நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 23 ஜூலை, 2018

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு!


முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

 மதுரை இலக்கிய நிகழ்வு நிறைவுற்றதும், தானி ஒன்றில் ஏறி அமர்ந்து தொடர்வண்டி நிலையம் நோக்கி விரைந்தேன். இரவு 11 மணிக்குத் தொடர்வண்டி. 10.45 மணிக்கு நிலையத்தை நெருங்கினேன். நான் பயணம் செய்யும் தொடர் வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்ற குறிப்பறிந்து மெதுவாக நடைமேடை நோக்கி முன்னேறினேன். ஆயிடை, அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். பழைய நினைவுகள் வரப்பெற்றவராக அன்புடன் நலம் வினவினார். இருபதாண்டுகளாக அவருடன் தொடர்பு உண்டு எனினும் இன்றுதான் மனந்திறந்து உரையாடுவதற்கு வாய்ப்பு அமைந்தது. அவர் பயணம் செய்யும் அதே தொடர்வண்டியில்தான் நானும் பயணம் செய்யவேண்டும். கூடுதல் சிறப்பு என்னவெனில் இருவரும் ஒரே பெட்டியில் பயணம் செய்ய உள்ளதை அறிந்ததும் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

 வண்டி அரை மணி நேரம் காலம் தாழ்ந்து வர உள்ளதை அவரிடம் சொல்லி, நடைமேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தோம். நான் கலந்துகொண்ட இலக்கிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தபொழுது, தாமும் இலக்கிய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றி, மீளும் செய்தியைத் தெரிவித்தார். எங்களின் உரையாடல் எழுத்தாளர்கள் - சமகால இலக்கியம் நோக்கி மெதுவாக நகர்ந்தது. என் உள்ளங்கவர்ந்த எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் பற்றியும், அவர்தம் இலக்கிய ஆளுமை குறித்தும் சில வினாக்களைத் தொடுத்தேன். மகிழ்ச்சியுடன் தம் எண்ணங்களைத் திருப்பூரார் பகிர்ந்துகொண்டார். "சாயங்கால மேகங்கள்" என்ற நா.பா.வின் படைப்பினைப் பற்றி எடுத்துரைத்து, சில வரிகளை நினைவூட்டினேன். ஊக்கமடைந்த திருப்பூரார் தமக்கும் நா.பா. வுக்குமான இலக்கிய உறவு பற்றி மனந்திறந்து பேசினார். நா.பா. வின் பிற புகழ்பெற்ற படைப்புகளை எனக்கு அறிமுகம் செய்தார். தாம் சுவைத்த நா.பா.வின் பாத்திரங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவர் குடும்பத்துள் ஒருவராக, உற்ற நண்பராக விளங்கிய கடந்த கால வாழ்க்கையை என்னுடன் உரிமையுடன் பகிர்ந்துகொண்டார். எங்களின் பேச்சு ஜெயகாந்தன் படைப்புகள் குறித்தும் அவரின் இலக்கிய வாழ்க்கை குறித்தும் நகர்ந்தது. நான் அறியாத, ஜெயகாந்தனின் படைப்பு நுட்பங்கள் பலவற்றைத் திருப்பூரார் எனக்கு அறிமுகம் செய்தார்.

 அறிவிப்பு ஒன்று ஒலித்தது. நாங்கள் பயணம் செய்யும் அனந்தபுரி விரைவு வண்டி மேலும் ஒரு மணி நேரம் காலம் தாழ்ந்து வரும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அருகில் இருந்த மக்கள் பலரும் சோர்வடைந்து, நின்ற கோலத்தைக் கிடந்த கோலமாக்கினர். தொடர்வண்டியின்  காலத்தாழ்ச்சி அறிந்து நானும் திருப்பூராரும் மகிழ்ச்சியுற்றோம். உரையாடல் தொடர்ந்தது. தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்தும் அவரின் படைப்பு நுட்பங்கள் குறித்தும் திருப்பூரார் எனக்கு ஒரு வகுப்பு எடுத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. தி.ஜானகிராமனைப் படித்து முடிக்க வேண்டும் என்று உந்துதலை அவரின் உரையாடல் எனக்கு ஏற்படுத்தியது. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி படைப்புகள் குறித்தும் பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். ஜெயமோகன் படைப்புகள் குறித்தும் உரையாடினோம்.

 திருப்பூரார் தம் தந்தையார் குறித்தும், அவரின் பணிநிலையால் பல ஊர்களில் படிக்க நேர்ந்தமை குறித்தும், குடும்பம் குறித்தும் பல செய்திகளை மனந்திறந்து பகிர்ந்துகொண்டார். சென்னையில் தாம் சந்தித்த இலக்கிய ஆளுமைகள் குறித்தும், அவர்களிடம் கற்றுக்கொண்ட உயர்பண்புகள் குறித்தும் ஓர் ஆசிரியர் மாணவனுக்கு எடுத்துரைப்பதுபோல் பொறுப்புடன் எனக்கு எடுத்துரைத்தார். திருப்பூராரை அடையாளம் கண்டுகொண்ட அவர் வாசகர்கள் சிலர் இடையில் புகுந்து வணக்கம் சொல்வதும், அவர்களை வாழ்த்தி வழினுப்புவதையும் திருப்பூரார் மேற்கொண்டார்.

 மு.வ. வின் இலக்கியப் படைப்புகள் பெருந்திரள் மக்களைச் சென்றடைந்தமையையும், பலர் அவர் நூல்களைப் படித்து மனம் மாற்றம் பெற்றனர் என்பதையும் எடுத்துரைத்த திருப்பூர் கிருஷ்ணன் மூத்த எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, கி. ரா. உள்ளிட்டவர்களின் இலக்கியச் சுவையூட்டும் படைப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

 எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி உள்ளிட்டவர்களின் படைப்பாளுமை மற்றும் பழகும் குணம் குறித்து அரிய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தாளர் அகிலன் தன் விருப்பம் ஒன்றை, நா.பா.விடம் எடுத்துரைக்க, அது அந்நாள் முதல்வர் எம்.ஜி. ஆர் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நூலாசிரியர் பலருக்கு உதவியாக இருந்தமையையும் நினைவூட்டினார். நா.பா.வின் துணிவும், இலக்கியச் செம்மாப்பும் எனக்குப் புலப்பட்டன.

 இரசிகமணி டி.கே.சி. யின் கம்பராமாயண ஆர்வம் குறித்து, யான் அறியாத பல சுவையூட்டும் நிகழ்வுகளை எடுத்துரைத்தார். கல்கி, இராஜாஜி உள்ளிட்டோரின் படைப்புகள், அவர்களின் இலக்கியப் பணிகளும் எங்களின் உரையாடலில் இடம்பெற்றன.

 சமகால எழுத்துகளை ஆர்வமுடன் கற்றுள்ள திருப்பூர் கிருஷ்ணன், சமகால எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய பேரனுபவம் வாய்த்தவராக விளங்குவதை அறிந்து வியப்புற்றேன். ஒரு தகவல் சுரங்கமாகவும், சமகால இலக்கியப் போக்குகளை அறிந்தவராகவும் விளங்கும் திருப்பூர் கிருஷ்ணன் ஓர் இலக்கியப் பல்கலைக்கழகமாக விளங்குவதை அறிந்து மனதார அவரை வணங்கினேன். இவர்போலும் எழுத்தாளர்கள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்புரைகள் நிகழ்த்தினால் கடந்த நூறாண்டுகளாகச் சிறந்த விளங்கிய படைப்பாளர்கள், படைப்புகள் குறித்த நல்ல அறிமுகம் மாணவர்களுக்குச் சென்று சேரும் என்பது என் நம்பிக்கை.
மு.இளங்கோவன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: