மருத்துவர் ப.உ.இலெனின்
புகழ்பெற்ற
மருத்துவர் வல்லுநர் அண்ணன் ப.உ.இலெனின் அவர்கள் இன்று (01.01.2020) அதிகாலை மாரடைப்பால்
இயற்கை எய்தினார் என்ற செய்தியைப் பெருந்துயரத்துடன் தெரிவிக்கின்றேன்.
ப.உ.
இலெனின் அவர்கள் பேராசிரியர் த. பழமலை அவர்களின் மூத்த மகனார் ஆவார். புதுச்சேரியில்
ஹோமியோ மருத்துவமனை நடத்தி, மக்களின் நோய்நீக்கிப் பெரும் புகழ் பெற்றவர். இளம் அகவை
கொண்ட மருத்துவரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தார்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
கடந்த
பதினைந்து ஆண்டுகளாக மருத்துவர் ப.உ.இலெனின் அவர்களுடன் நெருங்கிப் பழகியுள்ளேன். பதினைந்து
ஆண்டுகளாக எனக்கு ஏதேனும் உடல் நலிவு எனச் சென்று, அறிகுறி சொன்னால், சில மாத்திரைகளைக்
கொடுத்து உண்ணுமாறு சொல்வார். வீடு திரும்புவதற்குள் குணமாகிவிடும். என்னைப் போல் பேராசிரியர்
தமிழண்ணல் அவர்களுக்கும் மருத்துவம் பார்த்து குணப்படுத்தியவர்.
மருத்துவர்
ப.உ.இலெனின்
அவர்கள் நல்ல மருத்துவர் என்பதுடன்
மனிதநேயப் பற்றாளராகவும் விளங்கியவர். ஏழை, எளிய மக்களுக்கு
இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார் என்பதைச் சிலர் மட்டும் அறிவோம்.
மருத்துவர் இலெனின் அவர்கள் வானொலி,
தொலைக்காட்சி, செய்தி ஏடுகளில் தம்
மருத்துவ அறிவைப் பொதுமக்களுக்கு உரையாடல்
வழியும் எழுத்துக்கள் வழியும் வழங்கியவர்.
மருத்துவர் ப.உ. இலெனின்
அவர்கள் 26.06.1970 இல் பிறந்தவர். பெற்றோர்
பேராசிரியர் த.பழமலை, ஆசிரியர்
உமா.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு ஓமியோபதி
மருத்துவக் கல்லூரி, மற்றும் மருத்துவமனையில் BH.M.S., மற்றும் M.D மருத்துவப்
படிப்புகளை நிறைவுசெய்து, 1994 முதல் கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளாகப் புதுச்சேரியில் மருத்துவப்பணியாற்றி வருகின்றார். இதுவரை மருத்துவம் சார்ந்து
50 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மருத்துவத்தில்
இவர் எழுதாதத் துறைகளே இல்லை என்று
கூறும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் நூல்களை எழுதியுள்ளமை இவரின்
பலதுறை அறிவுக்குச் சான்றாகும்.
மருத்துவர் ப.உ.இலெனின்
அவர்களின் மருத்துவத்துறைப் பேரறிவு கண்டு இந்திய
அரசு சுகாதாரத்துறையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் ஆலோசகராகவும், உயர்நிலைக்குழுவின் ஆட்சிமன்ற உறுப்பினராகவும் அமர்த்தியது.
மருத்துவர் ப.உ. இலெனின்
அவர்கள் இனிய பேச்சுக்கும் கனிந்த
பார்வைக்கும் உரியவர். திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் மருத்துவருக்குக்
குறிப்பிடும் அனைத்து இலக்கணங்களையும் இலெனின்
பெற்று விளங்கியவர். தம்மை நாடிவரும் நோயுற்றோருக்கு
அன்புகுழைத்து மருத்துவம் பார்க்கும் இவர் மக்களுக்கு ஏற்படும்
பல்வேறு நோய்களையும் அறிமுகப்படுத்தி அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத்
தமிழில் நூல்களாகத் தொடர்ந்து எழுதி மக்கள் மருத்துவராக
விளங்கினார்.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அருகில் உள்ள,
சவகர் நகர் நான்காம் குறுக்கில் இலெனின் அவர்களின் உடல் மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
மருத்துவ
மாமணியாக விளங்கிய அண்ணன் ப.உ.இலெனின் அவர்களின் புகழ் நீடு நிற்கும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக