“கோவையிலிருந்து மருத்துவர் செந்தில்குமார் பேசுகின்றேன். நீங்கள் மு. இளங்கோவன் ஐயாவா”? என்று செல்பேசியில் அழைத்து, அறிமுகம் செய்துகொண்டார் அந்த நண்பர். இணையத்தில் தாங்கள் பதிந்துவரும் காணொலிகளைத் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். தங்களைச் சந்திக்க விரும்புகின்றேன். வரும் ஞாயிறு புதுச்சேரியில் சந்திக்க நேரம் ஒதுக்க இயலுமா?. என்றார். ஞாயிறு காலையில் சிற்றுண்டி உண்பது போல வாருங்கள் என்று நானும் அழைப்புவிடுத்தேன். எனக்கிருந்த அடுக்கடுக்கான வேலைகளில் அந்த உரையாடலை மறந்துபோனேன். சனிக்கிழமை இரவு மீண்டும் அதே குரல். தங்களைச் சந்திக்க காலையில் வருகின்றோம். என்னுடன் மருத்துவர் முத்துராமன் அவர்களும் சென்னையிலிருந்து வந்து இணைந்துகொள்வார் என்றதும் விடியல்பொழுதுக்குக் காத்திருந்தேன். முன்பின் அறிமுகம் இல்லாத நண்பர்கள் இருவர் நம்மைப் பார்ப்பதற்கு வருகின்றனரே!. இரவுப் பயணம் இடையூறாக இருந்திருக்குமே என்று நினைத்தபடி புதுச்சேரி, செயராம் உணவகத்தில் திட்டமிட்டபடி ஞாயிறு காலை எட்டு மணிக்குச் சந்தித்தோம்.
காலைச் சிற்றுண்டி உண்டபடியே ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். மருத்துவர் செந்தில்குமார் தற்பொழுது கயானா நாட்டில் மருத்துவப் பணியாற்றி வருகின்றார் என்பதும், மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னையில் ஒரு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார் என்பதும் தெரியவந்தன.
மருத்துவர் முத்துராமன் அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியபொழுது எங்கள் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொல்காப்பியம் குறித்த அறிஞர்கள் பேச்சுகள் அடங்கிய காணொலிகளைத் தொடர்ந்து பார்த்துள்ளதாகவும், தம் வகுப்புத் தோழரான மருத்துவர் செந்தில்குமார் அவர்களும் எம் காணொலிகளைக் கண்டு மகிழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நலம் நோக்கிப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையே உருவாக்கப்பட்டுள்ள காணொலிகளைக் கண்டு, அதன் பயன் நுகர்ந்து, அம்முயற்சியில் ஈடுபட்டுள்ள என்னை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்தப் பயணத்தை அவர்கள் அமைத்தனர் என்பதும் உரையாடலில் தெரியவந்தது.
மருத்துவர்
முத்துராமன் அவர்கள் கைபேசி பயன்படுத்துவதில்லை என்று கூறினார். அவரை வியப்புடன் பார்த்தேன்.
இந்தக் காலத்தில் கைபேசி இல்லாமல் ஒருவரா? என்று வியப்புற்றேன். ஆயின் மின்னஞ்சல் பயன்படுத்துவார்
என்று அறிந்தபொழுது ஆறுதல் கிடைத்தது.
எங்கள் உரையாடலின் ஊடே, ஒருமுறை துறையூரில் இருக்கும் ஓங்காரக் குடிலுக்கு நான் வருகை தர வேண்டும் என்றும் அங்கு அருளாட்சி செய்துவரும் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகளின் நல்லாசியைப் பெறுவதுடன் அங்கு நடைபெற்றுவரும் உணவுக்கொடைப் பணிகளைப் பார்வையிட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தனர். நேரம் கிடைக்கும் பொழுது செல்லலாம் என்று கூறிவிட்டு, கையுறையாக என் நூல்கள், ஒளிவட்டுகள் சிலவற்றைக் கொடுத்தேன். அனைவரும் விடைபெற்றோம்.
மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னைக்கும், மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் இலண்டன் வழியே கயானாவுக்கும் பயணமானார்கள். ஓரிரு கிழமைகள் ஓடின. என் முயற்சியை அறிந்த முத்துராமன் அவர்கள் எனக்குச் சில ஆங்கில நூல்களைப் படிப்பதற்குப் பரிந்துரைத்து, அதனை அவர் செலவில் வாங்கியும் அனுப்பினார்.
மருத்துவர் செந்தில்குமார் அவர்கள் வழியாகவே நான் செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலையில் இருந்தேன். திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரில் அமைந்துள்ள ஓங்காரக் குடிலுக்குச் செல்லும் நாள் விடுமுறை நாளில் அமையுமாறு திட்டமிட்டோம். மருத்துவர் முத்துராமன் அவர்கள் சென்னையிலிருந்து மகிழுந்தில் புதுவைக்கு வந்து, என்னை அழைத்துக்கொண்டு துறையூர் ஒங்காரக் குடிலுக்குச் செல்வதாகத் திட்டம். உரிய நாளில் உரிய நேரத்தில் மருத்துவர் முத்துராமன் அவர்கள் ஓட்டுநரின் உதவியுடன் புதுச்சேரியில் உள்ள நம் இல்லத்துக்கு மிகச் சரியாக வந்துசேர்ந்தார். இருவரும் துறையூருக்குப் பயணமானோம். புதுச்சேரி - விழுப்புரம்- பெரம்பலூர் – துறையூருக்கு மூன்றரை மணிநேரத்தில் சென்றுசேர்ந்தோம்.
மகிழுந்துப் பயணத்தில் முத்துராமன் அவர்கள் பேராவூரணி ஊரினர் என்பதும், ஊட்டியில் ஆங்கிலவழியில் கல்வி பயின்று, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர் என்பதும் தமிழில் அரிச்சுவடி கூடத் தெரியாது என்றும், பின்னர் தம் தாய்மொழியான தமிழின் சிறப்புணர்ந்து, தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பதற்குத் தெரிந்துகொண்டு, பேச்சுகளைக் கேட்டும், பாடல்கள், உரையாடல்களைக் கேட்டும் தம் தமிழறிவை வளர்த்துக்கொண்டுள்ள பாங்கினைக் கேட்க கேட்க எனக்கு வியப்பே மேலிட்டது. அமெரிக்க அதிபர்களின் வரலாற்றையும், நியூயார்க் நகரினை உருவாக்கிய அறிஞரின் வரலாற்றையும் கூறி, எனக்கு ஒரு தன்னம்பிக்கை வகுப்பையே மகிழுந்தில் நடத்தி முடித்தார் மருத்துவர் முத்து. என் பார்வைக்குச் சில ஆங்கில நூல்களையும் மகிழுந்தில் கொண்டுவந்திருந்தார்.
பகல்
ஒன்றரை மணியளவில் ஓங்காரக் குடிலை அடைந்தோம். இரண்டு திருமண மண்டபங்களை இணைத்துக்கட்டியது
போல் பெரிய மாளிகையாக ஓங்காரக் குடில் கண்ணில் தென்பட்டது. நுழைவு வாயிலோ, கடை வாயிலோ
இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து உணவருந்தலாம் என்பதற்கு ஏற்ப, குடில் இருந்தது. கையில்
எடுத்துச் சென்ற பைகளை வைப்பதற்கு வாய்ப்பாக மண்டபத்தில் இருந்தவர்களிடம் சொல்லி ஓர்
அறைக்குரிய திறவியைப் பெற்றுக்கொண்டோம். எங்கள் வருகை முன்பே குடில் அன்பர்களுக்குத்
தெரிவிக்கப்பட்டிருந்ததால் அங்குள்ள அன்பர்கள் சிலர் எங்களை அன்புடன் வரவேற்று உதவினர்.
ஓங்காரக் குடில் அறை மிகவும் எளிமையாகவும், போதிய வசதிகளுடனும் இருந்தது. உலகியல் விடுதிகளைப்
போல் கட்டில் மெத்தை, தொலைக்காட்சிகள் இல்லை. பாய், தலையணை, போர்வைகள் இருந்தன. தண்ணீர்,
வெந்நீர் வசதிகள் இருந்தன. காற்று வளிப்பாடு (AC) இருந்தது. போதிய மின்விசிறி, விளக்குகள்
உள்ளன. எங்கும் தூய்மை பளிச்சிட்டது. குளிப்பறையில் கை, கால் கழுவிக்கொண்டு முதலில்
உணவருந்தும் கூடத்திற்குச் சென்றோம்.
உணவினை உண்டு முடித்ததும், எஞ்சிய உணவை உரிய ஏனத்தில் கொட்டிவிட்டு, தட்டினை நீரில் கழுவி வைத்தோம். அதனை முதுபெண்கள் இருவர் மீண்டும் கழுவினர். அந்தத் தட்டுகள் மீண்டும் சுடுநீரில் கழுவப்பெற்று உரிய பொறிகளில் மீண்டும் தூய்மை செய்யப்பெற்று, அடுத்த வேளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் தூய்மையாக அடுக்கப்பட்டிருந்தன.
துறையூர்ப்
பகுதியில் வாழும் வறுமை நிலையில் உள்ள மக்கள், ஆதரவற்றவர்கள், வெளியூர்க்காரர்கள் யாவரும்
இலவசமாக உண்பதற்கு உரிய ஏற்பாடுகள் ஓங்காரக்குடிலில் இருப்பதைக் கண்ணாராக் கண்டு வியந்தேன்.
உணவினைப் பரிமாறுபவர்களின் முகத்தில் மகிழ்ச்சியும் கருணையும் நிரம்பியிருப்பதைக் கண்டு
மகிழ்ந்தேன். பகலுணவுக்குப் பலரும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை நான்கு மணிக்குப்
பல்லாயிரம் பேருக்குத் தயாரிக்கப்பட்ட உணவுகள் ஊர்திகளில் அருகில் உள்ள சிற்றூர்களுக்குக்
கொண்டுசேர்க்கப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக்கொள்ளும் எளிய நிலை மக்கள் உண்டு முடித்து,
பசியின்றிப் படுக்கின்றனர். ஆடு மாடுகளின் பசியினைப் போக்குவதற்குத் தனியே புல்லும்
தழையும் வழங்கப்படுகின்றன.
குடில் தொண்டர் ஒருவர் எங்களுக்குக் குடிலின் செயல்பாடுகள், உணவுக்கூடம், பொருள் கிடங்கு, மளிகைப் பொருள் கிடங்கு, கறிகாய் கிடங்கு யாவற்றையும் காட்டினார். தேங்காய் உரிப்பது, பூண்டு உரிப்பது தொடங்கி, மிளகாய்த்தூள் அரைப்பது வரை அனைத்துக்கும் உரிய பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. குடிலின் பொறியியல் ஆர்வலர்கள் இவற்றை வடிவமைத்து வழங்கியுள்ளனர். சோறுவடித்தல், குழம்பு (சாம்பார்) வைப்பதற்கு உரிய வகையில் பெரிய பெரிய ஏனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருபத்து நான்கு மணி நேரமும் மின்தடை இல்லாமல் குடிலில் வெள்ளொளி வீசுகின்றது. ஒரு காலத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவிய பொழுது துறையூர் நகருக்குத் தண்ணீர் வசதியைக் குடில் வழங்கியது என்று அறிந்தபொழுது அவர்களின் உயிர் இரக்க உணர்வு புரியத் தொடங்கியது.
குடிலில் நடைபெறும் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கு உரிய அரங்கு பரந்துவிரிந்து காணப்பட்டது. மக்களுக்கு உயிர்காக்கும் அவசர ஊர்திகளும், உணவுகளைச் சிற்றூர் மக்களுக்குக் கொண்டுசேர்க்கும் மூடுந்துகள், மகிழுந்துகள் எனப் பலவகைப்பட்ட வண்டிகளும் அந்த அரங்கின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் ஒரு பருந்துப் பார்வையாகப் பார்த்தோம்.
மாலை மூன்று மணியளவில் ஓங்காரக் குடிலினை உருவாக்கிய ஆறுமுக அரங்க மகாதேசிகரைக் கண்டு வாழ்த்தினைப் பெறலாம் என்றனர். மூன்று மணிக்குக் காத்திருந்தோம்.
குடில் தொடங்கப்பட்டபொழுது ஒரு குடிசை அமைப்பில் இருந்தது எனவும், பல்லாயிரம் பேரின் உழைப்பிலும், உதவியிலும் இந்த நிலையை அடைந்தது எனவும் குடிலில் வதியும் தொண்டர்கள் குறிப்பிட்டனர். தவத்திரு அடிகளார் அவர்கள் தொடக்க காலத்தில் அமர்ந்து தவமியற்றிய அறை இன்றும் சிறப்பாகப் போற்றிப் பராமரிக்கப்படுகின்றது. அதில் குடிலுக்கு வரும் தொண்டர்கள் அமர்ந்து, அமைதி வழியில் வழிபாடு செய்கின்றனர்.
குடிலின் ஒரு பகுதியில் உள்ள அறையில் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிகர் உண்ணா நோன்பிருந்து, தவ வாழ்வு நடத்துகின்றார். அவர்களைக் காண எளிய தொண்டர்கள் கையுறைப் பொருள்களுடன் நின்றனர். அனைவரும் வரிசையில் நின்றே அடிகளாரிடம் வாழ்த்துப்பெறுகின்றனர். வி.ஐ.பி. வரிசை போன்ற எதனையும் அங்குக் காண இயலவில்லை. எல்லோரும் ஓர் நிறை என்பதை அறிந்தோம். நாங்களும் வரிசையில் நின்றோம். எங்களுக்கு உரிய முறை வந்தது. முதலில் மருத்துவர் முத்துராமன் அவர்கள் தவத்திரு அடிகளாரிடம் வாழ்த்துப் பெற்றார். முத்துராமனாரை நினைவில்கொண்டு, பழைய நினைவுகளை வினவி, தவத்திரு அடிகளார் அவர்கள் ஆசி வழங்கினார். நம் மருத்துவரும் உணவுக்கொடைக்குத் தம் பங்காகச் சிறு தொகையை வழங்கினார். அத்தொகை அதிகமாக உள்ளதே என்று அடிகளார் குறிப்பிட்டு, கொடை வழங்கும்பொழுது துன்பப்பட்டு வழங்கக்கூடாது என்றும் அவரவர்களின் தகுதிக்கு உட்பட்டே கொடை வழங்க வேண்டும் என்றும் கடன் வாங்கி வழங்குதல் கூடாது என்றும் அன்புக்கட்டளையிட்டார்கள்.
உணவுக்கொடைக்கு மிகச் சிறு தொகை ஒன்றை நானும் அடிகளாரின் திருக்கையில் அளிக்க முற்பட்டேன். அன்பால் பரிவுடன் என்னை நோக்கிய அடிகளார், புலால் உண்பீர்களா? என்றார். ஆம் உண்பேன் என்றேன். அப்படியா? பாவம் செய்த கையால் வழங்கும் தொகையை ஏற்கமாட்டேன் என்று தொகையைத் திருப்பியளித்தார். விரைவில் புலால் மறுப்பில் ஈடுபடுவேன் என்றும் உயிர்க்கொலையை ஆதரிக்கமாட்டேன் என்று கூறியதும், வாழ்த்துரைத்து, அத்தொகையை ஏற்றார். இதுபோன்று தொண்டர்கள் வழங்கும் சிறு சிறு தொகையாலும், ஓங்காரக் குடில் தொண்டர்கள் திரட்டியளிக்கும் கொடைகளைக் கொண்டும்தான் ஈடு சொல்லமுடியாத பசிப்பிணி போக்கும் இவ்வறப்பணி நடைபெறுவதை அறிந்து, நாமும் எதிர்காலத்தில் குடில் தொண்டராக மாற வேண்டும் என்று உறுதியேற்று, அடிகளாரிடம் விடைபெற்றேன். ஓங்காரக்குடிலின் திருவமுதுகொண்ட ஒரு கைப்பையை அன்பளிப்பாக அளித்தார்கள்.
ஓங்காரக்குடிலின் செயல் மறவர்களாக விளங்கும் பல தொண்டர்களை மாலைப்பொழுதில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவரவர்களும் எவ்வாறு குடிலுடன் தங்களுக்குத் தொடர்பு அமைந்தது என்று குறிப்பிட, புதுப்புது புதினங்களைப் படிப்பது போல் உணர்ந்தேன். வாழ்க்கையில் துன்பத்தில் உழன்ற பலர் அடிகளாரின் வாழ்த்தினால் நன்னிலைக்கு வந்துள்ளதைக் குறிப்பிட்டனர். பகுதி நேரமாகக் குடிலுக்கு வந்துபோனவர்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கி, ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் தொண்டாற்றுவதை நினைத்து, அடிகளாரின் கொள்கை மேன்மையை அறிந்தேன். ஓங்காரக்குடிலிலிருந்து ஞானத்திருவடி என்னும் மாத இதழ் வெளிவருகின்றது. குடில்சார்ந்த செய்திகளைத் தொண்டர்களுக்குக் கொண்டுசேர்க்கும் பெரும்பணியை இவ்விதழ் செய்துவருகின்றது.
துறையூர் வங்கிப் பணியில் இணைந்த மேலாளர் ஒருவர் உணவுக்கொடை வழங்குவதைக் கேள்வியுற்று, தாம் பணியேற்ற முதல் நாள் உணவருந்துவதற்குத் தொண்டர்களுள் ஒருவராக அமர்ந்து குடலில் உணவருந்தினார். அதனைக் கண்ட குடில் தொண்டர் ஒருவர், நீங்கள் வங்கி மேலாளர் ஆயிற்றே! என்று வினவ, ஆம் என்று உரைத்த மேலாளர் பின்னாளில் ஓங்காரக் குடிலின் பணிகளை அறிந்து, நிரந்தரத் தொண்டராக மாறி, குடில் வளர்ச்சிக்கு உதவும் மேலாண்மைக்குழுவினருள் ஒருவராக இணைந்துள்ளமை அறிந்து, உண்மையான ஓர் அறநிலைக்கு வந்துள்ளோமே என்று மகிழ்ந்தேன்.
இரவு உணவும் குடிலில் சிறப்பாகக் கிடைத்தது. உண்டு முடித்தோம். இரவு முழுவதும் உரையாடிப் பெற்ற செய்திகளின் அடிப்படையில் ஓங்காரக் குடிலின் வளர்ச்சி, பணிகள், தொண்டுகள் யாவும் ஓரளவு தெரியவந்தன. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை ஓங்காரக் குடிலுக்கு வரவேண்டும் எனவும் தவத்திரு அடிகளாரின் நல்லாசியினைப் பெறவேண்டும் எனவும் தீர்மானம் செய்துகொண்டேன்.
காலையில் எழுந்து, கடமைகள் முடித்து, மீண்டும் ஒரு சுற்று ஓங்காரக் குடிலின் விடுபட்ட பகுதிகளைப் பார்வையிட்டோம். ஊருக்குப் புறப்படும் நிலையில் மீண்டும் அடிகளாரைச் சந்தித்து, முறைப்படி விடைபெற்றுச் செல்லுங்கள் என்று அன்பர்கள் குறிப்பிட்டனர். இடையில் ஓங்காரக் குடில் வெளியிட்டுள்ள வெளியீடுகள், ஒலிப்பேழைகளை வாங்கினோம். குடிலை ஒட்டி இருந்த அயல்நாட்டினர் தங்கும் விடுதியையும் கண்டு மகிழ்ந்தோம். சுற்று மதிலோ, பாதுகாப்புச் சுவரோ இல்லாமல் குடில் விடுதிகள் பாதுகாப்பாகவே இருப்பதைக் கண்டு, உண்மைநிலை உணர்ந்தேன். நினைவுக்குச் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன், மீண்டும் அடிகளாரின் திருவடி பணிந்து, நல்லாசி பெற்று ஊருக்குப் புறப்பட்டோம்.
குடிலின் இயக்கம் கருணை உள்ளம் கொண்ட அன்பர்கள் தரும் பொருட்கொடையால்தான் நடைபெறுகின்றது. மலேசிய அன்பர்கள் பலரும் தமிழகத்து அன்பர்கள் பலரும் தங்களால் இயன்ற பொருட்கொடைகளைத் தந்தவண்ணம் உள்ளனர். சிங்கப்பூர், இலண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள தொண்டர்கள் பசிப்பிணி போக்கும் ஓங்காரக் குடிலின் பணியில் தங்களைக் கரைத்துக்கொண்டு உதவி வருகின்றார். குடிலின் வங்கிக் கணக்கில் பெரும் தொகை இருப்பில் இல்லை எனவும், அவ்வப்பொழுது கிடைக்கும் தொகையைக் கொண்டே அறப்பணி நடைபெற்று வருகின்றது என்பதும் அறிந்தபொழுது வியப்பு ஏற்பட்டது. அறக்கொடையாளர்கள் தரும் தொகை மளிகைப்பொருளாகவோ, கறி காயாகவோ, அரிசியாகவோ ஓங்காரக் குடிலுக்கு வந்துசேர்கின்றது. உணவுபடைக்கும் அரிசி, பருப்பு, கறி காய் யாவும் முதல் தரமானதாகவே குடிலுக்குக் கொள்முதல் செய்யப்படுகின்றன. உணவினை இலவசமாக வழங்குகின்றோம் என்று தரமற்ற பொருள்கள் குடிலுக்கு வர வாய்ப்பே இல்லை.
திருவள்ளுவரின் கொள்கையிலும் திருமூலர் மரபிலும் வள்ளலார் நெறியிலும் வாழும் சித்தராக விளங்கும் தவத்திரு ஆறுமுக அரங்க மகாதேசிகர் அவர்களின் தவ மேன்மையாலும், கருணையுள்ளம் கொண்ட, தன்னலம் இல்லாத, கொள்கைவழிப்பட்ட ஓங்காரக்குடில் தொண்டர்களாலும் குடிலின் பசிப்பிணி மருத்துவம் தொடர்ந்தவண்ணம் இருக்கும்.
ஓங்காரக்குடில்
இணையதளம்:
ஓங்காரக்குடில்
அறப்பணிக்குக் கொடை நல்க விரும்புவோர் கவனத்திற்கு:
https://www.agathiar.in/donation/
முகவரி:
SRI AGATHIAR SANMAARGA CHARITABLE TRUST
(Reg. No : 85/4 – 2002)
Sri
Bujanda Maharishi Hall,
113
- Extension , 621010 Thuraiyur,
Tiruchirapalli
District, Tamilnadu, India.
Phone: 0091-4327-255184, 0091-9688 278666
Email: trustkudil@gmail.com
வாருங்கள்! பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்வோம்! பசிப்பிணி
போக்குவதே உலகில் தலையாய அறம் என்று நினைப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக