உத்தமம்
நிறுவனம் தனது பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர்
மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருப்பதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. உத்தமம் நிறுவனம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உலகெங்கிலும்
உள்ள தமிழர்களை இணைப்பதில் மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில்
பன்னிரண்டு மாநாடுகளைப் பல்வேறு நாடுகளில் நடத்தி உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைத்துள்ளமை
தமிழர்கள் அனைவரும் பெருமைப்படும் செய்தியாகும். தமிழகம்¸ சிங்கப்பூர்¸ மலேசியா, செர்மனி
மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்நிறுவனத்தின் மாநாடுகளை மிகவும் சிறப்பாக நடத்தி
உலகத் தமிழர்கள் அனைவரையும் இந்நாடுகளில் ஒருங்கிணைய வைத்துள்ளது.
உத்தமம் நிறுவனத்தின் பதின்மூன்றாவது தமிழ் இணைய
மாநாட்டைப் புதுவை மாநகரில் முதல் முறையாக நடத்துவதில் தமிழர்கள் நாம் அனைவரும் பெருமையடைய
வேண்டும்! மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன்
அவர்கள் பிறந்த இம்மண்ணில் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் மற்றும் இணையம் குறித்துத்
தங்களின் முயற்சிகளை எடுத்தியம்ப ஒருங்கிணைய உள்ளனர். இம்மாநாட்டைச் சிறப்புற நடத்த
பேராதரவு அளித்திட முன் வந்திருக்கும் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ந. அரங்கசாமி
அவர்களுக்கும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களுக்கும் பல்லவன்
கல்வி நிறுவனங்கள், அரசு சார், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் உத்தமம் நிறுவனத்தின்
நிறுவனர் பேராசிரியர் மு. அனந்தகிருட்டிணன் ஆகியோருக்கும், ஏனைய தமிழ் நல்லுள்ளங்களுக்கும்
உத்தமம் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த மாநாடு ஆய்வரங்கம்,
மக்கள் அரங்கம், கண்காட்சி என்ற மூன்று நிலைகளில் நடைபெறும். உலகின் பல பாகங்களிலிருந்தும்
300 மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். கட்டுரைச் சுருக்கம் மற்றும் கட்டுரைகளை
அனுப்பவேண்டிய கடைசி நாட்கள் குறித்த செய்திகளை உத்தமம் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில்
(http://home.infitt.org/) வெளியிடுவோம். மேலதிகச் செய்திகளுக்கு
உத்தமம் நிறுவனத்தின் தலைவர் வாசு அரங்கநாதனைத் தொடர்புகொள்ளலாம்.
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உத்தமத்தின் முன்னாள்
செயல் இயக்குநர் மணியம்(சிங்கப்பூர்), புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, முனைவர்
மு.இளங்கோவன் இந்தச் செய்திகளைத் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக