அமைய வேண்டினர். நானும் நேரக்கட்டுப்பாட்டைப் பின்பற்றி உரையை அமைத்தேன்.  

சிற்றூர்ப்புறத்திலிருந்து கல்வி கற்பதற்குப் புறப்பட்ட என் வாழ்க்கைப் பயணத்தையும், கண்ட தோல்விகளையும், அதனை உடைத்து மேலெழுந்த வரலாற்றையும், தமிழ் கற்ற முறையினையும் அதனைப் பரப்புவதற்கு உலக அளவில் செய்துவரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தேன். நாட்டுப்புறப் பாடல் துறையில் நான் செய்த ஆய்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தபொழுது அரங்கம் அமைதிகாத்தது. தமிழிசை என் உரைக்கு வலிமைசேர்த்தது. உலகப்போக்கை உணர்ந்து, கடுமையாக உழைத்துப் படித்து முன்னேறுமாறு மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து என் உரையை நிறைவுசெய்தேன். நிறைவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தோம். வாழ்வில் நினைக்கத்தகுந்த பொழுதாக இந்த விழாவின் பொழுது அமைந்திருந்தது. 



முத்தமிழ் மன்ற விழா நிறைவுற்றதும் திருவாடானை சிவன்கோவில் சிறப்பையும் அருகில் இருக்கும் ஊர்களின் சிறப்பினையும் பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். அவற்றுள் தொண்டி. என்னும் ஊர் பழங்காலந்தொட்டு முதன்மையான ஊராக விளங்குகின்றது. ஓரி என்னும் ஊரும் புகழ்பெற்றதாகும். மேலும் காளையார் கோவில், நாட்டரசன்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, கீழடி முதலியன இப்பகுதியில் உள்ள பார்க்கத்தகுந்த ஊர்கள் என்றனர். முன்பே திட்டமிட்டிருந்தால் தொண்டிக்குச் சென்று கடற்காற்று வாங்கியிருக்கலாம். கடல்வளம் நுகர்ந்திருக்கலாம். ஆனால் தேவகோட்டையில் வாழும் பேராசிரியர் பழனி இராகுலதாசனைச் சந்திக்க இயற்கை இழுத்துச்சென்றது. 

 

கருத்துகள் இல்லை: