தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவியை மக்களுக்குச் செய்துவருகிறது. பரந்து கிடக்கும் உலக மக்களை இணைப்பதுடன் அவர்களுக்குப் பயன்படும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதில் முன்னிற்பது இணையமாகும்.இணையத்தில் ஆங்கிலமொழியில் தகவல்கள் பரிமாறும் நிலை தொடக்கத்தில் இருந்தது.அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தமிழ் எழுத்துருக்களைக் கண்டு பிடித்தனர். அந்த எழுத்துருக்கள் ஒரே சீர்மையாக இல்லாமல் ஒருவர் பயன்படுத்தும் எழுத்து வேறொருவரிடம் இல்லாததால் எழுத்துரு சிக்கல் எழுந்தது.எனவே ஒருங்குகுறி எழுத்தில் எழுத உதவும் எ-கலப்பை என்ற மென்பொருளைச் சேந்தமங்கலம் முகுந்தராசு கண்டுபிடித்த பிறகு எழுத்துரு சிக்கல் தீர்ந்து இன்று செய்திகளைத் தமிழில் தடையின்றிப் பரிமாற வழியேற்பட்டுள்ளது.
தமிழர்கள் இணையத்தைப் பயன்படுத்தி இணையப் பக்கங்களை(Web site) உருவாக்கித் தகவல்களைப் பரிமாறுவது போலவே இணையத்தின் வழியாக வலைப்பூ அமைத்துத் தகவல்களை, படைப்புகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
வலைப்பூ என்பது எழுத்துகள்,ஒலி,ஒளி வடிவக்கோப்புகள், ஓவியம், படங்கள் இவற்றை நாமே இணையம் வழியாகப் பதிந்து வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் இணைய சேவையாகும். இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள வலைப்பூக்களில் வெளியாகும் தகவல்களை உடனுக்குடன் திரட்டித்தரும் பணியைத் திரட்டிகள் செய்கின்றன. இத்திரட்டிகளில் தமிழ்மணம், தேன்கூடு http://www.thenkoodu.com/, தமிழ்வெளி,திரட்டி(புதுச்சேரி), தமிழ்க்கணிமை, டெக்னோரட்டி, வேர்ட்பிரசு, மாற்று என்னும் தளங்கள் குறிப்பிடத்தக்கன.இதில் தேன்கூடு தளம் அதன் பராமரிப்பாளர் இல்லாமையால் அண்மையில் செயல்படாமல் போனது. எஞ்சிய தளங்கள் உலகெங்கும் எழுதும் தமிழர்களின் வலைப்பதிவுகளைத் திரட்டித் தருகின்றன. திரட்டிகளைப் பற்றி அறியும் முன் அது வளர்ந்த வரலாற்றை அறிவதும் தேவை.
தமிழில் முதல் வலைப்பூ உருவாக்கியவர் கார்த்திகேயன் இராமசாமி அவர்களாவார். தமிழ்மணம் என்னும் திரட்டியை நடத்தும் இவர் இதன் நிறுவனச் செயலாளராகப் பணிபுரிகின்றார்.2003 சனவரி ஒன்றில் இவர் தம் முதல் வலைப்பூவை இட்டுள்ளார்.2003 இல் தமிழ் ஒருங்குகுறி எழுத்து அறிமுகம் ஆனதும் அனைவரும் வலைப்பூவில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர். தொடக்கத்தில் தானியங்கி எழுத்துருக்களில் வலைப்பதிவு இருந்தது.பின்னர் தரப்படுத்தப்பட்ட எழுத்துருக்களில் சிலர் பதிவிட்டனர். இதற்கு எழுத்துருக்கள் தரவிறக்கம் செய்ய வேண்டும்.ஒருங்குகுறி பயன்பாட்டிற்கு வந்த பிறகு வலைப்பதிவின் வளர்ச்சி அதிகமானது.மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குத் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் பணியை வலைப்பூ செய்தது.
வலைப்பூவில் தொடக்க காலத்தில் தீவிரமாக இயங்கியவர்களில் நா.கண்ணன்,கனடா வெங்கட், மாலன், மதி கந்தசாமி,காசி,நா.கணேசன், முகுந்து, பத்திரி, இராம.கி,விருபா,இரமணீதரன் உள்ளிட்டவர்கள் (இப்பட்டியல் முழுமையானதல்ல.விடுப்பட்ட பெயர்களைத் தெரிவிக்க இணைத்துக் கொள்வேன்) குறிப்பிடத்தகுந்தவர்கள்.
தொடக்க காலத்தில் வலைப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் உள்ளிடப்பெற்ற செய்திகள் தரமுடையனவாக விளங்கின.வலைப்பதிவுகளின் எண்ணிக்கை பெருகிய பிறகு பல்வேறு தரமற்ற பதிவர்களை வலைப்பதிவு உண்டாக்கிவிட்டது. மொக்கைப்பதிவு, கும்மிப்பதிவு,கடலைப்பதிவு எனப் பல வகைப்பட்ட பதிவர்கள் தோன்றினர். இவர்கள் தங்கள் பக்கம் படிப்பாளிகளை இழுக்கப் பல்வேறு தந்திரங்களைக் கையாண்டனர். திரைப்படம்,திரைப்பட நடிகர்கள்,பாலியல் சார்ந்த செய்திகளை உள்ளிட்டு ஒவ்வொரு வகையில் படிப்பாளிகளைத் தங்கள் பக்கம் இழுக்க நினைத்தனர்.
தொடக்கத்தில் குறைந்த அளவில் பதிவுகள் இருந்ததால் யார் யார் எழுதுகின்றனர் என நண்பர்கள் வழியாக அறிந்து அவ்வாறு எழுதுபவர்களின் பட்டியலை ஒன்றுதிரட்டி மதி கந்தசாமி அவர்கள் தமிழ் வலைப்பதிவர்களை 2003 சூன் மாதம் பட்டியலிட்டுக் காட்டினார். http://tamilblogs.blogspot.com இப்பட்டியல் தமிழ் வலைப்பதிவுக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்தது. இப்பட்டியலின் துணைகொண்டு தக்க படைப்புகளை வெளியிடுபவர்களை அடையாளம் கண்டு, படிக்க முடிந்தது.என்றாலும் அவர்களின் படைப்புகள் வெளியான உடன் படிக்க முடியாமல் காலம் தாழ்ந்தே படிக்க முடிந்தது.
இப்பட்டியலில் உள்ளவர்கள் வெளியிடும் படைப்புகளை உடனுக்குடன் காட்டும் படியான திரட்டிகளை உருவாக்கும் முயற்சி இக்கால கட்டத்தில் இருந்தது.இந்நிலையில் எ.கலப்பையைக் கண்டுபிடித்த முகுந்து அவர்கள் நியூக்ளியசு என்னும் வலைப்பதிவுக்கு உதவும் மென்பொருளைத் தமிழ்ப்படுத்த வேண்டிய தம் விருப்பத்தை வலைப்பதிவில் அறிவிக்க அமெரிக்காவில் பணிபுரிந்துகொண்டிருந்த காசி ஆறுமுகம் என்னும் வடிவமைப்புப் பொறியாளர் நியூக்ளியசைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
பல மணிநேரம் உழைத்து நியூக்ளியசைத் தமிழ்ப்படுத்தும் முயற்சியில் இருந்தபொழுது அதனைச் சோதித்துப் பார்க்கும் தளம் ஒன்று தேவைப்பட்டது.அதற்காக உருவாகியதுதான் தமிழ்மணம்.காம் என்ற தளமாகும்.தமிழ்மணம் தளம் உருவானதும் பலரும் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள் உடனுக்குடன் திரட்டிக் காட்டியது.ஓரிடத்திற்கு வந்தால் உலகம் முழுவதும் எழுதப்படும் பதிவுகளை உடனுக்குடன் பார்க்கும் வாய்ப்பினைக் காசி ஆறுமுகம் உருவாக்கினார் படிப்படியாகத் தமிழ்மணம் வளர்ச்சிபெற்றுப் பல மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டு அனைவராலும் பாராட்டும்படியான தளமாக உருப்பெற்றது. இன்று தமிழ்மணத்தை அறியாமல் பதிவில் ஈடுபடமுடியாது என்ற அளவில் அத் தளம் உலகம் முழுவதும் உள்ள வலைப்பதிவர்கள் அறிந்த தளமாக மாறியுள்ளது.தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட பிறமொழியினருக்கும் தமிழ்மணம் தன் சேவையை அளிக்கிறது. தமிழ்மணத்தில் இன்று 5071 பதிவர்கள் தங்கள் பதிவுகளை இணைத்து எழுதி வருகின்றனர் (25.05.2009).
தமிழ்மணத்தின் சேவை தமிழ் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உணர்ந்த எழுத்தாளர் மாலன் தம் திசைகள் இதழில் ஆசிரிய உரை எழுதி ஊக்கப்படுத்தினார்.
தமிழ்மணத்தைத் தொடர்ந்து தேன்கூடு என்னும் திரட்டி உருவானது.மிகச் சிறப்பாகச் செயல்பட்ட தேன்கூடு அதன் பராமரிப்பாளர் இல்லாமல் செயல்படாமல் போனது தமிழ் இணைய உலகிற்கு இழப்பேயாகும்.தேன்கூட்டை அடுத்துத் தமிழ்வெளி என்னும் திரட்டி தோற்றம் கண்டது.தமிழ் வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் பணியை அதுவும் மிகச்சிறப்பாகச் செய்து வருகிறது. தமிழ்வெளியை அடுத்துப் புதுச்சேரியிலிருந்து வெங்கடேசு என்னும் கணிப்பொறி வல்லுநரால் திரட்டி.காம் என்னும் பெயரில் திரட்டி ஒன்று உருவாக்கபட்டது.குறுகிய காலத்திலேயே உலகில் அனைவரின் கவனதையும் இத்திரட்டி பெற்றது.இதில் இணைவதற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தாலும் தரமான சற்றொப்ப 2000 பேர் எழுதும் பதிவுகளை இது திரட்டுகிறது.
தமிழ்மணத்தின் சிறப்பு. http://tamilmanam.net/
தமிழ்மணம் உலகில் தமிழுக்கெனத் தோன்றிய முதல் திரட்டி.இதில் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த 5071 பேர் எழுதும் பதிவுகள் திரட்டப்படுகின்றன .289 பேர் ஒவ்வொரு நாளும் தங்கள் பதிவை இணைக்கின்றனர்.1934 பின்னூட்டங்கள் இடப்படுவது ஒவ்வொரு நாளும் இதன் வழியாக அறியமுடிகிறது(25.05.09).
முகப்பு,இடுகைகள்,பதிவுகள்,"ம"திரட்டி,பூக்கூடை,தமிழ்விழி,கேளிர்,மன்றம்,உதவி / தகவல்,செய்திகள் என முகப்பில் வகைப்பாடு உள்ளது.அவை தவிர அறிவிப்புகள், சூடான இடுகைகள்,வாசகர் பரிந்துரை,பதிவுகள் பற்றிய விளக்கம், பின்னூட்டம்,பதிவர்கள் எழுதிய நூல் அறிமுகம்,பழைய பதிவுகளைக் காணும் வசதி.பழைய பின்னூட்டம் காணும் வசதி எனப் பல வசதிகளை இத்திரட்டி பெற்றுள்ளது.தமிழ்மென்பொருள்களைத் தரவிறக்கிக் கொள்ளும் வகையில் முகவரி தரப்பட்டுள்ளது. இடுகைகளை இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.தமிழ் மணத்தில் நம் வலைப்பூவை இணைக்கும் வசதியும் உள்ளது.நட்சத்திர இடுகைகள் என்னும் பகுப்பில் ஒவ்வொரு கிழமையும் ஒரு பதிவர் முதன்மைப்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படுகிறார்.அவர் பதிவும் அறிமுகம் செய்யப்படுகிறது.
தமிழ்வெளி திரட்டி அறிமுகம் http://www.tamilveli.com/
தமிழ்வெளி திரட்டி 1048 பேர் எழுதும் பதிவுகளைத் திரட்டுகிறது(28.12.08). முகப்பு, பதிவுகள், இணைக்க, தொடர்புக்கு என்னும் தலைப்புகளில் இதன் சேவை அமைகிறது.
முகப்புப் பக்கத்தில் இணைப்பதற்குரிய வசதி எளிமைப்படுத்தப்பட்டு சேவைக்குத் தயாராக உள்ளது. அதன் கீழே அண்மையில் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் பேச்சுகள் ஒலியுடன் கேட்க வசதிகள் உள்ளன.அவற்றைச் சொடுக்கிப் பேச்சினைக் கேட்கலாம்.அவ்வகையில் கி.வீரமணி, மருத்துவர் ச.இராமதாசு,தொல்.திருமாவளவன், கொளத்தூர் மணி, தா.பாண்டியன் உள்ளிட்டவர்களின் பேச்சினைக் கேட்கும் வசதி உள்ளது.
அதன் கீழே நிகழ்வுகள் என்ற தலைப்பில் அண்மைய நிகழ்வுகள் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது.அடுத்து வலைப்பதிவர்கள் இணைத்துள்ள செய்திகள்,இணைத்தவரின் விவரம் காணப்படுகின்றது. அதனை அடுத்து பதிவுகள் குறித்த பின்னூட்டங்கள், அதிகம் பார்வையிட்ட பக்கம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.திரைப்பா ஆசிரியர் அறிவமதி அவர்களின் மண் இதழ் பார்வைக்கு உள்ளது.சுப.வீ அவர்களின் நேர்காணல் உள்ளது.
பதிவுகள் என்ற பகுப்பில் இன்றைய பதிவுகள் முந்தைய பதிவுகள் உள்ளன. பதிவுகளில் தேடென்னும் வசதி உள்ளது.நமக்குத் தேவையானவற்றைச் சொடுக்கி நாம் பயன்பெறலாம். இன்றைய பதிவுகளைச் சொடுக்கினால் தமிழ் ஆங்கிலத்தில் பதியப்பட்ட தலைப்புகளைக் காட்டும். இதில் பதிவுத்தலைப்பு,பதிவர் பெயர்,உள்ளடக்கம்(தொடர் முழுமையல்ல) உள்ளன.முந்தயை நாள்களில் சென்று நாள்,கிழமை குறிப்பிட்டுத் தேட வசதி உள்ளது.
இணைக்க என்னும் பகுதிக்குச் செல்ல, சேர்க்கை நிலை என்னும் பகுதி இருக்கும்.இதில் விதிமுறைகளுக்கு உட்பட்டு இணைக்கவேண்டும்.அண்மையில் இணைத்தவர்கள், காத்திருப்போர் பட்டியல் காணப்படும்.தொடர்புக்கு என்னும் பகுதியை அழுத்தித் தளப் பராமரிப்பாளருக்குத் தகவல் தர நினைத்தால் தரலாம்.
இணைக்கும் பதிவுகள் உடனே உலகம் முழுவதும் தெரிந்துவிடும் என்பதால் தக்க பதிவர்களா? எனப் பார்த்து அவர்களின் முந்தைய பதிவுகளை ஆராய்ந்தே அவர்களை இணைத்துக் கொள்கின்றனர். தமிழ்மணம் திரட்டி அதனால்தான் மூன்று பதிவுகளை இணைத்த பிறகே இணைக்க வேண்டுகிறது.அந்தப் பதிவுகளை வைத்தே அவர்கள் நல்ல பதிவிடுபவர்கள்தான் என்று முடிவு செய்து இணைப்பர்.திரட்டி.காம் தளத்திற்கு இணைக்க பலர் வேண்டி விண்ணப்பித்தாலும் தரமாக எழுதுபவர்களாக இருந்தால்தான் அதன் நிருவாகி இணைப்பார்.பொழுதுபோக்கிகள், கவனத்தை ஈர்க்கும் வேலையற்றவர்களின் பதிவுகளை திரட்டி.காம் இணைப்பதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளது.தமிழ்வெளியில் இணைப்பவர்கள் படத்துடன் பதிவுகளை இணைத்தால் அப்படம் தெரியும்படி வசதி உள்ளது.முன்பு திரட்டி.காம் இந்த வசதியைச் செய்திருந்தது.
திரட்டி.காம் அறிமுகம் http://www.thiratti.com/
திரட்டி.காம் என்னும் திரட்டி நாளும் புதுமைகளைச் செய்து தன் தளத்தைத் தொழில்நுட்பம் கொண்ட தளம் என்று அனைவரையும் நினைக்கும்படி செய்கிறது.பதிவர்களின் படத்தையும் அவர்கள் வெளியிடும் பதிவுப் படங்களையும் தொடக்கத்தில் காட்டிய திரட்டி.காம் தளம் இப்பொழுது தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துப் பார்வையாளருக்கு உதவுகிறது.இணையக் குழுக்கள் வெளியிடும் தகவல்களையும் இத்தளம் திரட்டுகிறது.
வலைப்பதிவுகள் திரட்டும் இத்தளம் பின்னூட்டங்களைத் திரட்டுவது இல்லை.மேலும் பழைய பதிவுகளைத் தேடிப் பார்க்கும் வசதி இத்தளத்தில் இல்லை.இன்று முழுவதும் பதியப்பெற்ற பதிவுகளை ஒருவர் திரட்டி.காம் தளத்தில் பார்வையிட நினைத்தால் பார்க்க வசதி இல்லை.தளத்தில் உள்ள தகவல்களை மட்டும்தான் பார்க்கமுடியும்.தளத்தில் விளம்பரங்களும் உள்ளன.
மருத்துவம்,பங்கு வர்த்தகம்,திரைப்படம்,கவிதை,சமையல்,அரசியல்,தமிழில் புகைப்படக்கலை, தொடர்பிற்கு, எனும் தலைப்புகளில் செய்திகள் உள்ளன.மேற்கண்ட துறை சார்ந்த சொற்கள் எந்தப் பக்கத்தில் வெளியானாலும் தானே வகைப்படுத்தி இத்தளம் ஓரிடத்தில் தரும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்கணிமை http://tamil.kanimai.com/
தமிழ்க்கணிமை என்னும் பெயரில் ஒருதளம் தமிழில் வெளியாகும் பதிவுகளைத் திரட்டித் தருகிறது. அறிமுகம், பதிவுகள்,திரட்டிகள்,திரட்டுகள், செய்திகள், மின்னிதழ்கள், பிறமொழிகள் என்னும் பகுப்பு உள்ளது.நமக்குத் தேவையான பகுப்பிற்குச் சென்று தேவையான விவரங்களைப் பெறலாம். பிறமொழி என்ற பகுப்பில் ஆங்கிலம்,கன்னடம், தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. புகழ்பெற்ற தளங்கள் வெளியிடும் செய்திகளையும் தமிழ்க்கணிமை திரட்டித் தருகின்றது. குறிப்பிடத் தகுந்த திரட்டி இது.இதனை நம் பதிவில் இணைத்துக்கொள்ள வசதி உள்ளது.
டெக்னோரட்டி http://technorati.com/
டெக்னோரட்டி என்னும் தளம் தமிழ்ப்பதிவுகளைத் திரட்டித் தருவது. புகைப்படம், காண்பொளி போன்றவற்றையும் திரட்டி வழங்குகிறது.தமிழ்ப்பதிவுகள் என்ற பகுப்பில் தமிழில் பதிவாகும் பதிவுகளைத் திரட்டித் தருகிறது.
வேர்ட்பிரசு http://botd.wordpress.com/?lang=ta
வேர்டுபிரசு நிறவனமும் தமிழில் வெளியாகும் பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டியை வைத்துள்ளது. இதில் பதிவு செய்துகொண்டால் நம் பதிவுகளைத் திரட்டி வெளியுலகிற்கு வழங்கும். இவ்வகையில் இந்தத் திரட்டியில் உலகின் பலமொழிகளில் எழுதப்படும் வலைப்பதிவுகள் திரட்டும் வசதியைப் பெற்றுள்ளது.அதில் தமிழும் ஒன்று.
மாற்று http://www.maatru.net/
மாற்று என்னும் தளம் திரட்டிகளில் தனித்துவமான தளமாகப் புலப்படுகிறது.இதனை ஒரு குழுவினர் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு நிருவகிக்கின்றனர். இதில் பதிவர்களாகி நாம் இணைக்கத் தேவையில்லை. குழுவினருக்குத் தக்க பதிவாகத் தெரியும் பதிவுகளை மாற்றுத் தளம் வழி வெளியுலகிற்குக் காட்சிப்படுத்துகின்றனர்.தரமான தகவல்களைப் பெற நினைப்பவர்கள் இத் தளத்தை நாடலாம்.
சங்கமம் http://www.tamil.blogkut.com/
சங்கமம் என்ற பெயரில் ஒரு திரட்டி உள்ளது.பதிவுகள் செய்திகள் என்ற இரண்டு பகுப்பில் செய்திகள் உள்ளன.செய்திகள் பகுப்பில் படங்கள் உள்ளன.தகவல்களை உடனுக்குடன் திரட்டிக்காட்டுவதால் இதுவும் குறிப்பிடத்தக்க திரட்டியாக உள்ளது.
தமிழீழத்திரட்டி http://www.pageflakes.com/rishanthan/24236768/
தமிழீழம் சார்ந்தவர்கள் எழுதும் பதிவுகளைத் திரட்டித் தருவதை நோக்கமாகக் கொண்ட தளமாக இது செயல்படுகிறது.
இலங்கை வலைப்பதிவர் திரட்டி http://www.pageflakes.com/mayunathan
இலங்கைப் பதிவர்கள் எழுதும் பதிவுகளையும் இணையத்தில் வெளிவரும் செய்திகளையும் தாங்கி இலங்கைப்பதிவர் திரட்டி வெளிவருகிறது.சிறந்த திரட்டியாக இது உள்ளது.
திரட்டிகள் உலகெங்கும் எழுதப்படும் வலைப்பதிவுகளைத் திரட்டித்தரும் நல்ல நோக்கத்தில் செயல்படுகின்றன.தேவையான நெறிமுறைகள்,தொழில் நுட்பங்களைப் பெற்றுள்ளதும் வரவேற்கத் தக்கதே.பதிவர்கள் தங்களுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் செய்திகளை வெளியிட்டு இத்திரட்டிகள் வழி வெளியுலகிற்கு அறிவிக்கவேண்டும்.
இத்திரட்டிகளைத் தக்க வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இதனை விடுத்து அனைவரின் கவனத்தை இழுக்கப் பாலியல் செய்திகளை வெளியிடுவது, பொய்ச்செய்திகளை வெளியிடுவது, தனிமனித தாக்குதல் நிகழ்த்துவது தேவையற்றது. உங்கள் படைப்புகள் வழியாக உங்கள் மன உணர்வையும் அறிவாற்றலையும் உலகம் உற்று நோக்க இத்திரட்டிகள் வழிவகுக்கின்றன.
(23.05.2009 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேராசிரியர் சிறீகுமார் தலைமையில் படிக்கப்பெற்ற கட்டுரை.இதனை எடுத்தாள விரும்புவோர் உரிய இசைவு பெற வேண்டுகிறேன்.ஐந்து மாதங்களுக்கு முன் உருவாக்கப்பெற்ற இக்கட்டுரையில் தேவையானால் புதிய விளக்கம்(அப்டேட்) இணைக்க அணியமாக உள்ளேன்.அறிந்தோர் அறிவிக்கலாம். ஆய்வுக்கோவை முதல் தொகுயில் இடம்பெற்றுள்ளது.)
10 கருத்துகள்:
தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி குறித்த தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிஅளித்துள்ளீர்கள்;
பாராட்டுக்குரிய முயற்சி.
பதிவர்களின் கருத்துகள் நிழல்வெளியோடு நின்றுவிடாமல்
உலக அரங்கில் ஆக்கபூர்வமான
மாற்றங்களை ஏற்படுத்துமளவு வலிமை மிக்கதாக ஆக வேண்டும்; அதற்கான வழிவகைகள் தேடுவது அடுத்தகட்ட முயற்சியாக அமைதல் நன்று.
தேவ்
தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி குறித்த தகவல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிஅளித்துள்ளீர்கள்;
பாராட்டுக்குரிய முயற்சி.
பதிவர்களின் கருத்துகள் நிழல்வெளியோடு நின்றுவிடாமல்
உலக அரங்கில் ஆக்கபூர்வமான
மாற்றங்களை ஏற்படுத்துமளவு வலிமை மிக்கதாக ஆக வேண்டும்; அதற்கான வழிவகைகள் தேடுவது அடுத்தகட்ட முயற்சியாக அமைதல் நன்று.
தேவ்
//மேலும் பழைய பதிவுகளைத் தேடிப் பார்க்கும் வசதி இத்தளத்தில் இல்லை.இன்று முழுவதும் பதியப்பெற்ற பதிவுகளை ஒருவர் திரட்டி.காம் தளத்தில் பார்வையிட நினைத்தால் பார்க்க வசதி இல்லை//
இந்த வசதிகள் அனைத்தும் திரட்டி.காம் தளத்தில் உள்ளதே! நீங்கள் பார்க்கவில்லையா?
வெங்கடேஷ்
அன்புள்ள ஐயா வணக்கம்
ஆறு திங்களுக்கு முன்பு இந்தக் கட்டுரை வரையப்பட்டது. அன்றைய நாளில் இந்த வசதி இல்லை என்பதைப் பதிந்திருந்தேன்.இன்று உள்ளதைக் கண்டு மகிழ்கிறேன். நாளும் புதுப்பொலிவுடன் மலரும் திரட்டிக்கு என் வாழ்த்துகள்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
புதுச்சேரி
You Are Posting Really Great Articles... Keep It Up...
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களுடன் ஒன்றாக கலந்திடுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
மிக அருமையான கட்டுரை.
வாழ்த்துக்கள்
--
தமிழ் வலையுலகின் பயணத்தை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள்
நன்றி
என்னைப் பொருத்தவரை 5071 வலைப்பூக்கள் - ஒருவரே 10 வலைப்பூக்கள் வரை வைத்துள்ளனர். நானே 5+.
நாமக்கல் சிபி அவரும், அன்புடன் அருணா, கார்த்திகேயன், ரிஷான் ஷெரீஃப் - இப்படி ஒவ்வொருவரும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளோம். ஆதலால் என் கணிப்புப் படி 2000+ பதிவர்களும், 5071 வலைப்பூக்களும் இருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும். நன்றி
//தமிழ்மணத்தில் இன்று 5071 பதிவர்கள் தங்கள் பதிவுகளை
இணைத்து எழுதி வருகின்றனர் (25.05.2009).
ஒருவரே பல பெயரில் வலைப்பூ வைத்துள்ளனர் என்பது உண்மை என்பதை அறிவேன்.ஆனால் யாருக்கு எத்தனை வலைப்பதிவு என்பதைக் கணக்கிட இயலாது.தமிழ் மணத்தில் இணைக்கப்பெற்ற வலைப்பூக்களின் எண்ணிக்கை என்று தொடர் இருப்பின் சரியாக இருந்திருக்கும்.
அன்புள்ள
மு.இளங்கோவன்
திரட்டிகள் குறித்த நல்ல அறிமுகக் கட்டுரை. ஆய்வுக்கோவைத் தொகுதியிலும் ஆவணம் ஆனது சிறப்பான செய்தி.
’அப்டேட்டிங்’ என்னும் ஆங்கிலச்சொற்கு நேராக ‘இற்றைப்படுத்தல்’ என்பதுண்டு.
முனைவர் அவர்களுக்கு,
திரட்டிகள் குறித்த தெளிவான பதிவு. நன்றி.
ஸ்ரீ....
கருத்துரையிடுக