சனி, 25 ஜூலை, 2009
சிற்பி இலக்கிய விருது 2009
தமிழ்ப்பேராசிரியரும்,நாடறிந்த நல்ல கவிஞரும்,சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சிற்பி அவர்கள் ஆழமான தமிழ்ப்பற்றும் அழுத்தமான மொழிப்புலமையும் கொண்டவர்.செயல்திறமும் வினைத்திட்பமும் ஒருங்குபெற்ற இவர்கள் 1996 ஆம் ஆண்டு முதல் (தம் மணிவிழா ஆண்டிலிருந்து) தமிழ்ப்பாவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கிப் பாராட்டி வருகின்றார்.வாழும் காலத்தில் அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற சிற்பி ஐயாவின் உள்ளத்தைத் தமிழர்கள் நன்றியுடன் போற்றவேண்டும்.
அவ்வகையில் இதுவரை கவிக்கோ அப்துல் இரகுமான்(1996),த.பழமலய்(1997),சி.மணி
(1998),தேவதேவன்(1999),புவியரசு(2000),கவிஞர் பாலா(2001),கல்யாண்ஜி(2002), தமிழ்நாடன்(2003),தமிழன்பன்(2004),க.மீனாட்சி(2005),ஈழத்துக்கவிஞர் செயபாலன்(2006), ம.இலெ.தங்கப்பா(2007),சுகுமாரன்(2008) ஆகியோர் கவிதை இலக்கிய விருது பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர பல கவிஞர்கள் இலக்கியப் பரிசு பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு தமிழகத்தின் புரட்சிப் பாவலரான கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சியில் 26.07.2009 இல் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் மிகச்சிறந்த திருவிழாபோல் நடைபெறும் கவிதைத் திருவிழா இந்த ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சொல்ல இயலாத துன்பச்சூழல் காரணமாக மிக எளிமையாக நடைபெற உள்ளது.
சிற்பி இலக்கிய விருது(2009) விழா நிகழ்ச்சி நிரல்
இடம் என்.ஜி.எம்.கல்லூரி,பொள்ளாச்சி
நாள்: 26.07.2009
நேரம்: மாலை 4.30 மணி
தலைமை: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
வரவேற்புரை : சிற்பி பாலசுப்பிரமணியம்
சிறப்புரை: ஈரோடு தமிழன்பன்
பாராட்டுப் பெறுவோர் கவிஞர் இன்குலாப்
தொழிலதிபர் இயகோகா சுப்பிரமணியம்
அனைவரையும் சிற்பி அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.
ஈழம் என்னும் தலைப்பில் கவிஞர் சிற்பி வரைந்துள்ள கவிதையைக் கீழே கண்டு கொண்டாடுங்கள்.
என் மொழி பேசும் எவனும் உலகினில்
எனது சகோதரனே
எவன் அவன் பகைவன் எனக்கும் நிச்சயம்
அவன் பகையானவனே
வன்னிக்காடே முல்லைத்தீவே
வணங்காதத் தமிழ்மண்ணே
மன்னிப்பாய் நீ உனக்குதவா என்
வாழ்க்கை வெறும் மண்ணே
இனவெறி எருமை மிதித்துச் சிதைத்த
ஈழத்தின் ஆழத்தில்
வினைகள் விதைத்தவர் அறியட்டும் பழி
அறுவடையாகும் இனி
வேலி முகாம்களில் சித்திரவதைப்படும்
தமிழ்மகளே இது கேள்
காலம் சமைக்கும் உன் கண்ணீர் கொண்டு
விடுதலையின் போர்வாள்
யாழ்நூல் தந்த விபுலானந்தர்
நாவலர் உலவியமண்
பாழ்படுமோ அதன் வேரில் சொரிந்த
இரத்தம் உலர்ந்திடுமோ?
வேடிக்கை பார்த்துக் கைகளைக் கட்டிய
உலகின் மனச்சான்றே
நீடும் புயல் வரும் சிங்களம் நொறுங்கும்
நீச்சயம் காண்பாய் நீ
புதிய விண்மீனொன்று தெற்கில் முளைக்கும்
தடுக்கும் இருள் வீழும்
அதுவரை அதுவரை நண்பர்களே என்
இன்னொரு பெயர் ஈழம்.
- கவிஞர் சிற்பி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக