நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 9 மார்ச், 2022

மருத்துவ மாமணி ப. உ. இலெனின் நினைவுகள்…

  


     நான் பணியாற்றுவதற்குப்     புதுவை வந்தபொழுது  மருத்துவர் .. இலெனின் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது. நூல்களின் வழியாக முன்பே அறிமுகம் ஆனவர்தான். எங்கள் அன்பிற்குரிய பேராசிரியர் த. பழமலை அவர்களின் மகன் இவர் என்பதும் எங்களின் நட்பு வேர்பிடித்ததற்குக் காரணமாக இருந்தது. 

நான் மாணவனாக இருந்தபொழுதே பேராசிரியர் த. பழமலை அவர்களைக் கவிதை வழியாக அறிந்திருந்தேன். பழமலையின் சனங்களின் கதையில் இடம்பெறும் “கீழைக்காட்டு வேம்பு” கவிதையால் என் உள்ளத்துள் உறையத் தொடங்கியவர்.  சில மாநாடுகளில், கலந்துரையாடல் கூட்டங்களில் பழமலையைக் கண்டு பேசியுள்ளேன். அவரின் தோற்றம் நகரியத் தோற்றமாக இருந்தாலும் செயல்பாடுகள் யாவும் சிற்றூர்ப்புற உழவருக்கு உரியதாக இருந்தது. இவர்தம் புரட்சிகர சிந்தனைகளை அந்நாளில் பார்த்தபொழுது, குடும்பத்தைக் கவனிக்காத ஆளாக எனக்குத் தெரிந்தார். பின்னர்தான் பழமலையின் பிள்ளைகள் மருத்துவர், நீதியரசர், பொறியாளர் என்று தகுதி சான்றவர்களாக வளர்ந்துள்ளமை அறிந்து வியப்புற்றேன். இலெனினுடன் பழகத் தொடங்கியபொழுதுதான் பழமலை அவர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஈடுபாடு உடையவர் என்பதும், வாழ்நாள் முழுவதும் கூட்டம், பேச்சு, எழுத்து என்று காலத்தைக் கழித்தவர் என்பதும் தெரிந்தது. அம்மாதான் குடும்பத்தைக் கவனித்து, பிள்ளைகளை வளர்த்தார்கள் என்பதும் புரியத் தொடங்கியது. இது நிற்க. 

மாலை நேரங்களில் கிழமையில் இரண்டு முறையாவது இலெனின் அவர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். என் வீட்டுக்கு அருகில்தான் அவரின் மருத்துவமனை. நடந்து சென்று திரும்பலாம். நகருக்குச் செல்லும்பொழுதெல்லாம் அம்பலத்தடையார் மடத்துத் தெருவில் இருந்த அந்த மருத்துவமனைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்புவேன். மருத்துவம், உடல்நலம் பற்றி எங்கள் உரையாடல் நீளும். அவர் எழுதிய கட்டுரைகளை நூல்களை வழங்குவார். ஓய்வில் படித்துக் கருத்துரைப்பேன். எம் குடும்பத்தினர்க்கு அவ்வப்பொழுது மருத்துவம் பார்த்துக்கொள்வோம். எனக்கு ஏதேனும் காய்ச்சல், இருமல் இருந்தால் சொல்வேன். அப்பொழுது சில மாத்திரைகளையும் அவர் குடிப்பதற்கு வைத்துள்ள தண்ணீரையும் கொடுத்து, இவற்றை வாயில் போடுங்கள் என்பார். வீடு திரும்புவதற்குள் குணம்பெற்றிருப்பேன். வெளியூர் பயணங்கள் மேற்கொண்டிருந்தால், தூசு படிந்த காற்றை உட்கொண்டதால்  எனக்கு இருமல் வருவது இயற்கை. அந்த இருமல் இலெனின் அவர்களின் ஒருவேளை மருந்துக்கு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். இந்தக் கொரானா காலத்தில் இலெனின் இருந்திருந்தால் ஏதேனும் ஒரு மருந்தைக் கொடுத்து, பலர் உயிரைக் காப்பாற்றியிருப்பார். இதுவும் நிற்க. 

பேராசிரியர் தமிழண்ணல், சிங்கப்பூர் கோவலங்கண்ணன் உள்ளிட்டோர் இலெனின் மருந்தால் நலம்பெற்றனர். அவர்களுக்கு உரிய மருந்துகளை வாங்கித் தனித்தூதில் அனுப்புவதை விருப்பமாகச் செய்து வந்தேன். அவர்களும் மருந்துகளை உண்டு, நலமுற்ற செய்திகள் எனக்கும், இலெனினுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். 

  ஒருநாள் புதிய மருத்துவனை கட்டிக்கொண்டு, இலெனின் அவர்கள் இடம் மாறிய செய்தி கிடைத்தது. இருக்கை, தொலைக்காட்சி வசதிகளுடன் அந்தப் புதிய மருத்துவமனை நல்ல காற்றோட்டத்துடன் இருந்தது. சற்றுத் தொலைவு என்றாலும் பழைய பழக்கத்தில் அடிக்கடி சென்று இருமல் மருந்து வாங்கி உண்பேன். நான் எழுதிய நூல்களைக் கொடுப்பேன். அவரும் அவரின் நூல்களைப் பரிசளிப்பார். அனைத்துத் துறையிலும் ஆழங்கால் பட்ட புலமையுடையவர் என்பதால் எளிய நடையில் மருத்துவச் செய்திகளை எழுதுவார். படித்தவர்கள், எளிய படிப்பறிவு உடையவர்கள்கூட இவரின் நூல்களையும் கட்டுரைகளையும் ஆர்வமாகப் படிப்பார்கள். பல இதழ்களில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உள்ளூர்த் தொலைக்காட்சிகளில் தோன்றி, மருத்துவ விளக்கம் இலவசமாக அளிப்பார். இலெனின் மருத்துவத்தை நேசித்தார். மக்கள் இவரின் மருத்துவத்தை நேசித்தனர். 

எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் இவர் மருத்துவத்திற்கோ, மருந்துக்கோ காசு வாங்குவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன் நம் ஊர்ப் பையன் ஒருவனுக்குச் சிறுநீரகக் கல் உருவாகி, உடல் அளவிலும் மன அளவிலும் வருந்திக்கொண்டிருந்தான். ஊருக்குச் சென்றபொழுது அழைத்து வந்து அவனை இலெனின் முன் கொண்டு சென்று நிறுத்தினேன். ஓரிரு மாதங்களுக்கு உரிய மருந்துகளைக் கொடுத்து, உண்ணச் சொன்னார். “சல்லிக்காசு” செலவு இல்லாமல் நலம்பெற்றான். 

புதுவையில் பிற மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்கச் செல்வதை நான் அதிகம் விரும்புவது இல்லை. முன்பதிவு, காத்திருப்பு, ஆய்வுகள், மருத்துவர் கூலி, மருந்து செலவு யாவும் நம்மை அலைக்கழிக்கும். நெஞ்சாங்குலை ஆய்வுக்கு ஒருவாரம் காத்திருக்க வேண்டியிருக்கும். கால்முறிவுக்கு சிலநாள் காத்திருக்கச் சொல்வார்கள். கூட்டம் அலைமோதும். ஓரிரு மணித்துளிகளில் நம்மை மருத்துவர் வெளியேற்றிவிடுவார். அடுத்த நோயாளியை ஆர்வமுடன் எதிர்நோக்குவார். நம் இலெனின் அவர்களிடம் மருத்துவம் பார்க்கச் சென்றால் குடும்பநலம், நாட்டு நடப்பு, பழைய மருத்துவ வரலாறு, இப்பொழுது உள்ள நிலை என அனைத்து விவரங்களையும் பேசித் தகவலறிந்த பிறகே மருத்துவம் பார்ப்பார். மருந்து தருவார். வாசற்படி வரை வந்து வழியனுப்புவார். அவரின் அன்புமொழிகளைக் கேட்டே பலர் குணம்பெற்றிருப்பர். இவ்வாறு ஆறுதல் மொழிகளைக் கேட்கவே மீண்டும் ஒருமுறை வரலாம் என்றும் நினைப்பர். 

ஒருமுறை என் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு மருத்துவர் சொல்ல ஓர் ஆண்டாக அதற்குரிய மாத்திரையை உண்டுவந்தேன். இதனை அறிந்த இலெனின் கடும்கோபம் கொண்டார். வாழ்நாள் முழுவதும் மருந்து உண்ணும் அளவிற்கு அது கொடிய நோய் இல்லை. உணவுப்பழக்கம் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறி, தடுத்தாட்கொண்டார். மருந்தை நிறுத்தி, உணவில் கவனம் செலுத்தினேன். இயல்புநிலைக்குத் திரும்பினேன். 

மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் இலெனின் அவர்கள் அதனை ஈடுபாட்டோடு செய்தார். ஆங்கில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை எடுத்துச் சொல்லி, மருந்தில்லா நிலையில் வாழ நம்மைத் தயார்படுத்துவார். நோய் அற்றுப் போகும்படி அவரின் மருத்துவ முறை இருக்கும். நாள்பட்ட நோயுடையவர்களும் இலெனின் அவர்களால் நீண்டநாள் உயிர்வாழ்ந்தனர். அவரை அணுகி மருத்துவம் பார்த்தவர்கள் அரசு அதிகாரிகள் முதல் அன்றாடம் உழைத்து வாழ்வோர் வரை எனப் பலதரப்பட்டவர்களும் இருந்தனர். அனைவரையும் ஒரே முறையில் சீராக நடத்துவது அவர் இயல்பு. 

மருத்துவத்தாலும், மருத்துவ அறிவு வெளிப்படும் எழுத்தாற்றலாலும் எங்களையெல்லாம் ஈர்த்த இலெனின் அவர்கள் திடுமெனப் புத்தாண்டு நாளின் வைகறைப் பொழுதில் இயற்கை எய்தினார் என்ற  செய்தி கேட்டு, இடியை ஏற்ற மயில்போல் குலைந்தோம். உடன் விரைந்தோடிச் சென்று, இலெனின் அவர்களின் செம்மாந்த உடலுக்கு அக வணக்கம் செய்தோம். இல்லத்திலிருந்த உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஒருவருக்கு ஒருவர் கவலைகளைப் பகிர்ந்துகொண்டோம். அழுது உருகினோம்.  தக்கவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நண்பர்களும் உறவினர்களும் குழுமினர். இறுதி வணக்கம் செலுத்தி, மாலையில் அவர் நல்லுடலைக் கொண்டுபோய் நன்காட்டில் அடக்கம் செய்தோம். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? 

“நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்பதுதான் உலகத்தின் பெருமையாக உள்ளது. “பயன்மரமாக” வாழ்ந்த இலெனினின் வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கையாகும். 

ஆண்டு ஒன்று உருண்டோடியது. இப்பொழுது நினைத்துப் பார்க்கின்றேன். பல ஆண்டுகளாக நான் மருத்துவம் பார்த்துக்கொண்ட வகையில் இலெனினுக்கு  எவ்வளவு தொகை தர வேண்டியிருக்கும்?. இலெனின் ஒவ்வொரு முறையும் இப்படிதான் சொல்வார். 

“போங்க சார்! என்னிடம் வைத்தியம் பார்த்துக்கொண்டதற்கு நான்தான் உங்களுக்குப் பணம் தரவேண்டும்”

 என் ஈர விழிகளில் இலெனின் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

நூல்: மக்கள் மருத்துவர் ப.உ.லெனின் வாழ்வும் பணியும் நூலில் இடம்பெற்றுள்ள என் கட்டுரை.

வெளியீடு: பேராசிரியர் த. பழமலை, 182, இளங்கோ வீதி, சீனிவாசா நகர், சாலாமேடு - 605401 விழுப்புரம் மாவட்டம். தொடர்பு எண்: 99426 46942

நூல் விலை உருவா: 200 - 00

கருத்துகள் இல்லை: