எம்.இலியாஸ்
(ஆசிரியர்- செம்மொழி)
சிங்கப்பூரிலிருந்து
வெளிவரும் செம்மொழி இதழின்
ஆசிரியரும், தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளரும்,
எங்களின் நெஞ்சம் நிறைந்தவருமான அண்ணன்
எம். இலியாஸ் அவர்களின் பிறந்த
நாளான (திசம்பர் 26) இன்றைய நாளில்
அவரைப் போற்றி வாழ்த்துவதில் நெஞ்சம் நிறைவடைகின்றேன்.
கோவை
செம்மொழி மாநாட்டில் தொடங்கிய எம் நட்பு, வளர்பிறைபோல் வளர்ந்து, சிங்கப்பூர் செல்லும்பொழுதெல்லாம்
கண்டு உரையாடும் குடும்பநட்பாக மலர்ந்துள்ளமை நினைத்து, மகிழ்கின்றேன்.
எம்.இலியாஸ்
அவர்கள் சிறந்த பேச்சாளர்; கட்டுரையாசிரியர்; பன்னூலாசிரியர்; அரசியல் தலைவர்களுடனும்,
தமிழறிஞர்களுடனும் நெருங்கிப் பழகுபவர்; இளையவர்களையும் முதியவர்களையும் ஒருசேரப் போற்றும்
உயர்ந்த உள்ளத்தினர். அனைவருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர்.
சிங்கப்பூர்
அதிபராக விளங்கிய மாண்பமை எஸ்.ஆர். நாதன் அவர்களின் அன்பைப் பெற்றவர். தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்களின் உள்ளம் நிறைந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர். கவிக்கோ, நாகூர் ஹனிபா உள்ளிட்ட பெருமக்களின் தொடர்பைப் போற்றி மதித்தவர்.
சிங்கப்பூர்
செல்லும் தமிழ் ஆர்வலர்களுக்கு நிழல்தரும் மரமாகவும், பயன்தரும் மரமாகவும் விளங்கும்
பெருந்தகையாளர்.
திருமுல்லைவாசலைப்
பிறப்பிடமாகக் கொண்ட அண்ணன் எம்.இலியாஸ் அவர்கள் தமிழகத்தையும் சிங்கப்பூரையும் இணைக்கும்
தமிழ்ப்பாலமாக விளங்குபவர். இவரின் செம்மொழி இதழ்ப்பணியும், தமிழவேள் கோ.சாரங்கபாணியாரை
முன்னிலைப்படுத்திச் செயல்படும் செயல்பாடுகளும், சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளுக்குத்
துணைநிற்கும் இவரின் பெரும்பண்பும் இவருக்கு நிலைத்த புகழைத் தரும். அண்ண! சுற்றமும்
நட்பும் சூழ, நீடு வாழி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக